இது தமிழ் ⚡ AMP

நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

By Dinesh R | Jun 20, 2026

‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?’ எனப் பத்தாண்டுகளுக்கு முன் ‘பிச்சைக்காரன் (2016)‘ படத்தில் ஏகாந்த்ராஜ் எழுதிய பாடல் வரிகளில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தால் பிச்சைக்காரன், அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி என்று சசியே விளம்பரப்படுத்தியுள்ளார்.இரண்டு படங்களுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தனது தாய் செல்விக்கும் ஒரு வாழ்க்கை உண்டென உணர்ந்து, அவரை மறுமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறான் மூத்த மகன் பாஸ்கர். முதலில் தயங்கும் செல்வி, பின் அதற்கு மெல்ல செவி சாய்க்கிறார். ஊரும் உறவினர்களும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்றும், செல்விக்கு மறுமணம் ஆனதா இல்லையா என்பதே படத்தின் கதை.

நூறு சாமியின் அச்சாணியாக விளங்குகிறார் செல்வியாக நடித்துள்ள லப்பர் பந்து சுவாசிகா. படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்து, ஒற்றை மனுஷியாக இப்படத்தைத் தனது நடிப்பால் கரை சேர்த்துள்ளார். சில கதைகளும் கதாபாத்திர வடிவமைப்புகளும் நடிகர்களை நகர்த்திக் கொண்டு செல்லும். சிலர் மட்டுமே தன் நடிப்பால் கதையைக் கதாபாத்திரத்தைப் படத்தைத் தூக்கி நிறுத்துவார்கள். தனது நடிப்புத் திறமையால் சுவாசிகா இந்தப் படத்திற்கு நல்கியுள்ளது அப்படியொரு கொடையாகவே பாவிக்கமுடிகிறது. இப்படத்திற்காக நிச்சயம் சுவாசிகாவிற்குத் தேசிய விருது கிடைத்தே ஆகவேண்டும் என்பது போல் முத்திரை பதித்துள்ளார்.

இந்தப் படத்தின் பேசுபொருளும் கருவுமே, நூறு சாமியை மிக முக்கியமான படமாக ஆக்குகிறது. ஆனால், இக்கதையை ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அணுகாமல், ஒரு மகனின் பார்வையில் இருந்து மட்டுமே அணுகியுள்ளார். ‘உடம்போட தேவை’ என்ற வசனத்தோடு மட்டும் இப்படம் நைச்சியமாக அதன் கருவிற்கு நியாயம் கற்பிப்பதை நிறுத்திக் கொள்கிறது. தனது உயிரைக் காப்பாற்றியவரின் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்ற நல்லெண்ணமாகப் படத்தின் கரு நீர்த்துப் போய்விடுகிறது.

படத்தில் கவித்துவமான தருணங்கள் உண்டு. உதாரணத்திற்கு செல்விக்கும், அவரது வீட்டு மின்விசிறிக்கும் உள்ள பந்தத்தைக் காட்சிப்படுத்திய விதம். மனதில் உள்ளதைக் கொட்டுவதற்கு அனைவருக்கும் ஒரு வடிகால் தேவைப்படுகிறது. செல்வியின் அந்த வெற்றிடத்தைப் போக்குபவராக ஏழுமலை மாறினாரா எனும் புள்ளியைச் சசி தொடவில்லை. மாறாக, செல்வியின் மகன்களான பாஸ்கரையும் விவேக்கையும் தனது குடும்பமாக ஏழுமலை ஏற்றுக் கொள்வதாகப் படம் முடிகிறது. செல்வியின் வெறுமையைப் போக்கும் சக மனிதனாக இல்லாமல், அந்த மண்ணுக்கும் மனிதர்களுக்கும் பொருந்தாத தேவ தூதனாக ஏழுமலை கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய் ஆண்டனி.

‘இது என் வாழ்க்கை; என் தேர்வு’ என்ற தற்சார்பையோ சுதந்திரத்தையோ செல்வியின் பாத்திரத்திற்கு வழங்காமல், பெண்ணின் மறுமணத்தை இந்தச் சமூகத்தில் வாழும் பார்வையாளர்களை (ஆண்) ஏற்றுக் கொள்ள வைத்தாக வேண்டும் என ஒரு வித பதற்றத்தோடு கதையை அணுகியுள்ளார் சசி. ஏழுமலையின் மகளைச் செல்வி எப்படி ஏற்றுக் கொண்டார் என்ற கோணமே சசிக்குத் தேவைப்படவில்லை. இங்கே ஆணின் அங்கீகாரம்தான் முக்கியம், அவன் தான் தீர்மானிக்கும் அதிகாரம் உடைய குடும்பத்தலைவன், அவன் தான் நூறு சாமி என்ற பார்வை தெரிந்தே தெரியாமலோ பதியப்பட்டுள்ளது.