இது தமிழ் ⚡ AMP

வல்லமை விமர்சனம் | Vallamai review

By Dinesh R | Apr 24, 2025

திறன், பலம், வலிமை, ஆற்றல், சக்தி என தலைப்பைப் பொருள் கொள்ளலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விவசாயப் பின்னணியையுடைய சரவணனும், அவரது மகள் பூமிகாவும் கல்விக்காகச் சென்னைக்கு வருகிறார்கள். எவரோ சிறுமி பூமிகாவை மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிடுகின்றனர். அது யாரெனக் கண்டுபிடித்து, தான் அனுபவிக்கும் வலிக்குப் பழி வாங்கவேண்டுமென விரும்புகிறாள் பூமிகா. அக்கொடியவனைச் சரவணனும் பூமிகாவும் எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

சரவணனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மிகவும் பாவப்பட்டவராக, நடக்கவும் நடிக்கவும் மிகவும் சிரமப்படுபவராக, ஆள் ஒரு மாதிரி ஒடுங்கிப் பரிதவிப்புடனே உள்ளார். சாமர்த்தியமாக அவரைக் காது கேளாதவராகச் சித்தரித்துச் சமாளித்துள்ளார் இயக்குநர் கருப்பையா முருகன்.

கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் ஒரு கனமான கதைக்கருவிற்கு, ஆற்றின் மெல்லிய நீரோட்டம் போல் திரைக்கதை அமைத்துள்ளார். கதையின் கனத்தைக் காட்சியில் காட்டாமல், நல்லவேளையாக வசனத்தால் கடந்து விடுகின்றனர். அதையும் மீறி பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. காரணம், பூமிகாவாக நடித்துள்ள திவ்யதர்ஷினி.

பாந்தமான பாவனைகளால் மனதில் குடியேறிப் படத்தின் இன்ன பிற குறைகளை மறக்க வைத்து விடுகிறார் திவ்யதர்ஷினி. தந்தைக்கும் சேர்த்து வல்லமையைத் தரும் சிவசக்தியாக உள்ளார் திவ்யதர்ஷினி. தனக்கு நிகழ்ந்தது வேறு எவருக்கும் நடக்கக்கூடாதென்ற மேன்மை மிகுந்தவராகவும், கொடுமையை எதிர்த்து நிற்பவராகவும் பாரதியின் வரிகளை நினைவுறுத்துகிறார் திவ்யதர்ஷினி. பிரேம்ஜியின் நடிப்பைப் பார்க்கும் வல்லமை வாய்க்கப் பெற்றால், திவ்யதர்ஷினியின் வல்லமையைக் காணும் பேறு கிடைக்கும்.