இது தமிழ் ⚡ AMP

யூத் விமர்சனம் | Youth review

By Dinesh R | Mar 19, 2026

பள்ளியில், மூன்று பெண்களைக் காதலித்த பின், காதல் என்றால் என்னவென்று புரிதல் பிரவீனுக்கு ஏற்படுவதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தை அனைத்துப் பேற்றோர்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் இயக்குநர் கென்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அறிமுக இயக்குநராகக் கென், தனது படைப்புத் திறனை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பறைசாற்றியுள்ளார். ஃப்ரேம்க்கு ஃப்ரேம் கொண்டாடும் வகையில் இளமைத் துள்ளலுடன் ரசிக்க வைக்கிறது. அதற்கு உற்ற துணையாகத் தனது இசையின் மூலம் சகாயம் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஒளிப்பதிவாளர் விக்கி கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன பாவனைகளையும் அழகாகப் படம்பிடித்துள்ளார். அதை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படத்தொகுப்பாளர் காட்சிகளாகக் கோர்த்து அசத்தியுள்ளார்.

கதாபாத்திரத் தேர்வுகளிலேயே மேக்ஸிமம் ஸ்கோர் செய்துவிடுகிறார் இயக்குநர் கென் கருணாஸ். நாயகனின் பெற்றோராக நடித்துள்ள சுராஜ் வெஞ்சுரமூடு – தேவதர்ஷினி இணை படத்தின் மிகப் பெரும் பலம். ஒரு பதின்ம வயது மாணவனின் மையல்களைச் (infatuation) சொல்லும் படம் என்ற புள்ளியில் தேங்கிவிடாமல், படம் முன்னகர்ந்து செல்ல உதவியுள்ளது இவ்விணையின் அனுபவமிக்க யதார்த்தமான நடிப்பு. சுராஜ் வெஞ்சரமூடு சிற்சில காட்சிகளிளே வந்தாலும், மனம் முழுவதும் நிறைந்து கொள்கிறார்.

பிரஷிகாவாக மீனாட்சி தினேஷும், சோனலாக பிரியன்ஷி யாதவும், கனகவள்ளியாக அனிஷ்மாவும் நடித்துள்ளனர். கதாபாத்திரத்திற்குப் பெயர் சூட்டுவதில் கூட ஓர் அக்கறையுடன், இந்த முகத்திற்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்றளவிற்குக் கவனத்துடன் இருந்துள்ளார் கென் கருணாஸின் குழு. தன்னுடைய படமென முன்னிறுத்திக் கொள்ளாமல், கென் & குழ என்று அனைவரையும் அரவணைத்துக் கொண்டுள்ளார் கென். அழகான மீனாட்சி தினேஷையும், பிரியன்ஷி யாதவையும் முதற்பாதியில் பயன்படுத்தி விட்டு, பெரிய கண்களையும் புன்னகையையும் கொண்ட அனிஷ்மாவை இரண்டாம் பாதியில் உபயோகித்துள்ளதும் இயக்குநர் குழுவின் ஒரு துல்லியமான கணக்கு என்றே தோன்றுகிறது.

நண்பர்களாக நடித்துள்ளவர்களின் தேர்வும் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளது. படம் ‘லைவ்’லியாக இருப்பதற்கு, ஜி.வி.பிரகாஷ் குமாரைப் போல் இந்தப் பசங்களும் முக்கிய காரணமாக உள்ளனர். நாயகனோடு முறைத்துக் கொள்ளும் பையனை, தனுஷின் பாணியில் பணக்காரனாகச் சித்தரித்து, “நாங்க எல்லாம் மேடையேறக்கூடாது இல்ல” என்ற வசனத்தின் மூலம், குருவிற்கு மரியாதை செய்துள்ளார் கென். ஆனால், அதே சமயம், ‘அடிடா அவள, உதைடா அவள’ என்றெல்லாம் போகாமல் மிக மிக நாகரீகமாகவும் முதிர்ச்சியாகவும் விஷயங்களை அணுகியுள்ளார். 

ஆடல், பாடல், நட்பு, மையல், மென்னுணர்ச்சி (Sentiment), தெளிதல் எனக் கலந்து கட்டி அசத்தியுள்ளார் கென் கருணாஸ். “ஒரு பொண்ணு பேசினாலோ, பார்த்துச் சிரிச்சாலோ, அதுதான்ங்க பசங்கள பொறுத்துவரைக்கும் லவ்” என்ற விஜய் நடித்த நச்சுத்தனமான (toxic) யூத்திலிருந்து (2002), ஒரு பதின்ம வயது பையனின் காதலைப் பற்றிய தெளிவான புரிதலுக்குத் தமிழ் சினிமா நகர்ந்துள்ளது ஆரோக்கியமான போக்கின் அறிகுறியாகும்.