இது தமிழ் ⚡ AMP

“எனது நாயகர்கள் Grey Shade கொண்டவர்கள்” – கார்த்திக் சுப்புராஜ் | RETRO

By Dinesh R | Apr 20, 2025

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ”பீட்சா படத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியில் கொண்டு வந்து, அதனைக் கலை வடிவமாக மாற்றும் திறமைக்காரர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் பணியாற்றும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் மிகவும் அன்பான நடிகர் சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. எப்போதும் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது தயக்கம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்தத் தயக்கத்தை உடைத்து இயல்பாக்கியவர் சூர்யா சார். படப்பிடிப்புத் தளத்தில் பூஜா ஹெக்டே எப்படி ரியாக்ட் செய்வாரோ, அதிலிருந்து ஒரு விசயத்தைக் கார்த்திக் சுப்புராஜ் எடுத்து இதில் பயன்படுத்தி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் என்னுடைய அம்மாவும் பாடியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்காகக் கடினமாக உழைத்து இருக்கிறோம். இது ரசிகர்களுடன் மாயாஜால தொடர்பை ஏற்படுத்தி வெற்றி பெறச் செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. கேங்ஸ்டர் படங்களை இயக்க வேண்டும் என்று வரவில்லை. க்ரே ஷேட் உள்ள கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவது எனக்குப் பிடிக்கும். என்னுடைய முதல் படமான பீட்சா படத்திலிருந்து ஹீரோ கேரக்டர் க்ரே ஷேட் உள்ளதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவர்களும் இல்லை. எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.

‘இறைவி’ திரைப்படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன்னுடைய சுதந்திரத்தை ஏன் ஒரு ஆணிடம் ஒப்படைக்கிறார் என்ற கேள்வி என்னுடைய சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய வீட்டில் மனைவி கூட, ‘ஏன் எப்போதும் வன்முறையான படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? எடுத்துக் கொண்டே இருக்கிறாய்! ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க மாட்டாயா?’ எனக் கேட்பார்.

‘ரெட்ரோ’ படத்தின் கதையை நான் பல வருஷத்திற்கு முன் எழுதினேன். நான் கதையைப் பற்றி முழுமையாகச் சொல்ல விரும்பவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தில் நானூறு பேர்களுக்கு மேல் பணியாற்றுவோம். திரையரங்கத்திற்குச் சென்று பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மேஜிக் செய்திருப்போம். அந்த அனுபவத்தைத் திரையரங்கில் முழுமையாகத் தர வேண்டும் என்பதற்காகத்தான் படத்தைப் பற்றி நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கத்திற்கு வாருங்கள். கண்டிப்பாக இந்தத் திரைப்படம் உங்களுக்குப் பிடிக்கும்.

நான் எழுதும் எழுத்துகளுக்கு ஒரு ஆன்மா இருக்கும் என்று உறுதியாக நம்புபவன்.‌ கதைகள் நாம் சந்திக்கும் நபர்களிடமிருந்து கிடைக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடைய நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ என்னுடைய ஃபேவரைட்டான படம். அதன் பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்தைப் பார்த்த பிறகு சிறந்த நடிகர் என்பதைப் புரிந்து கொண்டேன். இவருடன் எப்படியாவது இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கனவு கண்டேன். ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இணைந்தோம். இந்தத் திரைப்படம் ஏதோ ஒரு வகையில் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

படத்தின் படப்பிடிப்பை 90 நாட்கள் நடத்தத் திட்டமிட்டோம். ஆனால் 82 நாட்களில் தொடர்ச்சியாகப் பணியாற்றி நிறைவு செய்தோம். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ரெட்ரோ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.