அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறது ஒரு வட இந்திய குடும்பம். ராமேஸ்வரம் செல்லும் வழியில் விபத்துக்கு உள்ளாகி, அக்குடும்பத்தின் தலைவி ஜான்கி இறந்துவிடுகிறார். விடுமுறை தினமான தீபாவளியன்று மொழி புரியாத தேசத்தில் ஜான்கியின் கணவனும், மகளும், மகனும் அல்லாடுகின்றனர். ஜான்கியின் உடலினை வைத்துக் கொண்டு, அக்குடும்பம் எப்படி அல்லாடுகிறது என்பதுதான் படத்தின் கதை.
மத அரசியல் பற்றிய படமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது படத்தின் தலைப்பு. ஆனால், படத்தின் கரு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளது. ஒன்று, ஆணாதிக்கத்தையும், மத ரீதியான சடங்குகளில் அதீத பிடிப்புமுள்ள ஒரு மனிதரின் வறட்டுத்தனமான வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகிறது. இரண்டாவதாக, சாமானியனை அச்சுறுத்தும் அரசாங்க விதிகள்.
நெருங்கிய நபரின் மரணத்தின் பொழுது, கடைசிக் காரியங்களுக்கு உதவ ஆளில்லாமல் தனித்து விடப்படும் வேதனை மிகப் பெரியது. அதுவும் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இப்படியொரு இக்கட்டு ஏற்பட்டால்? அதை உணர்ந்து, ஓடி ஓடி உதவுகிறார் சசிகுமார். ஓர் அடி எடுத்து வைத்தால் ஏழு அரசாங்க விதிமுறைகளையும், அது சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. போலீஸ் ஸ்டேஷன், மார்ச்சுவரி, எம்பாமிங் செய்ய அரசு மருத்துவரிடம் அனுமதி வாங்குதல், விமான நிலைய மேலாளர் என சசிகுமாரைத் திரைக்கதை நகர்த்துகிறது.
கதை என்னவாக இருந்தாலும், சசிகுமாருக்காக ஒரு அறிமுக சண்டைக்காட்சி வைத்தே ஆகவேண்டுமென்று வலிந்து திணிக்கப்பட்ட சண்டைக்காட்சியைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் R. மந்திரமூர்த்தி. தான் சொல்ல வருவது பார்வையாளர்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என அஞ்சி, ‘இன்ன காரணத்துக்காகத்தான் இப்போ இந்த கேரக்டர் ஃபீல் செய்றாப்டி’ என ஃபிளாஷ்-கட் காட்சிகளை உபயோகித்த வண்ணமுள்ளார். பார்வையாளர்களின் படம் பார்க்கும் திறன் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருக்கலாம் மந்திரமூர்த்தி. ஆனாலும், படத்திற்கு மொழி ஒரு தடை இல்லை என்ற கருத்தாக்கத்தை நம்பி, தமிழ் சப்-டைட்டிலுடன் ஹிந்தியிலேயே வட இந்தியக் குடும்பத்தைப் பேசவிட்டு, அவர்களது நடிப்பால் சொல்லவந்ததை இயக்குநர் கடத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
இந்திய ஆண்களால், ஒரு முழு வாழ்க்கையையும் தன் துணையின் மீது ஆதிக்கம் செலுத்தி மட்டுமே வாழ்ந்து விட முடிகிறது. அப்படி ஒருவராக உள்ளார் அயோத்திவாசியான பல்ராம். குடும்பத்தினரைக் கூட சக மனிதராகப் பார்க்க அவருக்குத் தெரியவில்லை. மனைவியை அலட்சியமாக நடத்துவதை தன் உரிமையாகவும் தர்மமாகவும் நடந்து கொள்ளும் அதே பல்ராம், இறந்து விட்ட தன் மனைவி சொர்க்கத்தை அடையவேண்டும் என்பதிலும் அக்கறையாக உள்ளார். மனிதர்கள், இப்படியாக முரண்களால் ஆனவர்கள். அந்த முரணைத் தன் நடிப்பின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் யஷ்பால் ஷர்மா. நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் பயின்ற தியேட்டர் ஆர்டிஸ்டான இவரை, ஆளவந்தான் படத்தில் கமல் ஹாசனும், லகான் படத்தில் அமீர்கானும் பயன்படுத்தியுள்ளனர்.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் பல்ராமுடன், சுமார் 2400 கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டுமே என்ற எண்ணமே அவரது மகள் ஷிவானியை எரிச்சலுறச் செய்கிறது. அவராலான அழுத்தத்தைச் சுமக்க முடியாமல் ஓரிடத்தில் தந்தையிடம் வெடித்தழுகிறார். ஷிவானியாக நடித்துள்ள ப்ரீத்தி அஸ்ரானி மிக அற்புதமாக நடித்துள்ளார். மொழி புரியாத ஊரில் சிக்கிக் கொள்ளும் ஷிவானி, மற்றவரிடம் ஒரு விஷயத்தைக் கடத்த மொழியை விட கண் பார்வையும், உடற்மொழியுமே உதவுகிறது. ப்ரீத்தி அஸ்ரானி அதை அழகாகத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். நூல் பிடித்தாற்போன்ற ஒரு துல்லியமான நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார். இதே போன்ற கனமான கதாபாத்திரங்கள் அமைந்தால் மிகச் சிறந்த நடிகையென்ற புகழை விரைவில் எட்டுவார். ப்ரீத்தி இல்லையேல் அயோத்தி இல்லை எனும் சொல்லுமளவிற்குப் படத்தினைத் தனது நடிப்பால் சுமந்துள்ளார். அவரது தம்பி சோனுவாக நடித்துள்ள மாஸ்டர் அத்வைத்தும் சிறப்பாக நடித்துள்ளார்.
எமோஷன்ஸைப் பார்வையாளர்களுக்குக் கடத்த ரகுநந்தனின் பின்னணி இசை உதவியுள்ளது. மெளனத்தால் கனமாகக் கூடிய காட்சிகளிலும் இசையை அடர்த்தியாகப் படரவிட்டுள்ளார். தன் முதற்படத்திலேயே நம்பிக்கையூட்டும் இயக்குநராகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார் R. மந்திரமூர்த்தி. யதார்த்தங்களைக் கடந்த மெலோடிராமாவாக அயோத்தி ஈர்க்கிறது.
[…] அயோத்தி மூலம் நம் அடிநெஞ்சில் குடியிருக்கத் துவங்கிய ப்ரீத்தி அஸ்ரானி குடும்பப்பாங்கான மனைவியாக வந்து அசத்தியிருக்கிறார். குடிகார மாமாவாக, இயலாமையுடன் கூடிய உடல்மொழியுடன் வளைய வரும் பாவல் நவகீதன் முற்றிலும் புதுமையான வெகுளித்தனமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இரண்டு கைகளையும் தடவிக் கொண்டு பேசும் அந்த உடல்மொழி வாழ்க்கையில் தோல்வியுற்ற, அவநம்பிக்கையுடன் கூடிய ஒரு மனிதனை நம் கண் முன் நிறுத்த உதவி இருக்கிறது. […]