மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென பல படங்களைச் சொன்னாலும், உள்ளபடிக்கு அது மிகச் சில படங்களுக்கே பொருந்தும். அதிலொன்று இப்படம். காரணம், லெஜண்ட் சரவணன். தனக்குத்தானே சூடிக் கொண்ட விருப்பப் பெயரைப் படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தியுள்ளார். ஒரு மாஸ் படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உடைய படமாக வந்துள்ளது. காமெடி, சண்டை, சென்ட்டிமென்ட், சமூக அக்கறை என ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாதென கவனமாகக் கதையைக் கோர்த்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெர்ரி.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான சரவணன், தனது ஊர் மக்களுக்குப் பயன்படும்படி ஏதாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பூஞ்சோலை கிராமத்திற்கு வருகிறார். வாத்து மேய்க்கும் கணிதப் பேராசிரியையான துளசி மீது கண்டதும் காதல் வருகிறது. சரவணின் நண்பன் சர்க்கரை நோயால் இறக்க, அதற்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் சரவணன். அதனால், சில தனிப்பட்ட இழப்புகளையும், பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். அதையெல்லாம் கடந்து எப்படி ஒரு விஞ்ஞானி லெஜண்ட் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்துள்ளார். அவருக்கு மட்டும் டப்பிங் இல்லாமல் படப்பிடிப்பில் பேசிய ‘லைவ்’ குரலை அப்படியே பயன்படுத்தியுள்ளனர். அது, அவருக்கான நல்ல ட்ரிப்யூட் என்றாலும், அந்த ஒலி வித்தியாசம் படத்தின் ஓட்டத்திற்குக் கொஞ்சம் தடங்கலாக உள்ளது. படத்தில் இத்தனை பாட்டுக்கள் என முடிவெடுத்த பின், அதைக் கதைக்குள் வலிந்து திணித்துள்ளனர். தவறான இடத்தில் முளைக்கும் பாட்டுக்கள், படத்தின் ஓட்டத்திற்கு ஆளுயர வேகத்தடைகளாக உள்ளன.
விஜயகுமார், பிரபு, சச்சு, லதா, சுமன், நாசர், ஹரீஷ் பேரடி, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், தேவ தர்ஷினி, தீபா, யோகி பாபு, மயில்சாமி.. என படத்திலொரு நடிகர் பட்டாளமே உண்டு. அதாவது ஒன்றிரண்டு காட்சிகளுக்கு வரும் சின்ன கதாபாத்திற்குக் கூட நட்சத்திர நடிகர்களாகப் பார்த்து தேர்வு செய்துள்ளனர். தெரிந்த முகங்களால் நிரப்பி, படம் பார்க்கும் பொழுது தமிழ்ப் பார்வையாளர்கள் அந்நியமாய் உணராதபடிக்கு மேட்ச் செய்துள்ளனர் ஜேடியும் – ஜெர்ரியும்.
முழுப் படமும் ஒரு பெரிய 161 நிமிட விளம்பரமோ எனத் தோன்றும்படி, படம், தேவைக்கும் மீறி ரொம்ப கலர்ஃபுல்லாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது. கிட்டத்தட்ட, தமிழ் நடிகர்களால் நிரம்பிய தெலுங்கு படம் போல! படத்தொகுப்பாளர் ரூபன் மட்டும் கறார் காட்டியிருந்தால் படம் உள்ளபடிக்கே tightly packed மாஸ் மூவியாக இருந்திருக்கும். திரைக்கதையும், லெஜண்ட் சரவணாவிற்கான விளம்பரமாகவே பயணிக்கிறது. அதாவது, ஒரு காமன் மேன் எப்படி லெஜண்ட் ஆகிறார் என்றில்லாமல், ஒரு லெஜண்ட் ஏன் லெஜண்டாக இருக்கிறார் என்றிருக்கிறது. கதாநாயகனின் இழப்புகள், பார்வையாளர்களோடு கனெக்ட் ஆகியிருந்தால் படம் வேற லெவலில் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கும். லெஜண்டால் தான் எமோஷன்ஸைக் கடத்த முடியவில்லை என மனம் அவருக்கு சலுகை தரத் தயாராகியும் கூட, தம்பி ராமையா போல் அனுபவம் மிக்க நடிகர் கூட தன் மகளின் இழப்பை சரியாக வெளிப்படுத்தாது படத்தின் மிகப் பெரும் பலவீனம். ஸ்பூஃப் படமென சக நடிகர்களே முடிவு செய்துவிட்டால் எப்படி?
லெஜண்ட், யோகி பாபுவிடம், ‘நிறமோ, உருவமைப்போ முக்கியமில்லை. மனசு தான் முக்கியம்’ என்கிறார். எள்ளல்கள் உறுதி என்றான பின்னும், கொண்ட கொள்கையில் சற்றும் பின்வாங்காத விக்கிரமாதித்யனைப் போல, குறள் எண் 467 க்கு வாழும் எடுத்துக்காட்டாய் ஜொலிஜொலிக்கிறார் சரவணன். Comfort zone இலிருந்து வெளியில் வராதவர்களுக்கு நல்ல மோட்டிவேஷன் பூஸ்டர், சரவணனின் இந்த முயற்சி. ‘மக்களுக்காக நல்லது பண்ணணும்’ என்ற வசனத்தை மட்டும் பலமுறை சொல்கிறார் சரவணன். சரி லெஜண்ட் ரொம்ப நல்லவராக இருப்பார் போல் (படத்தில்) என நினைத்தால், விவேக் ஒருவரிடம் ஃபோனில் 16 இலக்க டெபிட் கார்ட் எண்ணைச் சொல்லி ஒன்றரை லட்சம் ரூபாய் ஏமாறும் பொழுது, அருகில் நின்று ரசிக்கிறார். போதாக்குறைக்கு, ‘நீ ஏமாந்ததுக்கு அவனை ஏன் குற்றம் சொல்ற?’ என victim blaming வேற செய்கிறார். நகைச்சுவையாம்!
அனல் அரசின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பலம். கையை அசைத்தாலே நூறு பேர் போய் விழுவார்கள் என்று கோரியோகிராஃப் செய்யாமல், ரசிக்கும்படி சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார் அனல் அரசு. ஒரு லெஜண்டாய்க் கோலேச்ச வேண்டிய சரவணனை, திரைக்கதையும் படத்தொகுப்பும், ஒரு சாதாரண மாஸ் ஹீரோவாக இறக்கியுள்ளதைக் கனத்த இதயத்தோடு பதிவு செய்ய வேண்டியதாகிவிட்டது.