இது தமிழ் ⚡ AMP

UNTIL DAWN விமர்சனம்

By Dinesh R | Apr 25, 2025

‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட், 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு வீடியோ கேம் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

க்ளாவரும், அவளது நண்பர்களும் காணாமல் போன தங்கள் தங்கையைத் தேடி ‘தி க்ளோர் வேளி (The Glore Valley)’-க்குச் செல்கிறார்கள். ஓர் அமானுஷ்யமான புயலில் சிக்கிக் கொள்ளும் அவர்கள், தி க்ளோர் வேளியில் ஒரு வீட்டில் தஞ்சமடைகின்றனர். முகமூடி அணிந்த ஒருவனால், க்ளாவரும் அவளது நண்பர்கள் நால்வரும் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்டதும், அனைவரும் உயிருடன் திரும்பி அந்த இரவின் தொடக்கத்திற்கு வருகிறார்கள். தாங்கள் நேர சுழற்சியில் (Time Loop) சிக்கிக் கொண்டதையும், விடியும் வரை கொல்லப்படமால் உயிர் தப்பினால்தான் அந்தச் சுழற்சியில் இருந்து வெளியில் வரமுடியும் என்பதை உணர்கின்றனர். பதிமூன்று முறை மட்டுமே அவர்கள் இறந்தாலும் மீண்டும் உயிர் பெறுவர், அதன் பின் அவர்கள் நிரந்தரமாக அந்த அமானுஷ்ய வீட்டின் ஓர் அங்கமாகி விடுவார்கள். க்ளாவராலும், அவளது நண்பர்களாலும் நேர சுழற்சியில் இருந்து விடுபட்டனரா இல்லையா என்பதுதான் கதை.

இதைப் போன்று ஹாலிவுட் படங்கள் ஏற்கெனவே பல வந்திருந்தாலும், அந்த டெம்ப்ளட்டில் இருந்து மாறுபட்டு, ஓர் அட்டகாசமான திகில் படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் டேவிட் F. சாண்ட்பெர்க். சுரங்க பூமியாக உள்ள ‘தி க்ளோர் வேளி’ ஏன் அப்படியானது, அங்கு உயிர் தப்பிய மனிதர்கள் எப்படி ‘வெண்டிகோ (Wendigo)’ ஆனார்கள் என்ற கிளைக்கதையை அழகாகக் கோர்த்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும், விதவிதமான மரணத்தை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு இறப்பிலும், ஒரு துப்பு (Clue) கிடைக்கின்றது. சுரங்க விபத்தில் தப்பிய மனிதர்களுக்கு உள சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர் ஹில்லாக, பீட்டர் ஸ்டார்மேர் நடித்துள்ளார். மனிதர்கள் எப்படி வெண்டிகோ-களாக மாறுகின்றனர் என்ற அவரது ஆராய்ச்சி அச்சுறுத்தும் விதமாக உள்ளது.

நண்பர்களைக் காப்பாற்ற ஒருவருக்கு ஒருவர் தற்கொலை செய்து கொண்டு, மீண்டும் விளையாட்டை முதலில் இருந்து தொடங்குகின்றனர். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த விளையாட்டில் இருந்து தப்பிக்கும் ஏப் (Abe)-ஐ, அவனது காதலி நினா (Nina)-வே முதுகில் குத்தி, “இங்கிருக்க பயமா இருக்கு தான். ஆனா இங்கிருந்து தப்பிச்சுப் போய், என் நண்பர்கள் இல்லாம வாழணும்னு நினைச்சா இன்னும் பயமா இருக்கு” எங்கிறாள். கதாபாத்திரங்களுக்கு இடையேயான இத்தகைய பிணைப்பும் புரிந்துணர்வும், அவர்களுக்கு அமானுஷ்யத்தையும் திகிலையும் எதிர்க்கப் பக்கபலமாக உள்ளது.

ஹாரர் பிரியர்கள்கள், அமானுஷ்ய விரும்பிகள், நட்பின் பலத்தைப் பார்க்க ஆசைப்படுபவர்கள் நிச்சயம் தவற விடக்கூடாத படம்.