காஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல், டாப்ஸி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள்; இப்போழுது காஞ்சனா-3 இல், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று கதாநாயகிகள். உலகக் கோப்பை கிரிக்கெட் போல, 4 வருஷத்துக்கு ஒரு தடவை முனி சீரிஸ் வருகிறது. 2023 இல் வரப் போகும், காஞ்சனா-4 இல் கண்டிப்பாக நான்கு கதாநாயகிகளை எதிர்பார்க்கலாம். அந்த நான்கு கதாநாயகிகள் இடுப்பிலும், நாயகனான ராகவா லாரன்ஸ் ஜம்ப் பண்ணி உட்காரப் போகிறார். நகைச்சுவையாமாம்!!
இந்தப் படத்தில், ஒரு இயக்குநராக பல புது முயற்சிகளைச் செய்துள்ளார் லாரன்ஸ். அதில் முக்கியமானது, பேய்ப் படமான காஞ்சனா franchise-ஐ அப்படியே நகர்த்தி சாமிப்படமாகவும், பக்திப்படமாகவும் முன்னெடுத்துள்ளார். காஞ்சனா படத்தில், நரசிம்மரிடம் பேரம் பேசுவார் சரத்குமார். இந்தப் படத்தில் அகோரிகள், காளிதேவியையே வர வைத்து பேய்க்கு அனுக்கிரகம் செய்கிறார்கள்.
பேயோட்ட வரும் வெளிநாட்டுக் கிறிஸ்துவர்கள், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல கையில் சக்தி வளையத்தை உருவாக்கிப் பேயோடு சண்டையிடுகிறார்கள். கதாநாயகன் வில்லனைக் கொல்லும் முன், அவருக்கு உதவும் பேயோட்டிகளைக் (!?) கூடக் கொடூரமாகக் கொலை செய்கிறார் ராகவா லாரன்ஸ்.
இயக்குநராக மாஸ்டரின் முதல் படம் “மாஸ்”. அது ஒரு தெலுங்கு படம். இந்த மாஸ்ங்கிற வார்த்தைல அவருக்கொரு அலாதியான பாசம். மாஸ், செம மாஸ், படா மாஸ், டபுள் மாஸ் என மாஸ்லயே பல பரிமாணத்த உருவாக்கப் பார்க்கிறார். அப்படி ஒரு மாஸான காட்சி படத்தில் இருக்கு. காளியண்ணனாக வரும் லாரன்ஸ் மாஸ்டர்க்கு, ரோசி என்றொரு காதலி. அவர் முதல்முறையாகத் தனக்கொரு ஆசை உண்டென நான்கு சுவரிற்குள் சொல்லும் அந்தரங்கமான ஆசை, வில்லனின் கையாள் ஒருவருக்குத் தெரிகிறது. இந்த மேஜிக்கல் ரியலிசம், மாஸ்டரின் புது முயற்சிகளில் இரண்டாவது.
கதாநாயகனுக்கு 3 மாமா குடும்பமும், 3 மாமா பெண்களும் இருக்கிறார்கள். தனது தாத்தா வீட்டுக்குச் செல்பவர், அவரை வரவேற்கும் தனது மாமாக்களிடம், “ஃபிகருங்க எங்க?” என அவர்களது மகளைப் பற்றிக் கேட்கிறார். அவர்களும், ‘உள்ள இருக்காங்க மாப்ள!’ எனச் சொல்கிறார்கள். பெற்றவர்களிடமே அவர்களது மகள்களை ‘ஃபிகர்கள்’ என்றழைப்பது நகைச்சுவையா? எத்தனை கீழ்த்தனமான அலட்சியம்!?
‘என்னடா இது?’ என குழந்தைகளோடு வந்த பெரியவர்கள் நெளிந்து கொண்டே இருந்தாலும், குழந்தைகள் நன்றாக எஞ்சாய் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பின், ‘இந்தப் படத்தையா ரசிச்சோம்?’ என நோகாத அளவிற்கு பொறுப்புணர்வோடு காஞ்சனா நான்காம் பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்கினால் தேவலாம். கதாநாயகிகளை ஆடைக் குறைப்பிற்காக என்று மட்டுமில்லாமல் கதையில் வரும் பாத்திரமாக/பாத்திரங்களாக உபயோகிப்பதைப் பற்றி அவர் சிந்திக்கவேண்டும்.
குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருபவர்கள் அரிதாகி வரும் காலத்தில், காமெடிப் பேய்ப்படம் என்ற சூட்சமத்தைக் கொண்டு கோடையில் வெளியிட்டு அசத்தி வருகிறார் லாரன்ஸ். கதாநாயகிகளின் எண்ணிக்கையிலும், கவர்ச்சிக் காட்சிகளிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், மாறி வரும் பார்வையாளர்களின் ரசனையையும் ராகவா லாரன்ஸ் கணக்கில் கொள்வது மிக அவசியம்.