இது தமிழ் ⚡ AMP

மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்

By Dinesh R | Sep 02, 2018

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் த்ரில்லாக இருக்கும். கன்னடப் படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காக தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன். சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களைப் பார்த்தவர்கள், இந்தப் படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் இயக்குநர் பவன் குமார்.

“பவன் குமாரின் லூசியா தமிழில் ரீமேக் செய்தபோது அதிலும் நான் நடித்தேன், இன்று அவர் இயக்கத்தில் தமிழிலேயே நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தெலுங்கு வசனங்களில் நான் தடுமாறும் போது எனக்கு ஆதி உதவியாக இருந்தார்” என்றார் நடிகர் ஆடுகளம் நரேன்.

‘நான் ஒரு சென்னைப் பையன். தமிழில் தான் அறிமுகம் ஆனேன். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தது மகிழ்ச்சி. இயக்குநர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதைச் சரியாகக் கேட்டு வாங்குவார். 10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதைப் பார்க்கிறேன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார். நிறைய ட்விஸ்ட் இருக்கு” என்றார் நடிகர் ராகுல் ரவீந்திரன்.

“வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம். ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மைக் கேட்கும்போது நடித்து விட வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பான படத்தைக் கொடுப்பது என்பது தான் மிக சவாலான விஷயம். அதனால் தான் பவன் குமார் படம் நடிக்கிறீங்களா எனக் கேட்டவுடனேயே அவருக்காகவே நடிக்க ஓகே சொன்னேன். சமீப காலங்களில் காக்கா முட்டை, அருவி போன்ற படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். அது மாதிரியான ஒரு படம் தான் இது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்து 3 தமிழ் படங்களில் நடிக்கப் போகிறேன்”என்றார் நடிகர் ஆதி.

“ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ. லூசியா படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்தப் படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்தப் படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்தப் படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அது தான் இந்தப் படத்துக்குள் என்னைக் கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் நான் உணர்கிறேன்” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

“நான் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முயற்சி செய்தேன். ஆனால் அதை வாங்க முடியவில்லை. எப்படியாவது இந்தப் படத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என நினைத்தேன். அது தான் இந்தப் படத்தை நான் ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது. சமந்தா இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்காது. புது விதமான, சீரியஸான சமந்தாவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். சமந்தா நடித்த சமீபத்திய படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி வருகின்றன. இந்தப் படமும் நிச்சயம் நல்ல வசூலைக் கொடுக்கும். இந்தப் படத்தின் ஒரிஜினல் கன்னடப் பதிப்பை 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை எடுத்திருந்தார். அது தான் படத்தின் ஹைலைட். இந்தப் படத்தில் அதை விடவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.