இது தமிழ் ⚡ AMP

“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

By Dinesh R | Jul 04, 2025

அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், லவ் மேரேஜ் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் சண்முக பிரியன், ”இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும் அன்பும், எனக்குக் குழந்தை பிறந்த போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம்.

முதல் படமாக குடும்பப் படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அக்காவைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் தங்கச்சியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதைக் கேட்கும் போது கொஞ்சம் கொச்சையாக இருக்கும். பெண்களை எப்போதும் அழகாகத்தான் காட்சிப்படுத்த வேண்டும் என என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்தக் கதையில் பெண்ணை இன்னும் அழகாகக் காட்சிப்படுத்தலாம் என்று அவர்தான் சொன்னார்.‌ அதற்குப் பிறகுதான் இப்படத்தின் திரைக்கதை முழுமையானது. இந்தக் கதையை எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட என் ஹீரோ விக்ரம் பிரபுவிற்கு முதல் நன்றி. படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் கொடுத்த ஆதரவு எல்லையற்றது. அவருக்கும் என் நன்றி.

நான் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான திரையரங்குகளில் வெளியிட்டதற்காக விநியோகதஸ்தர் சக்திவேலனுக்கும் நன்றி. படத்தின் பணிகள் நடைபெறும் போது தயாரிப்பாளரும், தொழில்நுட்பக் கலைஞர்களும், நான் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான ஒத்துழைப்பை வழங்கினர். படம் வெளியான பிறகு ஊடகத்தினரும், ரசிகர்களும் பேராதரவு அளித்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் போது எனக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்காக நான் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்திற்காக நடிகை சுஷ்மிதாவிடம் பேசும்போது படத்தின் முதல் பாதியில் நீங்கள்தான் ஹீரோயின். அதன் பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் போதும் உங்களுடைய பங்களிப்பு தேவை என்று சொன்னேன். அதன் பிறகு மீனாட்சியிடம் பேசும்போது நீங்கள் இரண்டாம் பாதியில் இருப்பீர்கள். படத்தினை விளம்பரப்படுத்தும் போது நீங்கள் இடம் பெற மாட்டீர்கள் என்று சொன்னேன்.

முதலில் தயக்கம் காட்டினார்கள். அதன் பிறகு என் மீது நம்பிக்கை வைத்து நடித்தார்கள். அதற்காக இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நடிகர் பிரபு பார்த்துவிட்டு, விக்ரமை நன்றாக நடிக்க வைத்திருக்கிறாய் என்று பாராட்டினார். இது எனக்குக் கிடைத்த சிறந்த பாராட்டாகவே கருதுகிறேன்” என்றார்.

விக்ரம் பிரபு, ”இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. இப்படம் வெளியான பிறகு திரையரங்கத்திற்குச் சென்று ரசிகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இப்படக்குழு மூலம் கிடைத்தது. நீண்ட நாள் கழித்து மதுரைக்குச் சென்றிருந்தேன். பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரையில் உள்ள திரையரங்கத்திற்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாகத் திரையரங்கத்திற்கு சென்ற போது மிகப்பெரும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து ரசித்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் இந்தப் படக் குழு மீது காட்டிய அன்பிற்கும் இந்தப் படத்தின் மீது ஊடகத்தினர் காட்டிய அன்பிற்கும் நன்றி. நான் ஷான் ரோல்டனின் ரசிகன். இந்தப் படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது. இந்த படத்தின் மூலம் நல்லதொரு ஆல்பத்தை கொடுத்து இருக்கிறார்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறாய் எனப் பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம். இந்தத் திரைப்படத்தைத் திரையுலகினர் பலரும் பார்த்து ரசித்து விட்டு என்னைப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பைச் சம்பாதித்து இருக்கிறேன்.

‘இறுகப்பற்று’ படத்தைப் பார்த்த பிறகு தான் எனக்கு இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்ததாக இயக்குநர் சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர். அதையெல்லாம் உடைத்து இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.