Shadow

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் சிறுகச் சிறுக கடத்தி, படம் முடியும் அந்தக் கடைசி ஃப்ரேமில் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை நிரூபிக்கிறது.

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தில் இருக்கும் சில சாயல்கள் இப்படத்திலும் உண்டு. உதாரணத்திற்கு ஊரே பார்த்து நடுங்கும் ஒரு கொலைகார ரெளடி, அவனை நாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் ஒரு தொடை நடுங்கி ஹீரோ, ஒரு பழைய தியேட்டர், தியேட்டரை மையமாகக் கொண்ட பல்வேறு காட்சிகள், அந்த ரெளடியைக் கொலை செய்ய அலையும் எதிர் வரிசை கேங்குகள், அந்த ரெளடியிடம் மனம் விட்டுப் பேசியிராத அவனின் வயதான தாய் கதாபாத்யிரம் போன்ற சாயல்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸிலும் உண்டு. பேசாத வயதான தாயுக்குப் பதிலாக, புத்தி சுவாதீனம் இல்லாமல் உடன் இருக்கும் வயதான தகப்பன். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும், படம் சிறிது கூட தொய்வே இல்லாமல் செல்வது தான் இப்படத்தின் வலிமை.

எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம், ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம், அவரின் மனைவியாக வரும் கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரம், யானைகளை வேட்டையாடுபவனாக வரும் செட்டையன் கதாபாத்திரம், போலீஸ் டி.எஸ்.பி. –யாக வரும் தெலுங்கு நடிகர் நவீன் கதாபாத்திரம், லாரன்ஸின் தகப்பான நடித்திருக்கும் அந்தப் பெரியவரின் கதாபாத்திரம் என ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் அத்தனை நேர்த்தியாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் கதைக்கு மிகுந்த வலு சேர்க்கிறது.

நடிப்பிலும் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மனைவியாக வரும் நிமிஷா சஜயன், இளவரசு, அனைவரும் மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் சண்டைக் காட்சிகளையும் உணர்வுபூர்வமான நடிப்பையும் மிகவும் ரசிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக அந்த யானைகளை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரின் உடல்மொழி அதி அற்புதம். யானைகளை வேட்டையாடும் மூர்க்கமும், லாவகமும் சண்டையிடும் போது குரங்குகளைப் போல் தாவும் அந்த உடல்மொழி கண்களை விட்டு அகலவில்லை. மிகச் சிறப்பான தேர்வு. அது போல் டி.எஸ்.பி.யாக வரும் நவீன் ஒட்டுமொத்த வில்லத்தனத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பார்வையாளர்களைக் கொலை வெறிக்குத் தூண்டுகிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

கார்த்திக் சுப்பாராஜ் ஒரு கமர்ஷியல் இயக்குநராக அறியப்படுபவர். ஆனால், அவர் இப்படத்தில் பேசியிருக்கும் அரசியல் யாருமே எளிதில் பேசத் துணியாத ஒன்று. படத்தின் முதல் பாதி நன்று என்று சொன்னால், இரண்டாம் பாதியை அற்புதம் என்றே சொல்லலாம். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சி, தமிழ் சினிமாவின் தரம் உயர்கின்றது என்பதற்கான சான்று. இது போன்று உணர்ச்சி கொப்பளிக்கும் ஒரு க்ளைமாக்ஸ் காட்சியைத் தமிழ் சினிமாக்களில் எப்பொழுதுமே பார்த்ததில்லை (நான் கூற விழைவது, கடைசியில் வெள்ளித்திரையில் எஸ்.ஜே சூர்யா, க்ளின்ட் ஈஸ்ட்வுட் பின்னணியில் தோன்றும் காட்சி அல்ல; படம் பார்க்கும் போது அது பார்வையாளர்களுக்குப் புரியும்).

ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவும் உலகத்தரம். மொத்தத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ கமர்ஷியல் விடயங்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அதி அற்புதமான அரசியல் ஆவணப்படம் என்றே கூறலாம். இது கண்டிப்பாக மிகைப்படுத்தப்பட்ட பாராட்டுகள் அல்ல. இதற்குப் பின்னர் தமிழ் இளைய சமுதாயம் ‘க்ளின்ட் ஈஸ்ட்வுட்’ திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்க்கத் துவங்குவார்கள் என்பது இன்னொரு நல்ல விசயம் என்றால், அதைவிட மிகப் பெரிய நல்ல விசயம், இப்படத்தில் வெளிப்பட்டு இருக்கும் அரசியலையும் இந்த இளைய சமூகம் புரிந்து கொள்ளும் என்பதே!

கண்டிப்பாகத் தவறவிடக் கூடாத பார்த்தே ஆக வேண்டிய ஒரு திரைப்படம், இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கார்த்திக் சுப்பாராஜ்க்கு வாழ்த்துகள்.

– இன்பராஜா ராஜலிங்கம்