இது தமிழ் ⚡ AMP

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai review

By Dinesh R | Oct 02, 2026

எட்டாயிரம் வருடங்களாக வாழும் ஒரு மனிதனை, முப்பத்திரண்டு வயதான ஒருவன், ஒரு காலி ட்ரெயின் அப்பார்ட்மென்ட்டில் சந்திக்கிறான். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் 8000 வருட மனிதனிடம் சிக்கிக் கொண்டு உயிருக்காகப் போராடுகிறான் 32 வயதான மனிதன். அவர்களுக்கு இடையே நடக்கும் இந்த வினோத முரணான போராட்டம் எப்படி நிறைவடைகிறது என்பதே படத்தின் முடிவு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எலியைக் கணக்கில் கொள்ளாவிட்டால், படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளனர். மூவரின் கதாபாத்திர வார்ப்பிலுமே ஒரு முழுமையை உணர முடியவில்லை. முட்டி போட்டு மன்னிப்புக் கேட்கிறார், அடுத்த நொடி எலியைக் கொல்லப் பார்க்கிறார் சூரி; எல்லா உயிர்களும் சமம் என்பதைச் சொல்லத் தெரியாமல் ஒரு சைக்கோ போல் சக மனிதனை அச்சுறுத்துகிறார் நிவின் பாலி; பேரன்பு கொண்டவராக வசனத்தில் சிலாகிக்கப்படும் அஞ்சலி, மூவாயிரம் வருடங்களாகக் காதலெனும் பெயரில் நிவின் பாலியை ‘டீஸ்’ மட்டுமே செய்கிறார். இப்படியாக எந்தக் கதாபாத்திரமும் மனதில் யாதொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இயக்குநர் ராம் சொல்ல விரும்பிய இதே கருத்தை, 2019 இல் மான்ஸ்டர் படத்தில் மிகக் கவித்துவமாகச் சொல்லியிருப்பார் நெல்சன் வெங்கடேசன்.

ஓர் இலக்கு தீர்மானிக்கப்பட்டும் அதை நோக்கிப் பயணிக்காத திரைக்கதையாய், ஒரு படைப்பாளரின் மனம் போன போக்கில் பயணிக்கிறது கதை. அஞ்சலியின் பேரன்பை வசனத்தில் சிலாகித்துவிட்டு, கடலில் இருந்து குளித்துவிட்டு ஈரம் சொட்ட வருவது போல் அஞ்சலியை கவர்ச்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ராம். ஒரு நாற்காலியில் அமர்ந்து, சக மனிதனை அழைத்து மார்போடு அணைத்துக் கொள்கிறார். அதைக் காணும் நிவின் பாலி, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மேரி மக்தலீனைப் போல் காட்சிப்படுத்தப்படும் அஞ்சலி, தன்னையும் இப்படித்தான் பேரன்போடு அணைத்துக் கொண்டார் என அகமகிழ்கிறார் நிவின் பாலி. வண்ணமயமான இலைகளோடு நீரில் மிதக்கும் அஞ்சலி என நிவின் பாலியின் நினைவில் இருக்கும் அஞ்சலிகள் அனைவருமே புறவயமான அழகோடே நிவின் பாலியால் நினைவுகூரப்படுகிறார். திடீர் திடீரென வசனங்கள் மட்டும் பேரன்பு, ஜென்மாந்திரப் பெருங்காதல் என வாழைப்பழம் போல் இனிக்கிறது.

இயக்குநர் ராம் வழக்கம் போல் காட்சியையும் இசையையும் பிணைந்து, ட்ரெயினுக்கு வெளியேயான காட்சிகளில் ரசவாதத்தை உண்டு பண்ணியுள்ளார். யுவனின் இசை படத்தோடு ஒன்ற வைக்க உதவுகிறது.