இது தமிழ் ⚡ AMP

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

By Dinesh R | Aug 14, 2026

விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ ஆகியோர் தங்கள் ஏற்றப் பாத்திரத்திற்கு மிக நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த மாளிகையின் உட்புறத்தோற்றமான ஹால் மட்டும் ஓர் அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் நடிகர்கள் அதைத் தங்களது நடிப்பால் மறக்கடித்து விடுகின்றனர். இயல்பாகவே ஓர் அப்பாவித்தனம் அப்பியுள்ள சுனில் ரெட்டியின் முகம், விஸ்வநாத்தின் ‘மாப்பி’ பாத்திரத்திற்குப் பொருந்திப் போய்க் கலகலப்பிற்கு உதவுகிறது. ராதிகா அவரை டீல் செய்யும் விதமே அலாதியாக உள்ளது.

பொதுவாகத் தமிழ் ரசிகர்களுக்கு, வென்றவனின் கதையை விடப் போராடி வெல்பவனின் கதைகள் பிடிக்கும். வெங்கி அட்லூரியின் ‘லக்கி பாஸ்கர்’ படமே அதற்கு ஓர் உதாரணம். நாயகன் தன் முயற்சியால் பணக்காரராக மாறினால் ஏற்றுக் கொள்ளும் தமிழ் ரசிகரால், பிறப்பாலேயே பணக்காரனாக இருக்கும் நாயகனை ஏற்றுக் கொள்வதில் ஓர் உளச்சிக்கல் உள்ளது. இயக்குநர் தெலுங்குக்காரர் என்பதால், அவர் தைரியமாக நாயகனைத் தனி விமானம் வைத்திருக்கும் கோடீஸ்வரராகவே காட்டுகிறார். ஆனால், இப்படத்தில் அச்சிக்கல் ஏற்படாத வண்ணம், பணக்கார நாயகனை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள வைக்க சூர்யாவின் இமேஜ் உதவுகிறது. கஜினி சஞ்சய் ராமசாமியின் பெயரை ஞாபகப்படுத்துமாறு, சூர்யாவிற்கு சஞ்சய் விஸ்வநாத் எனப் பெயர் வைத்திருப்பது ஸ்மார்ட் மூவ். சூர்யா தன் அகரம் மூலம் படிப்பிற்கு உதவுகிறார் என்பதை நினைவுறுத்தும் காட்சி மற்றொரு எடுத்துக்காட்டு.

சூர்யா, ராதிகா, மமிதா பைஜு காம்பினேஷனில் படத்தின் முதற்பாதி கலகலப்பாகக் கடந்து விடுகிறது. இரண்டாம் பாதியில், தனித்தனிக் காட்சிகளாக ரசிக்கும்படி இருந்தாலும், திரைக்கதையில் சரியான கான்ஃப்ளிக்ட் இல்லாததால், கதை தனது இயல்பான நகர்வை விட்டு விலகுகிறது. ஃபீல் குட் படம் என முடிவு செய்து அதற்காகக் காட்சிகளை அடுக்கியுள்ளதால் இயல்போட்டம் சற்றே பாதிக்கப்படுகிறது.

சூர்யா, எமோஷ்னல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். மமிதா, சூர்யாவின் மாதயிறுதி பயணத்தைப் பற்றிப் பொதுவில் சொல்லிக் கலாய்க்கும் பொழுது, சூர்யா சங்கடத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவமனையில், கண்ணாடிக்கு ஒருபுறம் சூர்யாவும், மறுபுறம் மமிதாவும் பேசும் காட்சி சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அக்காட்சியின் ஃப்ரேமிங்கை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி.

மேடியாக நடித்துள்ள மமிதா பைஜு அற்புதமானதொரு மேஜிக் செய்துள்ளார். ஒரு பார்வையில், ஒரு ரியாக்‌ஷனில் சடுதியில் ஒரு ஸ்பார்க்கைத் திரையில் தோற்றுவிக்கிறார். குறிப்பாக ராதிகாவுடனான காம்போ காட்சிகளில் எல்லாம் அவரது மேஜிக் மேலும் பிரகாசிக்கிறது. அருண்ராஜா காமராஜ் வரிகளில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில், சுபலாஷினி குரலில், மமிதா பைஜுவின் நடனத்தில் ‘பட்டாம்பூச்சி’ பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சில்லென்று உள்ளது. இப்படத்திற்கு மமிதா பைஜு கொண்டு வந்துள்ள துள்ளலான உயிர்ப்பை ரசிப்பதற்காகவே இப்படத்தைத் திரையரங்கில் தவறவிடாமல் காணலாம்.