இது தமிழ் ⚡ AMP

மருதம் – SRM உதவி பேராசிரியரின் இயக்கத்தில்

By Dinesh R | Sep 29, 2025

அறுவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்” ஆகும். சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர் அருள்தாஸ், “கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாகச் சொன்னார். மகிழ்ச்சியுடன் சென்று நடித்தேன். திரையுலகில் சாதிப்பதற்காகத் துடிக்கும் அனைவருக்கும் நான் தோள் கொடுப்பேன். நண்பர் வட தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்தப் பக்கத்துக் கதைகள் திரையில் வந்ததில்லை. ஆனால், இப்படத்தில் அந்த வாழ்வியலைக் கொண்டு வந்துள்ளார். விதார்த் இயல்பான நடிப்பைத் தரும் அழகான நடிகன். சிறப்பாக நடித்துள்ளார். ரகுநந்தன் முதல் படத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமைசாலி. தயாரிப்பாளர்கள் தைரியமாக இப்படி ஒரு படத்தைத் தயாரித்ததற்கு வாழ்த்துகள்” என்றார்.

NR ரகுநந்தன், “இயக்குநர் கஜேந்திரன் படப்பிடிப்பை முழுதாக முடித்து விட்டு வந்து தான் என்னிடம் போட்டுக் காண்பித்தார். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் இப்படி தான் வேலை பார்த்தேன். இசை நன்றாக வந்துள்ளது. விதார்த் உடன் முன்பே வேலை செய்துள்ளேன். அந்தப் படம் 60 விருதுகள் வாங்கியது. அயோத்தி படத்தின் போது அந்தப்படம் குறிஞ்சிப் பூ போல் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அதே போல், இந்தப் படமும் மக்களிடம் விவசாயி பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்றார்.

நாயகி ரக்‌ஷனா, “மருதம் என் இரண்டாவது படம், கடவுளுக்கு நன்றி. என்னைத் தேடி இந்த வாய்ப்பு தந்த கஜேந்திரன் சாருக்கு நன்றி. சார் எஸ் ஆர் எம்’மில் ப்ரொஃபசர் கண்டிப்பாக இருப்பார் என நினைத்தேன். ஆனால், என்னிடம் மிக இயல்பாகக் கனிவாக நடந்து கொண்டார். இரண்டாவது படத்தில் பெரிய ஹீரோ கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. அமேசிங்கான ஆக்டர் விதார்த் சார். அவருடன் நடித்தது ஒரு இனிய அனுபவம். ஒரு சின்ன கிராமத்தை மிக அழகாகக் காட்டியுள்ளனர். மிகுந்த வெயிலில் படம் எடுத்தோம். குழந்தைக்கு எப்படி அம்மாவாக நடித்தீர்கள் எனக் கேட்கிறார்கள். இது இங்கு தான் ஒரு ஸ்ட்ரீயோடைப். அதை உடைக்க வேண்டும் என நினைத்தேன். அம்மாவின் உலகத்தை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன். அது இந்தப் படத்தில் நடந்தது” என்றார்.

நடிகர் விதார்த், “இந்தப் படத்தில் நடிக்க நான் முதல் காரணம் அன்பழகன் அண்ணன். அவர் தான் கஜேந்திரன் சாரை அறிமுகப்படுத்தினார். கதை சொன்ன போது இது உங்களுக்கு நடந்ததா எனக் கேட்டேன். என் நண்பருக்கு நடந்தது என்றார். ஷூட்டிங்கில் அவரைச் சந்தித்தேன். இது இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடக்கிறது. இந்த விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக நேரில் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்தில் நடித்தது மிகுந்த சந்தோசம். மாறன் இப்படத்தில் முக்கியமான ரோல் செய்துள்ளார்.

‘ஜே பேபி’ படம் பார்த்து அவரிடம் நாமும் இணைந்து நடிக்க வேண்டும் எனச் சொன்னேன். இதிலும் காமெடி மட்டுமில்லாமல் கலங்க வைத்துவிடுவார். அருள் தாஸ் அண்ணா நல்ல ரோல் செய்துள்ளார். ரக்‌ஷனா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். அந்த ரோலில், ‘யாரை நடிக்க வைக்கலாம்?’ என்றார் இயக்குநர். திடீரென வந்த, ‘ரக்‌ஷனாவை நடிக்க வைக்கலாம்’ என்றார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம். கதாப்பாத்திரம் தான் முக்கியம் எனும் அவரது கொள்கைக்கு என் நன்றிகள். குழந்தை நட்சத்திரம் இயக்குநரின் மகன் எங்கள் எல்லோரையும் விட நன்றாகச் செய்துள்ளான். சரவணன் சுப்பையா சார் மிக அழகான ரோல் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அருள் கிராமத்து வெயிலில் அழகாகப் படம் பிடித்துள்ளார். கலை இயக்குநர் தாமு சார் செட் என்பதே தெரியாமல் அழகாகச் செய்துள்ளார். அனு சின்ன ரோல் எமோசனலாக செய்துள்ளார். விழாவின் நாயகன் ரகுநந்தன், ‘என்றாவது ஒரு நாள்’ படத்தில் பின்னணி இசையில் பின்னியிருந்தார். இந்தப் படத்திலும் அழகாகச் செய்துள்ளார். கஜேந்திரன் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். பட்ஜெட் போட்டு அவரே தயாரிப்பாளர் போல படத்தை எடுத்துள்ளார். என் படங்களில் தரமான படங்கள் லிஸ்டில் இப்படம் இருக்கும். வியாபார ரீதியாக இப்படம் ஜெயிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநரும் நடிகரும் சரவண சுப்பையா, “நான் என்ன நினைத்ததேனோ அதை விதார்த் பேசி விட்டார். கஜேந்திரன் ஃபிலிம் இண்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட், ‘சிட்டிசன்’ படத்தில் 7 ஆவது அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தார். 20 வருடங்களுக்குப் பிறகு, ‘சார், எஸ் ஆர் எம்மில் வேலை பார்க்கிறேன், இப்போது படம் செய்கிறேன். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார். மிக மகிழ்ச்சியோடு நடித்தேன். கார்பரேட், உண்மையான நல்ல மனிதனை எப்படி தவறு செய்ய தூண்டும் எனும் விஷயத்தை தைரியமாகச் செய்துள்ளார். கஜேந்திரன் மிகத் திறமையானவர். விதார்த் இந்தப் படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என நான் நேரில் பார்த்துள்ளேன். மிகப்பெரும் திறமைசாலி. வேலை பார்த்த அனைவரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப் படத்திற்கு முழுமையான ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இயக்குநர் கஜேந்திரன், “அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வாய்ப்பு வாங்கி தந்த கே.பி.பாலசந்தர் சாருக்கு இன்று நன்றி கூறிக் கொள்கிறேன். சிட்டிசன் படத்தில் எனக்கு உதவி இயக்குநராக வாய்ப்பளித்த சரவணன் சுப்பையா சாருக்கு என் நன்றிகள். இப்படத்திற்கு என் நண்பன் சாட்டை அன்பழகன் பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்திற்கு என்னை நம்பி முழு ஆதரவாக இருந்த என் தயாரிப்பாளருக்கு நன்றி. என் நண்பன் ஒளிப்பதிவாளர் அருள் சோமசுந்தரம் கடும் வெயிலில் எனக்காகப் பணியாற்றித் தந்தார். நாங்கள் படத்தையே ஷூட்டிங் செய்து முடித்து விட்டுத் தான் இசையமைப்பாளர் தேடினோம். உதயகுமார் சார் தான் ரகுநந்தன் சாரை அறிமுகப்படுத்தினார். படத்தை முடித்த பிறகு அதைப்பார்த்து நான் நினைத்த இடத்தில் நினைத்த உணர்வு வருவது போல அற்புதமான இசையைத் தந்தார் ரகுநந்தன் சார். அவருக்கு என் நன்றிகள். கல்லூரியில் பேராசிரியராக இருந்தாலும், எனக்கு 3 மாதம் லீவ் தந்தார்கள். அங்கேயே டப்பிங் செய்ய வசதி செய்து தந்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். நான் கதையில் யோசித்த நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு அற்புதமாக நடித்துத் தந்த விதார்த் அவர்களுக்கு நன்றி. நான், ரக்‌ஷனா இந்த ரோலில் நடிக்க மாட்டார் என நினைத்தேன் ஆனால் கதையைப் புரிந்து கொண்டு நடித்துத் தந்ததற்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.