இது தமிழ் ⚡ AMP

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்

By Dinesh R | Sep 05, 2026

பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சூதாட்டத்தில் தன் வயமிழக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது கையை இழக்க வேண்டி வருகிறது. அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு நன்கொடையாளரின் கையைப் பொருத்துகின்றனர். அதன் பின் டேன் ஜானிற்கு விசித்திரமான பிரச்சனை எழுகிறது. டேன் எப்படி அப்பிரச்சனையை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு.

இரண்டாவது நாயகனாக, விக்னேஷ் தாஸ் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்டனி வர்கீஸ். முதற்பாதியில் பார்வையாளர்களை முழுவதுமாக துல்கர் சல்மான் ஆக்கிரமித்து விட, இரண்டாம் பாதியில் ஆண்டனி வர்கீஸை நாயகனாக ஏற்றுக் கொள்ள சற்றே சிரமமாக உள்ளது. விக்னேஷ் தாஸாய் அவர் பார்வையாளர்களிடம் போய்ச் சேரவும் முழு முனைப்பை நடிப்பில் காட்டவில்லை ஆண்டனி வர்கீஸ். ஓர் அலங்கார நாயகனாகத் திரைக்கதையில் கொடுக்கப்பட்டுள்ள பில்டப்களுக்கு அவர் பொருந்தவில்லை. அல்லது தன்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. இயன்முறை மருத்துவர் (Physiotherapist) ஈஷாவாக வருகிறார் கயாடு லோஹர். தனக்கான வேலையைக் கச்சிதமாகவும் அழகாகவும் செய்துள்ளார்.

துல்கர் சல்மான் கலக்கியுள்ளார். அவரது வலதுக்கை அவரை அடிக்க, அதை இடதுக்கையால் அவர் தடுக்க என்ற குழப்பமானதொரு விஷயத்தைத் தெளிவாகப் பார்வையாளர்களுக்குக் கட்ததும் விதமாக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார் துல்கர் சல்மான். தோற்ற மனிதனாகவும், தோல்வியை ஒப்புக் கொள்ள இயலாமல் தப்பிக்கும் மனிதனாகவும், தன் கை ஏன் ஓர் அந்நியன் போல் செயற்படுகிறது எனத் தவிக்கும் மனிதனாகவும், வெவ்வேறு உணர்வுநிலைகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். கதை மீதும், தன் மீதும், இயக்குநர் மீதும் அசாத்திய நம்பிக்கை இருந்ததால் மட்டுமே இத்தகைய படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார் துல்கர் சல்மான்.

படத்தின் முதற்பாதி, ஒரு ரோலர்கோஸ்டர் பயணம் போல் பரபரப்பாக விறுவிறுப்பாகப் பயணிக்கிறது. ஃப்ளாஷ்-பேக் ஓப்பனான சில நொடிகளிளேயே, உள்ளங்கை நெல்லிக்கனி போல் அடுத்த என்ன நிகழும் எனத் தெரியத் தொடங்கி விடுகிறது. வில்லனுக்கும், இரண்டாவது நாயகனுக்குமான உரசல் எதற்காகவென பார்வையாளர்கள் சுலபமாக யூகிக்கும்படியான துப்புகளைப் படத்தின் முதற்பாதியிலேயே அழுத்தமாகக் காட்டி விடுகின்றனர். அதற்கு நாயகன் எப்படி எதிர்வினையாற்றுவான் என்பதையும் யூகிக்க முடிகிறது (நன்றி: காஞ்சனா தொடர். இங்கே பேய்க்குப் பதில், கை என்ற சிறு வித்தியாசம் மட்டுமே!) கையின் கதையைக் கேட்டதும் டேன் ஜான், கையின் பழிவாங்கும் நோக்கத்திற்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார். இப்படியாக முன்பாதியில், திரைக்கதையின் ஓட்டத்தில் இருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் மறைந்து, இரண்டாம் பாதி வழக்கமாய்ப் பார்க்கும் சினிமாவாகிவிடுகிறது. டேன் ஜானோ, அந்தக் கையோ, பழிவாங்கும் படலத்தில் எந்த இடத்திலும் சிறு புத்திசாலித்தனத்தையும் காட்டி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளனர். அதாவது திரைக்கதை எழுதியுள்ள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், அட்டகாசமான முதற்பாதியிலே முழுத் திருப்தியாகித் தனது கிரியேட்டிவ் எழுத்தாற்றலை இரண்டாம் பாதியில் சமரசம் செய்துள்ளார். படம் முடிந்த பின்பே யோகி பாபு திரையில் தோன்றினாலும், கலகலப்பான அந்தக் காட்சியோடு முடித்ததால் படம் ரொம்பவும் ‘அந்நிய’ப்படாமல் ரசிக்க வைக்கிறது.