இது தமிழ் ⚡ AMP

தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம் | The Grand Master review

By Dinesh R | Sep 23, 2026

கருத்தியல் சினிமாவுக்கும், கமர்ஷியல் சினிமாவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டதா தி கிராண்ட் மாஸ்டர் படம்?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தூய்மைப் பணியாளரான நாயகி அபர்ணதி வறுமைக்கு வாக்கப்பட்ட மனிதி. கணவரை இழந்த அவர் தன் ஒரே மகனை வக்கீலாக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் அவரின் மகன் அஸ்வின் அந்தச் சிறுவயதிலே பள்ளியில் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகிறான். மேலும் அவனுக்குப் படிப்பை விட சதுரங்க (Chess) விளையாட்டு மீதே ஆர்வம் அதிகம். ஆனால் ஆதிக்கச் சாதி கும்பல் அவன் திறமையை வெளியில் தெரிய, அவனை முடக்கப்பார்க்கிறது. ஒரு அம்மாவாக மகனின் திறமையை எப்படி அபர்ணதி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் என்பதும், அபர்ணதியின் கணவன் எப்படி இறந்தார் என்பதும் படத்தின் மிச்சசொச்ச கதை.

அபர்ணதி உணர்ச்சிகரமாக நடித்துள்ளார். ஆனாலும் சில காட்சிகளில் ஓவர்டோஸாகத் தெரிகிறது அவரின் நடிப்பு. காரணம் மிகையாக எழுதப்பட்டுள்ள வசனங்கள். சிறுவன் அஸ்வின் சிறப்பாக நடித்துள்ளார். இயல்பான உடல்மொழி அவரை ரசிக்க வைக்கிறது. வழக்கம் போல் லிங்கேஷ் இந்தப் படத்திலும் ஆதிக்கச்சாதியிடம் அடியும் உதையும் வாங்கிப் பரிதாபத்தைச் சேர்க்கிறார். வெற்றிச்செழியன், சுரேஷ் மேனன் போன்றோரின் நடிப்பும் ஓகே.

தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பெரிதாகக் கவனத்தை ஈர்க்கவில்லை. அர்ஜுன் ரவி ஒளிப்பதிவு பணியைக் கச்சிதமாகச் செய்துள்ளார். தூய்மைப்பணியாளர்களின் இருப்பிடத்தை அச்சுப்பிறழாமல் காட்சிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் வெற்றிச்செழியன் படம் மூலமாக சமூகத்திற்குப் பாடமெடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் படத்தில் கலைத்தன்மையைத் தாண்டி கருத்துக்கள் பிரச்சாரமாகத் துருத்தி நிற்கிறது. எல்லாக் கதாபாத்திங்களும் ஒருவித பிளாஸ்டிக் தன்மையுடன் இருப்பதால் நம் அந்தந்தக் கதாபாத்திங்களோடு ஒன்ற முடியவில்லை. இருப்பினும் படம் முன் நிறுத்தும் கருத்து காலத்திற்கும் பேச வேண்டிய ஒன்றாக இருப்பதால் இந்த மாஸ்டரை வாரியணைக்க வேண்டியுள்ளது.

– வெண்பா தமிழ்