இது தமிழ் ⚡ AMP

Sweety Naughty Crazy விமர்சனம்

By Dinesh R | Feb 13, 2026

இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய கலகலப்பான 18+ படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவற்றை யாரும் தங்கள் கனவிலும் படைப்பிலும் கூட மீறிவிடக்கூடாது என நினைக்கும் பூமர்ஸ்களின் ரத்தக்கொதிப்பை எகிற வைக்கும் கதைக்கருவைக் கொண்ட படம். போடுவது, ஓட்டுவது, ஏறுவது என்ற வார்த்தை விளையாட்டுகளைப் பயன்படுத்தியே கலகலக்க வைத்தாலும், குடும்பத்திற்குள்ளான தகாப்புணர்ச்சியை (incest) நகைச்சுவைக்கு உட்படுத்தியுள்ளது சிறு நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜசேகர். G, பார்வையாளர்களோடு அழகாகக் கண்ணாமூச்சி ஆடியுள்ளார். அந்நியோன்யமான தருணங்களை உருவாக்கிக் காட்சியைக் கத்தரித்து விடுகிறார். ‘இருக்குன்னு நினைச்சா இருக்கும், இல்லைன்னு நினைச்சா இல்லை’ என்பதாகப் பார்வையாளர்களின் கற்பனைக்குச் சாமர்த்தியமாக விட்டு விடுகிறார்.

தமிழ் இலக்கியத்தில், தன்னிலும் வயது முதிர்ந்த பெண்ணை விரும்பும் ஆணின் நிலையைச் சொல்லும் பொருந்தாக் காமமாகிய ‘அகப்பொருள் பெருந்திணை’, தலைவன் பிற பெண்களை நாடும் சிறுமையான ‘குறுங்கலி’, அறம் பிறழ்ந்து ஒழுகும் காமமான ‘குற்றிசை’ போன்றவை உள்ளன. இவை ஏதோ இன்று முளைத்த புதிய சமூக அலங்கோலம் என வீண் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. மேலும், படம் இத்தகைய சமூக சிக்கல்களுக்குள் போகாமல் பார்ப்பவரின் கற்பனையை மட்டும் அனுப்பி வைத்து ‘டீஸ்’ செய்கிறது.

படத்தின் நாயகனான சிவா, காதல் வயப்படும் முன், ட்யூஷன் மிஸ் நந்தினியை முத்தமிட்டு விடுகிறான். இன்னொரு சந்தர்ப்பத்தில், சிவாவின் தொண்டையில் உணவு சிக்கிக் கொள்ளும்பொழுது ஷைலஜா எனும் பெண்மணி, அவனைப் பின்னால் இருந்து கட்டிப் பிடித்திடித்துக் காப்பாற்றுகிறார். இந்த இரண்டு நிகழ்வுகளையும் தனது காதலி அனிதாவிடம் சொல்லி அழுகிறான். ஊடலுக்குப் பின் சிவாவை மன்னித்து அனிதா திருமணமும் செய்து கொள்கிறாள். எதிர்பாராத விதமாக, சிவா மீண்டும் நந்தினியையும் ஷைலஜாவையும் தன் வாழ்க்கையில் பார்க்க நேரிடுகிறது. பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை.

தெலுங்கு நடிகர் ஆலி வரும் காட்சிகள், அடல்ட் காமெடியில் இருந்து விலகி, அவரது திறன்பட்ட நடிப்பால் படத்தின் நகைச்சுவையை இயல்பானதாகத் தூக்கி நிறுத்துகிறது. அவரது அனுபவம் மிக்க நடிப்பிற்கு முன், சத்யனும், தம்பி ராமையாவும் பொலிவிழந்து விடுகின்றனர். எனினும், ஒரே வீட்டிற்குள் தேக்கமடைந்து விடும் படத்தின் இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துவது இவர்கள் இருவரே! மனைவி இருந்தும் கபிகபிக்கு ஏங்குபவர்களாகவும், நாயகன் மீது சந்தேகம் கொள்பவர்களாகவும் வருகின்றனர். அவர்களது ஏக்கமும் சந்தேகமும்தான் இரண்டாம் பாதி நகைச்சுவைக்கும் நெருடலுக்கும் காரணமாகின்றன.

கதாநாயகியின் அக்காவாக இனியா நடித்துள்ளார். C. விஜய ஸ்ரீ-யின் கேமரா கோணங்கள் பெரும்பாலும் இவர் மீதும், இனியா வீட்டு வேலைக்காரி மீதுமே மையம் கொண்டுள்ளது. சுந்தரா ட்ராவல்ஸ் நாயகியான ராதா, கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளார் (இப்படத்துடன் வெளியான பூக்கியிலும், நாயகியின் அம்மா பாத்திரத்தை ஏற்றுள்ளார்). இனியா அளவுக்கு, கதையும் கேமராவும் இவரை 18+ க்கு இரண்டாம் பாதியில் பயன்படுத்திக் கொள்ளாமல் ஆறுதல் அளிக்கின்றன. அதே சமயம், கதையின் ஓட்டத்தில் பார்வையாளர்களை நன்றாக டீஸ் செய்ய வைத்து நேர்த்தியாய்ச் சமாளித்துள்ளார் இயக்குநர்.

நாயகி அனிதாவாக ஸ்ரீஜிதா கோஷ் நடித்துள்ளார். முதற்பாதியில், கதையின் கலகலப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார். இரண்டாம் காட்சியில், மற்றவர்கள் ஸ்கோர் செய்ய இவர் திரையில் வந்து மட்டுமே செல்கிறார். படத்தின் கலகலப்பிற்கு, படம் தொட்டுள்ள கரு மட்டும் காரணமில்லை. பிரதான காரணமாக, நாயகன் சிவாவாக நடித்துள்ள த்ரிகுண்-ஐத்தான் சொல்லவேண்டும். மிகப் பிரமாதமாகப் படத்தை முன்னகர்த்திச் சென்றுள்ளார்.

முதற்பாதியில் தெறிக்க விட்டு, ஓர் அட்டகாசமான இடைவேளையை வைத்து, இரண்டாம் பாதியில் சமாளித்து, ஒரு கேள்வியை ‘எழுப்பி’த் தொடரும் ‘போட்டு’விடுகிறார்.