இது தமிழ் ⚡ AMP

‘கூர்கா எப்படிப்பட்ட படம்?’ – இயக்குநர் சாம் ஆண்டன்

By Dinesh R | Jul 09, 2019

“கூர்கா – நிச்சயம் ஒரு ஸ்பூஃப் படம் அல்ல” என்றார் கூர்கா படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“ஆனால் ஒரு சில ஸ்பூஃப் விஷயங்கள் படத்தில் உள்ளன. ஆனால் படத்தின் முக்கிய மையக்கரு ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆரம்பம் ‘100’ படத்தின் படத்தொகுப்பின் போது நடந்தது. ரூபனும் நானும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். அது ஒரு மழை இரவு.

நகைச்சுவை, திரில்லர் கதைகள் பற்றி நாங்கள் விவாதிக்க ஆரம்பித்தோம். அடுத்த நாள், நாங்கள் யோகிபாபுவை அணுகி, அவரிடம் கதை சுருக்கத்தை விவரித்தோம். எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் அவர் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டார். பின்னர் நாங்கள் ஸ்கிரிப்ட்டில் முழுமூச்சில் வேலை செய்யத் தொடங்கினோம்” என்றார்.

மேலும் “கனடா நாட்டு மாடல் எலிசா எர்ஹாட், படப்பிடிப்பு முழுவதும் மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் இருந்தார். பல நேரங்களில், அவர் கேமிரா முன் நடிக்கும் முன்பு, தனது பகுதிகளை ரிகர்சல் பார்த்து மேம்படுத்திக் கொண்டிருந்தார். அவரது ஈடுபாடு, படத்தை சரியான நேரத்தில் முடிக்க எங்களுக்கு உதவியாக இருந்தன.

படத்தில், யோகிபாபுவின் உற்ற துணையாக ஒரு நாய் நடித்துள்ளது. அண்டர்டேக்கர் என்ற பெயருடைய அந்த லாப்ரடார் வகை நாய், இந்தப் படத்தின் இன்னொரு ஈர்ப்பாக இருக்கப் போகிறது. உண்மையில், கதை ஒரு சாதாரண கூர்கா மற்றும் ஒரு சோம்பேறி என முத்திரை குத்தப்பட்ட லாப்ரடரைப் பற்றியதுதான். தீவிரவாதிகள் ஒரு ஷாப்பிங் மாலைக் கடத்தியபோது ஒரே இரவில் இவர்கள் இருவரும் எப்படி ஹீரோக்களாக மாறுகிறார்கள் என்பது தான் கதை” என்றார்.

ராஜ் ஆர்யன் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பை கையாள, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.