இது தமிழ் ⚡ AMP

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

By Dinesh R | Jul 19, 2025

இன்றைக்கு இணையத்தில் எது ட்ரெண்டிங்காக இருக்கிறதோ, அதுதான் நாட்டின் பேசுபொருள் என்பதால் படத்தின் தலைப்பையே ட்ரெண்டிங் என வைத்துவிட்டார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கலையரசனும் ப்ரியாலயாவும் கணவன் மனைவி ஆவர். படத்தில் முதல் ஷாட்டிலே இருவரும் யூட்யூபில் தங்களின் ரீல்ஸைப் பதிவேற்றுகிறார்கள். அவர்களது ரீல்ஸின் வியூவ்ஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் இந்தத் தம்பதியின் வருமானமும் உயர்கிறது. இச்சூழலில் இவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் போது ஒரு ப்ரைவேட் ஃபோன்கால் ஒன்று இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டு ஏற்படுத்தும் வினைகளும் விடைகளும் தான் படம்.

அளவாக நடித்தாலே போதும் என்ற ரேஞ்சிலே படத்தில் வருகிறார் நாயகன் கலையரசன். ப்ரியாலயா இப்படத்தில் பெரிய சர்ப்ரைஸ் செய்துள்ளார். அழகு, நடிப்பு இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் மிகச்சிறந்த நடிகையாக மிளிர்கிறார். படமெங்கும் இவர்கள் இருவரே வருவதால் வேறு யாருக்கும் பெரிதாகக் கதையில் இடமில்லை. ப்ரேம் குமார் கிடைத்த சொற்ப நேரத்தில் நல்ல நடிப்பைத் தந்துவிட்டுச் செல்கிறார்.

சாம் சி.எஸ். பின்னணி இசையில் நல்லதொரு அதிர்வைக் கொடுத்துள்ளார். அநேகமாக சாம் சி.எஸ் அதிகம் வாசிக்காமல் அடக்கி வாசித்த படம் இதுவாகத் தான் இருக்கும். ப்ரவீன் பாலு வீட்டுக்குள்ளே சுற்றும் கதைக்கு தன்னால் முடிந்தளவு நல்ல ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் படத்தின் நீளத்தில் இன்னும் கறார்த்தன்மை காட்டியிருக்கலாம்.

இன்று இணையதளத்தின் ஆதிக்கம் நமது தனிப்பட்ட வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதையும், மனிதருக்குள் அது செலுத்தும் ஆசை விதை எவ்வளவு ஆபத்தானது என்பதை இயக்குநர் சிவராஜ் சொல்லியிருக்கிறார். ஆனால் திரைக்கதையாக இந்தப் படத்தை சரியாக அணுகவில்லை. படத்தில் எந்தக் காட்சியும் நமக்கு ஆச்சரியத்தையோ அதிர்ச்சியையோ தரவில்லை. நல்ல ஒருவரிக்கதை இருந்தும் திரைக்கதையின் சொதப்பலால் ட்ரெண்டிங் ஃப்ரண்ட்லியாக இல்லை.

– வெண்பா தமிழ்