இது தமிழ் ⚡ AMP

நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

By Dinesh R | Mar 11, 2021

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நாயகனும் தயாரிப்பாளருமான அருண்குமார் பேசும்போது, ” எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை. எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன்.

பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க வந்தேன். படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை. ‘நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா?’ என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார்.

இந்தப் படத்தை 5டி கேமராவில்தான் ஆரம்பித்தோம். பிறகு ரெட் டிராகன், ஏரி அலெக்ஸா வரை கேமராக்கள் பயன்படுத்தினோம். அந்தளவுக்கு பட்ஜெட் பெரியதாகி விட்டது.

இப்படத்தை எடிட்டிங்கும் செய்து இயக்கியிருக்கிறார் அண்ணன் துரைராஜ். அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டம் உள்ளது” என்றார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் டிக்டாக் புகழ் இலக்கியா பேசும்போது, ” இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. படக்குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும் போது, ” ‘நீ சுடத்தான் வந்தியா?’ தலைப்பு யாரைச் சுட வந்தாய் என்று கேட்பது போல் இருக்கிறது. நான் யாரையும் சுட வரவில்லை. நான் வாழ்த்தத்தான் வந்தேன். இன்றைய காலகட்டத்தில் சினிமா எடுப்பது சிரமம். அதிலும் சிறிய பட்ஜெட் படங்கள் எடுப்பது மிகவும் சிரமம். எடுப்பதை விட அதை வெளியிடுவது மிகமிகச் சிரமமான காரியம். ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது கிளைமாக்ஸ் எப்படி எடுப்பது என்று சிந்திப்பது போல், படம் படப்பிடிப்பு தொடங்கும் போதே எப்படி வெளியிடுவது என்ற சிந்தனையும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு வெளியிடுவது இன்று சிரமமாக இருக்கிறது. நினைக்கிற பட்ஜெட்டில் எடுக்க முடியவில்லை. தயாரிப்புச் செலவும் மிகவும் உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் எம்ஜிஆர் படங்களுக்கு சிவாஜி நடிக்கும் பெரிய படங்களுக்கு என்.எஸ்.சி என்கிற செங்கற்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு என்ற இந்த மூன்று ஏரியாவும் சேர்ந்து 2 லட்சம் வியாபாரம் ஆகும். அனைவருக்கும் லாபம் கிடைக்கும். இப்போது விஜய் நடிக்கும் படத்திற்கு செங்கல்பட்டு ஏரியா மட்டுமே 12 கோடி 18 கோடி என்கிறார்கள். தயாரிப்புச் செலவு அந்தளவுக்கு கூடி விட்டது சிறு படத்தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் . அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பி.வி. கதிரவன் பேசும்போது, “சினிமா என்பது ஒரு அற்புதமான சாதனம். தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கூட சினிமா ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. சக்தி வாய்ந்த அந்த சாதனத்தில் எந்த செய்தியையும் எளிதாகச் சொல்லிவிட முடியும். நான் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். என் கல்லூரிக் காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய ‘புன்னகை’ படத்தைப் பார்த்தேன். கருத்துள்ள அந்தக் கதை இன்னும் நினைவில் இருக்கிறது. படத்தில் நல்ல கருத்தை வைத்துக்கொண்டு செலவில்லாமல் எடுத்திருப்பார். இப்படியெல்லாம் சினிமாவில் தான் உருவாக்க முடியும். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் தம்பி அருண்குமாருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

விழாவில் படத்தின் இயக்குநர் துரைராஜ்,  ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ், இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர் கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.