“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும்.
தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை வரவழைத்த அதிசயத்தைப் பார்த்து தாமும் அதைச் செய்ய ஆசைப்பட்டார் பாலு மகேந்திரா. அன்றுதான் அவருக்கு இறவாப் புகழைப் பெற்று தந்திருக்கும் கருவியான கேமிராவை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்து சொல்லமுடியாத பரவசத்தை அடைந்துள்ளார். சினிமா ஆசை அவரை பூனே திரைப்படக் கல்லூரிக்குத் துரத்தியது. குறைந்த ஒளியைக் கொண்டு திரையில் அற்புதங்கள் காட்டும் ஜாலக்காரராக அவர் பரிணமித்தார்.
இன்னும் ஐந்தாறு படங்களாவது இயக்கவேண்டும் என்பது அவர் ஆசை. நமக்குத்தான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அதனாலென்ன அவர் படைப்புகளின் மூலம் என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
கலைஞனுக்கு மரணமேது!?