இது தமிழ் ⚡ AMP

லீடர் விமர்சனம் | Leader review

By Dinesh R | Apr 03, 2026

தனது மகளுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் ஒரு பாசமிகு தந்தையின் அதிரடி ஆக்‌ஷன் தான் லீடர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சால்ட் எனும் ரெளடியைக் கண்காணிக்கிறார் காவல்துறை அதிகாரி இந்திரா. உண்மையைக் கண்டறிய சக்திவேல் எனும் மெக்கானிக்கின் மகளைக் கடத்தி துறைமுகத்திலுள்ள சந்தேகத்துக்குரிய கன்டெயினரைச் சாதுரியமாக மடக்குகிறார். அதனால் பெரும்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல், சால்டிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார், அவரால் எப்படித் தப்பிக்க முடிந்தது, உண்மையில் சக்திவேல் யாரென்பதற்கெல்லாம் பதில்தான் லீடர் படத்தின் கதை.

லெஜண்ட் சரவணனின் முதற்படத்திலுள்ள அதே பிரம்மாண்டம் இப்படத்திலும் உள்ளன. ஆனால், இப்படத்தில் ஆடம்பர பிரம்மாண்டமாக இல்லாமல் கதைக்குத் தேவைப்படும் விஷுவலில் பிரம்மாண்டம் காட்டியுள்ளனர். நடிப்பிலும், முதற்படத்தை விட பல மடங்கு மெருகேறிப் படத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். மகள் ஐரீன் மீதான பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மகளைக் காணும்பொழுது எழும் லெஜண்டின் புன்னகை உள்ளார்ந்த அன்போடு மிகப் பிரகாசமாக உள்ளது. அவரது முதற்படத்தில் இப்படியான அழகான தருணங்களே இல்லை என்று சொல்லலாம். இது சாத்தியமாக, இயக்குநர் துரை செந்தில்குமாரின் directorial மேஜிக் மட்டுமே காரணம்.

காவல்துறை உயரதிகாரி பக்தவட்சலமாக ஷாமும், இந்திராவாக ஆண்ட்ரியாவும் கம்பீரம் காட்டியுள்ளார். நாயகனை மையப்படுத்திய கதை என்றாலும், ஷாமிற்கும் ஆண்ட்ரியாவிற்கும் கதையில் சமமான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளனர். படத்தில் வில்லனாக வரும் சந்தோஷ் பிரதாப்பிற்கு இது முக்கியமான படமாக அமைந்துள்ளது. உண்மையில் அவரது பாத்திரம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் என்றே சொல்லலாம். ஆக்ஷன் படத்திற்குக் க்யூட்னஸைக் கொண்டு வந்துள்ளார் ஐரீனாக நடித்துள்ள இயல். நாயகனின் சக ஏஜென்ட் மீராவாக வரும் பாயல் ராஜ்புத்திற்கும், லெஜண்ட் சரவணனிற்குமான ரொமான்ஸ் போர்ஷனை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். லெஜண்ட் படம் கோட்டை விட்ட இடம் அது. படத்தொகுப்பாளர் பிரதீப் E.ராகவ் கைவண்ணத்தில் படம் பரபரவெனப் பறக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்கு ஜிப்ரான் வைபோதாவின் இசையும் கச்சிதமாக ஸ்ருதி சேர்த்துள்ளது.

படத்தின் முதற்பாதி விக்ரம் படத்தை நினைவுறுத்தும் தூத்துக்குடி துரந்தராகவும், இரண்டாம் பாதி பரபரவெனச் செல்லும் லெஜண்ட் அண்ணாச்சியின் சிங்கம் 2 வெர்ஷனாகவும் உள்ளன. துரை செந்தில்குமாரின் கைவண்ணத்தில், ஒரு பக்கா ஆக்‌ஷன் என்டர்டெயினராகப் படம் ஈர்க்கிறது. தேவையற்ற எந்தக் காட்சியோ, வசனமோ இல்லாமல் நூல்பிடித்தாற்போல் திரைக்கதையை அமைத்து அசத்தியுள்ளார் இயக்குநர். நிறைவான முடிவைப் படம் கொண்டிருந்தாலும், இரண்டாம் பாகத்திற்கான லீடையும் கனகச்சிதமாகக் கொடுத்துள்ளனர்.

(பிற்சேர்க்கை: நிகில் முருகன், மக்கள் தொடர்பாளராகப் பணிபுரியும் 600 ஆவது படம் லீடராகும். அவருக்கு வாழ்த்துகள்! 💐)