இது தமிழ் ⚡ AMP

அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

By Dinesh R | Jul 30, 2025

கணக்கு என்றழைக்கப்படும் கனகு சுப்புரத்தினத்தைப் புழல் சிறைச்சாலையில் இருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் காவலர்கள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கணக்கை வழியிலேயே கொல்வதற்கு ஒரு கூலிப்படையும், என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் முயற்சி செய்கிறது. யாரிந்தக் கணக்கு, அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, உடன் செல்லும் காவலர்களில் ஒருவராகச் செல்லும் வேந்தன் பாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார். உயரதிகாரிகளின் அழுத்தத்தையும் மீறி எப்படியாவது கனகை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நினைக்கிறார். பயணத்தில், ஏதோ ஒரு புள்ளியில், மலர் என பச்சை குத்திக் கொண்டிருக்கும் கனகு மீது ஒரு சாஃப்ட் கார்னர் வேந்தனுக்கு உருவாகி விடுகிறது. கனகுவின் காதல் மீதும் சிறு அபிமானம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், கடமை தவறக்கூடாது என்ற எண்ணத்துடனும் செயற்படுகிறார். ‘அஞ்சாதே (2008)’ படத்தில், இந்த சிஸ்டம் தன்னை வஞ்சித்துவிட்டதாக எண்ணி அதற்கு எதிராகச் செயற்படுவார். இப்படத்தில், அதற்கு நேர்மாறாக, சிஸ்டத்துக்குள் இருந்து கொண்டே, மேலதிகாரிகளின் ஆக்ஞைக்குக் கட்டுப்படாமல் கடமையைச் செய்ய முனையும் கதாபாத்திரம் அவருக்கு.

மலராக நடித்துள்ளார் ஜான்விகா கலகேரி. நல்ல கதாபாத்திர வடிவமைப்புடன் தொடங்கினாலும், படத்தின் முடிவில் பலமற்றதாக போய் விடுகிறது ஜான்விகாவின் ஏற்றிருக்கும் பாத்திரம். லாட்ஜ் ஓனர் ராமா நாயுடுவாக யோகிபாபு நடித்துள்ளார். தனது பாணியில் அனைவரையும் கலாய்த்துக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். நாகராஜ் எனும் குணசித்திர வேடத்தில் பொருந்தும்படி, தயாரிப்பாளர்களில் ஒருவரான தயா பன்னீர் செல்வமே நடித்துள்ளார்.

பிரபு நாயகனாக நடித்த திருநெல்வேலி (2000) படத்தில் அறிமுகமான உதயாவிற்கு, இது திரையுலகில் 25 ஆம் ஆண்டாகும். நல்ல கதைக்காகக் காத்திருந்து இப்படத்தைத் தேர்வு செய்து நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரவு மகாராஜா (2018) படத்தில், கதாபாத்திரத்தில் இருந்து அந்நியமாக விலகியிருந்த உதயா, இந்தப் படத்தின் அடாவடியான அராத்துப் பேர்வழி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஒரு கைதியும், ஒரு போலீஸும் ஒன்றாகப் பயணிக்கும் ஒரு வரிக்கதைக்கு நல்ல விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ். ஆனால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவே கதையை அவர் அணுகியிருக்கலாம். உதாரணத்திற்கு, ‘வீரப்பனைத் தேடின டீம்லயே இருந்தவங்க நாம? இவனெல்லாம் எம்மாத்திரம்?’ என ஒரு காவலதிகாரி கேட்க, அவருக்குக் கீழ் பணி புரிபவர், ‘இவன் சாதாரண ஆள் இல்ல சார்!’ என போலீஸிடம் லிஃப்ட் கேட்டு வந்த கதையைச் சொல்கிறார். படத்தின் உபதலைப்பான சிஸ்டம் குறித்துக் காத்திரமான விமர்சனம் எதுவும் படத்தில் வைக்கப்படவில்லை.