இது தமிழ் ⚡ AMP

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

By Dinesh R | Jul 18, 2025

நல்ல கலகலப்பான யூத்-ஃபுல்லான படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ராஜு ஜெயமோகன் பாவ்யாவைக் காதலிக்கிறார். ராஜுவின் நண்பனும் அதே பெண்ணைக் காதலிக்கிறார். ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான ஆதியா, VJ பப்புவைக் காதலிக்கிறார். யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவு.

படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ள விக்ராந்த், ராஜுவின் நண்பனாக வரும் மைக்கேல் தங்கதுரை, VJ பப்பு, பப்புவின் கோவக்கார அப்பா என கதாபாத்திர வடிவமைப்பிலேயே படத்தின் கலகலப்பிற்கு உறுதி செய்துள்ளார் ராகவ் மிர்தாத். இரண்டாம் பாதியில், காதலியின் வீட்டில் மாட்டிக் கொண்டு, VJ பப்பு திண்டாடும் காட்சிகள் ஓர் உதாரணம். முதற்பாதியில், ஆதியாவும் ராஜுவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கிறது.

காதலாவது, தோல்வியாவது, எதிர்காலமாவது என மிகத் தெளிவாக இருக்கும் Gen-Z தலைமுறையினர் பற்றிய படமிது. இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்கின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனாக முதற்படம் என நம்பமுடியாதபடிக்கு மிக அற்புதமாக நடித்துள்ளார் ராஜு ஜெயமோகன். கவின் நாயகனாக அறிமுகமான நட்புன்னா என்னானு தெரியுமா படத்திலேயே, தனித்துத் தெரிவார் ராஜு. அம்மாவுடன், நண்பருடன், காதலியுடன், பக்கத்து வீட்டுப் பெண்ணுடன், சிகரெட் பிடிக்கும் அப்பாவுடன், சீனியர் விக்ராந்துடன் என ராஜு யார் கூட திரையில் தோன்றினாலும் சிறப்பாகப் பொருந்தி விடுகிறார். படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லுமளவுக்கு நிவாஸ் K.பிரசன்னாவின் பின்னணி இசை மாயாஜாலம் செய்துள்ளது. ரசிக்கும்படியான வர்ணஜாலம் நிகழ்த்தியுள்ளது பாபு குமாரின் ஒளிப்பதிவு.

பன் பட்டர் ஜாம் – தித்திக்கும் இளமைத் துள்ளலான படம்.