இது தமிழ் ⚡ AMP

“பகலறியான்: இளைஞர்களும் இசையமைப்பாளர்களும்” – பேரரசு

By Inbaaraja | May 17, 2024

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இசையமைப்பாளர் விவேக் சரோ, “இது என் முதல் படம். நான் பல டிவி விளம்பரங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப் பெரிய விசயமாகத்தான் இருக்கிறது. இந்தப் படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப் படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப்பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

நாயகி அக்ஷயா கந்தமுதன், “எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தப் படத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப் படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாகச் சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிகத் தனித்துவமானவராக, தனக்குப் பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை. இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். ட்ரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, “இந்தக் குழுவில் யாரையுமே எனக்குத் தெரியாது. நேற்று என் நண்பர், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மூலம் இந்தப் படத்தின் குழுவினரைச் சந்தித்தேன். 15 வருடங்களாகக் கோடம்பாக்கத்தில் நடிகராக அலைந்தவர் தான் முருகன். இவர் மாதிரி பலரைப் பார்த்திருக்கிறேன். இன்னும் கனவுகளோடு அலையும் மனிதர்களின் சோகம் சொல்ல முடியாதது. அப்படி இருந்த முருகன் தனக்கான வாய்ப்பைத் தானே உருவாக்க எண்ணி இந்தப் படத்தை எடுத்துள்ளார். அதிலும் வித்தியாசமான படங்கள் மட்டுமே செய்யும் வெற்றியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். அதிலேயே ஜெயித்து விட்டார். வாய்ப்புகள் தந்து புதியவர்களை உருவாக்கியவன் சின்ன வயதுக்காரன் என்றாலும் அவன் குருவாகிவிடுவான். அந்த வகையில் வெற்றி குரு தான். இந்தப் புதிய முகங்கள் எல்லோரும் இணைந்து தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு , “பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையைப் பரபரப்பாகப் படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார்” என்றார்.

நடிகர் வெற்றி, “இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப் படம் கிடைத்தது. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நான் செய்கிறேன் என ஒப்புக் கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப் படத்திற்குப் பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டைப் புரிந்து கொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்” என்றார்.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளார்.

பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் மே 24 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.