32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

Dinesh R சேலம் Published: 13/02/2014 2 நிமிட வாசிப்பு Updated: 03/05/2014 கட்டுரை
எழுத்து அளவு:

The Legend Balu Mahendra

“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை வரவழைத்த அதிசயத்தைப் பார்த்து தாமும் அதைச் செய்ய ஆசைப்பட்டார் பாலு மகேந்திரா. அன்றுதான் அவருக்கு இறவாப் புகழைப் பெற்று தந்திருக்கும் கருவியான கேமிராவை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்து சொல்லமுடியாத பரவசத்தை அடைந்துள்ளார். சினிமா ஆசை அவரை பூனே திரைப்படக் கல்லூரிக்குத் துரத்தியது. குறைந்த ஒளியைக் கொண்டு திரையில் அற்புதங்கள் காட்டும் ஜாலக்காரராக அவர் பரிணமித்தார்.

பாலு மகேந்திராஇலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். அதனால்தானோ என்னவோ தரமான படங்களை அவரால் நமக்கு அளிக்க முடிந்திருக்கிறது. அலாரம் வைத்து விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தனது கிராமமான அமிர்தகழியில் இருந்து மட்டக்களப்பு இரயில் நிலையம் சென்று, ஜெயகாந்தனின் சிறுகதைக்காக ஆனந்த விகடனை வாங்கிப் படிப்பவராக இருந்துள்ளார். இந்தப் பழக்கம்தான் பின்னாளில், “கதை நேரம்” செய்ய உந்தியிருக்க வேண்டும். பெரிய திரையைவிட, சின்னத் திரையில்தான் தன்னால் சுதந்திரமாக இயங்க முடிந்ததெனக் கூறியுள்ளார். பெரிய திரையை அல்லது சினிமாவை அவர் பால் வியாபாரத்துடன்தான் ஒப்பிடுகிறார். வருங்காலத்தில் தரமான தூய சினிமாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், அவரது பட்டறையிலிருந்து கிளம்பியவர்கள்தான் இன்று தமிழ் சினிமாவில் கோலேச்சுகின்ரனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலு மகேந்திரா நல்ல கலைஞன் மட்டுமல்ல நல்ல குருவும்கூட!

இன்னும் ஐந்தாறு படங்களாவது இயக்கவேண்டும் என்பது அவர் ஆசை. நமக்குத்தான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அதனாலென்ன அவர் படைப்புகளின் மூலம் என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.

கலைஞனுக்கு மரணமேது!?

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.