இது தமிழ் ⚡ AMP

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

By Dinesh R | Sep 02, 2026

பிரேமலு படத்து இயக்குநர், மீண்டும் மமிதாவுடன் இணைந்து, ஒரு ஜாலியான நகைச்சுவையான ஃபீல்-குட் காதல் படத்தைக் கொடுத்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கேரளத்தின் சில சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்கள், தான தர்மங்கள், சமூக தொண்டுகள் மற்றும் சர்ச்சின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க, தேவாலயத்தில் கூடும் குடும்பங்களைப் பிரிவுகளாகப் பிரித்து, அப்பிரிவுக்குப் புனிதர்களின் பெயரையோ அல்லது புனித இடத்தின் பெயரையோ சூட்டிக் குடும்ப யூனிட்களை உருவாக்குவார்கள். அது போன்ற ஒரு யூனிட்டான பெத்லகேம் எனும் குடும்ப யூனிட்டைச் சேர்ந்த ஜஸ்டினின் பக்கத்து வீட்டுக்கு ஆஷ்லி புதிதாகக் குடி வருவதில் இருந்து கதை தொடங்குகிறது.

ஆஷ்லியை விட பத்து அல்லது பன்னிரெண்டு வயது மூத்தவர் ஜஸ்டின். ஆஷ்லியின் மனதில் ஒரு பூ மலர்வது போல், இலையிலிருந்து சொட்டும் மழைத்துளி போல அழகாய், இயல்பாய் ஜஸ்டினின் மீது காதல் அரும்புகிறது. நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக வளரும் அவர்களது காதலுக்கு இடையூறு எழுகின்றது. அதிலிருந்து எவ்வாறு மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு.

பிரேமலுவில் நாயகனின் நண்பன் அமல் டேவிஸாகக் கலக்கியிருந்த சங்கீத் பிரதாப், நாயகனின் தம்பியாக இப்படத்திலும் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ‘ஜஸ்ட் கிடிங்’ என பிரேமலுவில் கவனத்தை ஈர்த்த ஷ்யாம் மோகனும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

தனது குணத்தால் எவரையும் வசீகரிக்கும் ஜஸ்டின் டேவிஸாக நிவின் பாலி அசத்தியுள்ளார். அவரது அத்தை அவரைக் குழப்பிய பின், அவருள் ஏற்படும் மாற்றங்களை அழகாகத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் நடித்தது போலவே ஒரு பாத்திரம் என்றாலும், இப்படத்தில் ஆர்ப்பாட்டமின்றி ஒரு மென் தூறல் போல் பார்வையாளர்கள் மனதில் படர்கிறார் மமிதா பைஜு. நாயகனின் வெட்கத்தையும் பதற்றத்தையும் ரசிக்கும்படி டீல் செய்கிறார். மமிதாவின் குறும்புத்தனம் மிக நுணுக்கமாக வெளிப்பட்டுப் படத்திற்கொரு ஃபீல்-குட் தன்மையை அளிக்கிறது.

படத்தின் நகைச்சுவைக்குப் படத்தின் ஏனைய கதாபாத்திரங்கள் பொறுப்பேற்கின்றனர். கதாபாத்திரங்களின் சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் அவர்களது இயல்பான வசனங்களில் ஒரு மாயத்தை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர் கிரிஷ் AD. பிரேமலுவைப் போல், இப்படத்தையும் கிரண் ஜோஸுடன் இணைந்து எழுதியுள்ளார் கிரிஷ். நாயகன், நாயகி மட்டுமல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பும், திரைக்கதையிலேயே இழைந்தோடிய நகைச்சுவையும் படத்தை அழகான ஹைக்கூ கவிதையாக்கி ரசிக்க வைத்துப் பார்வையாளர்களைப் புன்சிரிப்புடன் பெத்லகேம் குடும்பத்தின் அங்கமாக உணர வைப்பதுதான் இப்படத்தின் வெற்றி.