இது தமிழ் ⚡ AMP

தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

By Dinesh R | Nov 30, 2025

என்றுமே மென் சோக காதல் கதைகள், மனதைப் பாதிக்கும் காதல் கதைகள் தான் காலம் கடந்து நிற்கும். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களுமே காதல் கதைகள்தான். முந்தைய இரண்டு காதல் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்தக் கூட்டணியின் மூன்றாவது படைப்பான “தேரே இஷ்க் மே” படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தின் கதைப்படி, தனுஷ் எப்போதும் கோபத்திலேயே இருக்கும் இளைஞன். வன்முறை அவன் வாழ்வில் ப்ர் அங்கமாகவே மாறிப் போயிருக்கிறது. க்ரித்தி சனோன், தனுஷ் படிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் சைக்காலஜியில் ஆய்வுக்கட்டுரை எழுதி வருகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாகப் பயணிக்கும் சூழல் வருகிறது. தனுஷ் க்ரித்தி மீது காதல் கொள்கிறார். க்ரித்திக்குக் காதல் இருந்தாலும் அவரின் கோபமும் வன்முறையும் பிடிக்கவில்லை. அவரை எப்படியாவது மாற்ற முடியாதா என ஒரு முயற்சி எடுக்கிறார். அந்த முயற்சியின் விளைவுகள் இருவர் வாழ்விலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அவர்கள் வாழ்க்கை என்னானது என்பதை மிக ஆழமாகச் சொல்லுகிறது ‘தேரே இஷ்க் மே’. இந்தத் தலைப்பு, ‘உனது காதலில் (In your love)’ எனப் பொருள்படும்.

மீண்டும் ஒரு காதல் கதையில் ஆனால் கொஞ்சம் வித்தியாசமான சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பின் எல்லையை தொட்டுள்ளார் தனுஷ். ஓரு பாதியில் காதலில் திளைக்கும் இளைஞனாகவும், இன்னொரு பாதியில் காதல் தோல்வியால் உச்சகட்ட எரிமலையாக வெடிக்கும் ஒரு மனிதனாகவும் நடிப்பில் அசத்துகிறார். தனுஷ் கேரியரிலேயே மிக முக்கியமான படமாக இந்தப் படத்தைச் சொல்லலாம்.

தனுஷூக்கு இணையான நடிப்பை க்ரித்தி சனோனும் தந்து படத்தை மேலும் உயர்த்துகிறார். மிக அழகாகவும் இருக்கிறார். மிக மிக உணர்ச்சிகரமாகவும் நடித்திருக்கிறார். ஆழமான, அதே சமயம் அமைதியான முகபாவனைகள் மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். பிரகாஷ் ராஜ், தனுஷின் தந்தையாக மனதில் நிற்கும்படியான பாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் படத்தின் எமோஷனைக் கூட்டுகிறது. மற்ற நடிகர்களும் நடிப்பில் அசத்துகிறார்கள்.

படத்தின் ஆன்மா ஏ.ஆர். ரஹ்மானின் இசை அமைந்துள்ளது . பாடல்கள் ஒரு புறம் ரசிக்க வைத்தாலும், பின்னணி இசை, படத்தின் ஆழத்தை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. துஷாரின் ஒளிப்பதிவு படத்தை மிக அழகாக்கியிருக்கிறது.

இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இந்த மாதிரி அழுத்தமான காதல் கதைகளை எடுப்பதில் புகழ் பெற்றவர். அவரது விஷனுக்கு வலு சேர்க்கிறார்கள் ஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும், க்ரித்தி சனோனும். கங்கையையும், காசியையும் படத்தில் முக்கியமான இடத்தில் காட்டிய விதமும், சிவன், முக்தி பற்றிப் பேசிய விதமும் படத்துக்கு இன்னொரு உணர்வையும் தந்திருக்கிறது. மொத்தத்தில் தனுஷ், ஆனந்த் எல்.ராய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படமாக ‘தேரே இஷ்க் மே’ அமைந்திருக்கிறது.

– மாறன் செ