இது தமிழ் ⚡ AMP

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்

By Dinesh R | Feb 23, 2018

தலையில் எண்ணெய் வைக்காதவர்களின் லிஸ்ட்டை எடுத்து, அதிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து யமதர்மராஜன் ஒரு மரண விளையாட்டை விளையாடுகிறார். நான்கு டாஸ்க்-களை நாயகன் முடிக்காவிட்டால் அவன் மரணித்துவிடுவான். அந்த நான்கு டாஸ்க்-கள் என்ன, அவற்றில் நாயகன் வென்றானா இல்லையா என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாயகனாக அஸார் அறிமுகமாகியுள்ளார். புதுமுகம் என்றாலும், அடுத்த வீட்டுப் பையனைப் போன்ற பரீச்சயத்தைத் தோற்றுவித்துவிடுகிறார். வேலையில்லாததால் அவர் வீட்டினரால் கலாய்க்கப்படும் பொழுதும், ஆங்கிலம் தெரியாமல் இன்டர்வியூவில் சொதப்பும் பொழுதும், யமதர்மராஜாவால் சொதப்பப்படும் பொழுதும் அஸார் தன் முகபாவனைகளில் அழகாக வித்தியாசம் காட்டியுள்ளார்.

ஷர்மிளா, சுமதி, யோகி பாபு, அர்ச்சனா ஆகியோர் வரும் அத்தியாயம் கலகலப்பூட்டினாலும், தேவையில்லாத இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். நாயகனின் நண்பராக வரும் சிங்கப்பூர் தீபனும் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார். நகைச்சுவையில் ஒரு ரவுண்ட் வலம் வரும் வாய்ப்புப் பிரகாசமாய் உள்ளது.

சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். கதை நாயகனைச் சுற்றியே நிகழ்வதால், வழக்கம் போல் நாயகிக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. இவர்களது காட்சியை இன்னும் இளமைத் துள்ளலோடு காட்சிப்படுத்தியிருக்கலாம். குறும்படத்திற்காகக் கதை சொல்வது போல் காதலைச் சொல்லும் காட்சி வித்தியாசமாக இருந்தாலும், அழுத்தமாக அதைக் காட்சிப்படுத்தாதது குறை.

படத்தின் முடிவு சுபம் தான் என்றாலும், கடைசி டாஸ்க்கிற்காகச் சஞ்சிதா ஷெட்டியைச் சுட்டு விடுகிறான் அஸார். காதலோடு, ஸ்தம்பித்து நிற்கும் நாயகனை எது தன் காதலியைச் சுட வைத்தது என்ற காரணம் மிக அமெச்சூராக உள்ளது. அந்தக் காரணம் உண்மையோ, பொய்யோ என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். படமே உயிரைக் காத்துக் கொள்ளும் ஒரு விபரீதமான விளையாட்டைப் பற்றியது. உயிருக்காகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனால், எப்படி அதுவும் தான் காதலித்த பெண்ணைக் கொல்ல இயலும்? படம் எந்த இடத்திலும் கனெக்ட் ஆகாமல் போக, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் நகைச்சுவையைப் பிரதானமாக்கி மற்றவற்றை மேம்போக்காக அணுகியிருப்பதே காரணம்.

வித்தியாசமானதொரு முயற்சியைக் குழப்பாமல் கலகலப்பாகக் கொண்டுபோய் இருப்பதே படத்தின் வெற்றி.