இது தமிழ் ⚡ AMP

வெப்பன் – சூப்பர் ஹ்யூமன் ஆக்‌ஷன் படம்

By Inbaaraja | May 19, 2024

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தொகுப்பாளர் கோபி, “சூப்பர் ஹ்யூமன் கான்செப்ட்டோடு இந்தப் படம் வந்திருக்கிறது. வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாகப் படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில், அடுத்த கட்டத்திற்கான நகர்வாக வெப்பன் படமிருக்கும். வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார். இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்கக் கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாகப் பிரம்மாண்டமாக இருந்தது” என்றார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “விஜயகாந்த் vs சத்யராஜ் என்று போட்டி ஆரோக்கியமாக இருந்த காலம் அது. அப்போதிருந்து இப்போது வரை சத்யராஜ் கலக்கி வருகிறார். அவர் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘வெப்பன்’ படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு ஜானரை இயக்குநர் முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது” என்றார்.

சண்டை இயக்குநர் சுதீஷ், “பட்ஜெட் பற்றி யோசிக்காமல் படம் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிறைய ஆக்‌ஷன் இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் செய்த சத்யராஜ் சாருக்கு நன்றி. வசந்த் ரவி 100% சிறப்பாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார்” என்றார்.

நடிகர் வசந்த் ரவி, “தமிழில் சூப்பர் ஹ்யூமன் கதைகளை எடுத்துச் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்குப் பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதைச் செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் ட்ரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘ட்ரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். ’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாகச் சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்தப் படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. தான்யா இதுவரை நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக ‘வெப்பன்’ தான் எனச் சொன்னார். நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹ்யூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்தக் கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார் என்றார்.

நடிகர் சத்யராஜ், “திரையில் காட்டுவதை விட, தரையில் வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். என் நண்பர் விஜயகாந்த்திற்கு ‘வானத்தைப் போல…’ என்ற அற்புதமான பாட்டைக் கொடுத்தவர் ஆர்.வி. உதயகுமார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனையும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்ட்ராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.