சிவா, ராஜா, மணி ஆகியோர் ‘தளபதி’ படத்தின் வெளியீட்டு நாள் அன்று ஒரே மருத்துவமனையில் பிறந்த ரத்தம் சதையுமான நண்பர்கள். இதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த, ‘ஒரே வயிற்றில் பிறந்தா ட்வின்ஸ், ஒரே நாளில் பிறந்தால் ஃப்ரெண்ட்ஸ்’ என நாயகன் கவினை வாய்ஸ்-ஓவர் மூலம் சொல்ல விடுகிறார் இயக்குநர். ‘ஆஹா! தொடக்கமே அற்புதம்’ எனப் புல்லரித்து விடுகிறது.
மூன்று நண்பர்களுமே, ஸ்ருதி எனும் பெண்ணைக் காதலிக்கிறார்கள். நட்புக்குள் சத்திய சோதனை உருவாகிறது. சோதனையில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
ரம்யா நம்பீசனை மிகத் தைரியமான பெண்ணாக அறிமுகம் செய்கின்றனர். அதன் பின், வழக்கமான சினிமா ஹீரோயினாக்கி விடுகின்றனர். படம் முடிந்ததும், படக்குழுவினர் பெயர் மேலெழும் பொழுது, கவினை முன் வைத்து ரம்யா நம்பீசனுக்கும், இளவரசுக்கும் நடக்கும் உரையாடல் கூட ரசிக்கவைக்கின்றன.
எந்த நோக்கமுமற்ற வேலையில்லா நாயகனும், அவனது இரண்டு நண்பர்களின் வழக்கமான ஒப்பேத்தலுடன் முதற்பாதி நகர்கிறது. கவின், ராஜு, அருண்ராஜா காமராஜா ஆகிய மூவரும் நம்ம பசங்க உணர்வைத் தருவதால், பெரிய சுவாரசியமோ நகைச்சுவையோ இல்லையெனினும் பொறுத்துக் கொள்ளமுடிகிறது. நடிப்பிலும் சோடை போகாமல் அசத்திவிடுகின்றனர்.
நண்பர்களுக்குள் சுணக்கம் ஏற்பட்ட பின், இரண்டாம் பாதி படம் கலகலப்பான நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. நாயகன், நாயகியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ராஜுவும், அருண்ராஜா காமராஜாவும் செமயாக ஸ்கோர் செய்ய வாய்ப்பளித்துள்ளது திரைக்கதை. குறிப்பாக, அருண்ராஜா காமராஜாவின் வெகுளியான கதாபாத்திர வார்ப்பும், அதை தன் நடிப்பில் அவர் பிரதிபலித்துள்ள விதமும் அசத்தல். நல்லதொரு குணசித்திர நடிகராய்ப் பரிணமிக்கக் கூடியவர் கனா படத்தின் இயக்குநர். ராஜுவின் பெரிய கண்கள் காமிக்கலான அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.
கதாபாத்திரங்கள் மாறி மாறி தற்கொலை முயற்சி செய்வதையும் கூட ரசிக்கும்படி நகைச்சுவைக் காட்சியாக மாற்றியுள்ளார் இயக்குநர் சிவா அரவிந்த். படம் பரம சுபமாய் முடிந்த பின் கூட, கல்யாண மேடையில் ராஜு, நவினுடன் பேசும் வசனம், இயக்குநரின் நகைச்சுவை உணர்விற்குச் சான்று. அந்தக் காட்சியை அவர் முடித்த விதமும் சிறப்பு. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸின் இப்படம் கொஞ்சம் தள்ளிப் போனாலும், யுவராஜின் வண்ணமயமான ஒளிப்பதிவாலும், இரண்டாம் பாதியின் கலகலப்பான நகைச்சுவையாலும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும், எந்த சிரமுமின்றி படம் நன்றாகப் பார்வையாளர்களிடம் கனெக்ட் ஆகிவிடுகிறது.