Shadow

உத்தரவு மகாராஜா விமர்சனம்

Utharavu-Maharaja-movie-review

ரவியின் காதுக்குள், ‘நிற்காமல் ஓடிக்கொண்டே இரு’க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை.

ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை. 

படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் மீடியாவின் 3டி கிராஃபிக்ஸில் அவை இயல்பாய்ப் பொருந்துகின்றன. ட்ரெய்லரிலேயே அந்த மங்கலான குதிரைகளைப் பார்க்கலாம். அவை படத்தில் அழகாகப் பொருந்தி, நாயகனின் காதில் கேட்கும் அமானுஷ்யக் குரல்களுக்கான நேர்த்தியான உருவங்களாக உள்ளன. அமெச்சூரான கிராஃபிக்ஸ் என்ற எண்ணம் எழாததற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, கிராஃபிக்ஸை மனதில் கொண்டு வைத்துள்ள கேமிரா கோணங்களே! சின்ன படமெனினும், இத்தகைய திட்டமிடல் ஒரு சீரியசான சுவாரசியமான த்ரில்லருக்கு உத்திரவாதம் அளித்துள்ளது.

செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் இருந்து, ‘எடும் எடும் எடும் என எடுத்ததோர்; இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே’ என்ற பாடலைப் பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது அட்டகாசம். கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆவான். ரவியை மிரட்டும் அந்தக் குரல், உக்ரம் கொண்ட இரண்டாம் ராஜராஜச் சோழனாக இல்லாமல், இரண்டாம் குலோத்துங்கனாக இருந்திருந்தால் இன்னும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும்.

காயங்குளம் கொச்சுண்ணி படத்தில் நிவின் பாலியின் மனைவியாக நடித்துள்ள பிரியங்கா திம்மேஷ், சாதனா எனும் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தில் உதயாக்கு ஜோடி இருந்தாலும், இவரைத்தான் நாயகியாகக் கொள்ளமுடியும். மார்ஸ்க்குப் போகத் தெர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணாக அறிமுகமானாலும், மனதில் அப்படியே பதியமாட்டேங்கிறார். வழக்கமான நாயகிகள் போல், லொடலொடெனச் சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அவரது குழந்தைத்தனத்தைப் (!?) பிரபு ரசிக்கிறார். பிரபுவின் அனுபவத்தால், அக்காட்சிகளை அவர் தாக்கிப் பிடித்தாலும், பிரியங்கா காட்சிகளின் சீரியஸ்னஸைக் குறைத்து விடுகிறார்.

மருத்துவர் அருண் போஸாக பிரபு. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் தான் அறிமுகமாகிறார். பின் இரண்டாம் பாதியில், சுலபமாகப் படத்தின் நாயகனாகி விடுகிறார். பிரியங்காவுடன் சற்றே நீண்ட ஃப்ளாஷ்-பேக் எனினும் கதைக்கு வலு சேர்க்கும் அத்தியாயம் அது. Prabhu acts Udhaya reacts என்று தான் போஸ்டரில் விளம்பரமே செய்யப்பட்டுள்ளது. ரவியாக உதயா நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. ரவி, DID (Dissociative Identity Disorder – பிளவுபட்ட அடையாளச் சீர்குலைவு) எனும் மனநல ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்டவர். புரியும்படி சொல்ல வேண்டுமெனில், அந்நியன் படத்தில் விக்ரமிற்கு உள்ள பிரச்சனை தான். Multiple Personality Disorder (பல ஆளுமை ஒழுங்கின்மை) என்பதன் இன்னொரு பெயர் தான் DID. மனநல மருத்துவர் தாண்டவனாக நடித்திருக்கும் தனஞ்செயன், மருத்துவ விளக்கத்தினை இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்லியிருக்கலாம். அந்நியன் சாயல் தெரிந்துவிடக் கூடாது என்ற படக்குழுவின் அதீத கவனமோ என்னவோ! ஆனால், பிரதான பாத்திரத்தைப் பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொள்ள எளிமைப்படுத்துவது மிக அவசியம்.

ஆனால், உதயா ஏனோ மனநலம் பாதிக்கப்பட்டவராகவே படம் நெடுக அனைவரையும் நம்ப வைக்கிறார். அதனாலேயே, முதல் பாதியில் அவர் படும் துயரத்திற்கான பரிதாபம் பார்வையாளர்களிடம் எழவில்லை. எதனோடும் ஒட்டாமல் பார்வையாளர்கள் கொஞ்சம் அந்நியப்பட்டே உள்ளனர். உதயா மெனக்கெட்டு இருந்தாலும், த்ரில்லருக்கான கண்ணி இடைவேளைக்குப் பின் கொஞ்ச நேரத்திலேயே அவிழ்ந்துவிடுகிறது. அதன் பிறகு உதயா react செய்யும் பொழுது, அதுவும் மனநலம் பிசகிய மோடிலேயே அவர் ரியாக்ட் செய்வதால் ரசிக்கமுடியவில்லை.

கோவை சரளாவின் அசட்டுத்தனமான நகைச்சுவைக் காட்சிகள் த்ரில்லர் படத்திற்கான மிகப் பெரும் ஸ்பீட் ப்ரேக்கர். ஸ்ரீமன் காமெடிப் போலீஸா, சீரியசான போலீஸா எனக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். படம், அதன் ஐடியாக்களால் மிகவும் ஈர்க்கிறது. மிகச் சிறந்த த்ரில்லர் படத்திற்கான கருவைப் படம் கொண்டுள்ளது. இயக்குநர் ஆஸிப் குரைஷி, அக்கருவை முழு நீள த்ரில்லருக்கான திரைக்கதையாகக் கோர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்த வருடத்தின் தனி ஒருவன் ஆக இருந்திருக்கும் ‘உத்தரவு மகாராஜா’.