இது தமிழ் ⚡ AMP

சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

By Dinesh R | Mar 02, 2022

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை பிரியங்கா மோகன், ”படப்பிடிப்பின் முதல் நாளே காதல் காட்சி என்பதால் மிகுந்த தயக்கத்துடன் இருந்தேன். சூர்யா சார் இயல்பாகப் பேசி அந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க உதவினார். அவர் ‘நடிப்பு நாயகன்’ என்பதால், நெருக்கமான காட்சிகளிலும் எளிதாக நடிக்க கற்றுக் கொடுத்தார்” என்றார்.

நடிகர் சூர்யா, “இந்தப் படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்காவிடம், ‘காக்க காக்க’ படத்தைப் பார்த்த போது உங்கள் வயது என்ன எனக் கேட்டேன். அவர் ‘மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்’ என்றார். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய ரசிகையாக இருந்த பெண், தற்போது எனக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

நடிகர் சத்யராஜ், ”நான் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து எந்த நாயகனுக்கும், படத்தின் நாயகி பட்டம் வழங்கியதில்லை. ஆனால் சூர்யா போன்ற அழகான நாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை பிரியங்கா மோகன், ‘நடிப்பு நாயகன்’ என பட்டம் கொடுத்திருக்கிறார். நானும் இதுவரை ஏராளமான நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இது போன்ற பட்டத்தை எனக்கு வழங்கியதில்லை. ஆனால் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்களுக்குப் பட்டத்தை வழங்கியதைப் பார்த்திருக்கிறேன். ஏராளமான சுவர்களில் ‘வள்ளல் சூர்யா’ என்று எழுதி இருப்பார்கள். எங்கள் வீட்டுப்பிள்ளை சூர்யாவிற்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்” என்றார்.