வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது.
“கெத்து” என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் பந்து போட்டுத் தன்னால் அவுட்டாக்க முடியுமெனத் தன் நண்பனிடம் சொல்கிறான் நட்சத்திர ஆல்-ரவுண்டரான அன்பு. அதைக் கேட்டுவிடுகிறார் கெத்தின் நண்பன். சின்னதாய்த் தொடங்கும் இந்த மோதல், கெத்து – அன்புக்கிடையே பலமான ஈகோவாக வளர்ந்து விடுகிறது. கெத்தின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என அன்புவிற்குத் தெரிய வருகிறது. காதலா, மோதலா, கிரிக்கெட்டா, குடும்பமா என முதன்மை கதாபாத்திரங்களுக்குள் சிக்கல் இறுகித் தளர்வதுதான் படத்தின் கதை.
முதன்மை கதாபாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்படாமல், துணை பாத்திரங்களை அரவணைத்துக் கொண்டு பயணிக்கிறது. படத்தின் குறிப்பிடத்தக்க தருணங்களை துணை பாத்திரங்களே படத்தில் உருவாக்குகிறார்கள். அன்பு பாத்திரத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்க்கு பாலசரவணன் நண்பனாக வருகிறார். கெத்து பாத்திரத்தில் நடிக்கும் அட்டகத்தி தினேஷின் நண்பராக ஜென்ஸன் திவாகர் நடித்துள்ளார். அன்புக்கு ஒன்றெனில் பாலசரவணன் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார். கெத்தின் திறமையை யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அவர் மீது தீராப் பகை கொள்கிறார் ஜென்ஸன் திவாகர். மைதானத்துக்கு உள்ளே ஒரு போட்டியென்றால், வெளியே பாலசரவணனும், ஜென்ஸன் திவாகரும் போட்டி போட்டுக் கொள்கின்றனர். படத்தின் கலகலப்பிற்கு உதவியதோடு மட்டுமல்லாமல், அவர்களது அந்த நட்பு படத்திற்குக் கூடுதல் வலிமையைக் கூட்டுகிறது. ‘நண்பேண்டா!’ எனச் சொல்லிக் கொள்ளவில்லை, நட்புக்கெனப் பிரத்தியேக இசையோ, சட்டகமோ தனித்து உருவாக்கப்படவில்லை. ஆனால் அந்த அழகான நட்பைப் பார்வையாளர்களால் கனெக்ட் செய்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதியில், கிரிக்கெட் போட்டியை கமென்ட்ரி செய்ய வரும் ஆதித்யா கதிரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார்.
வதந்தியில் வெலோனியாக அசத்தியிருந்த சஞ்ஜனா, துர்காவாக இப்படத்தில் தனது பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். துர்காவின் தந்தையின் பெயர் ‘கெத்து’, காதலனின் பெயர் ‘அன்பு’. கெத்திற்கும், அன்பிற்கும் இடையிலான இணைக்கும் கண்ணியாக உள்ளார். காரண பெயராகக் குறியீடாகத்தான் மைய ஆண் கதாபாத்திரங்களின் பெயரை இயக்குநர் அமைத்துள்ளார். கெத்து என்பது குணத்தினைக் குறிப்பது அல்ல. அது ஒரு பாவனை, ஒருவனின் தனி ஆவர்த்தனத்தை உயர்த்தி காட்டப் பயன்படும் அனுகரணவோசை (ideophone) ஆகும். தினேஷின் கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். படத்தில், கெத்தின் இயற்பெயர் பூமாலையாகும். அவரது தனிப்பட்ட இயல்பென்பது காதல் மனைவி யசோதையிடம் தன்னை ஒப்புவித்துக் கொள்ளும் சரணாகதி தத்துவமேயாகும். கிரிக்கெட் அவரது பலவீனம் என்றால், அவரது மனைவியே அவரது பலம். இயக்குநரின் கூர்மதியை வியக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு subtle ஆக அத்தனையையும் கையாண்டுள்ளார். சைவ உணவினராக இருந்து அசைவத்திற்கு மாறும் கெத்து ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்; அவரது மனைவி மாட்டுக்கறி உண்பவர். அவர்களுக்குள் இருக்கும் ஊடலும் காதலும் காவியத்தன்மை மிக்கதாக உள்ளது. அவர்கள் முன், இளம் ஜோடியான ஹரிஷ் கல்யாண் – சஞ்ஜனா சோடை போய்விடுகின்றனர். கோபக்கார இளைஞன் என்ற போதிலும், அன்பால் மாற்றத்தைக் கொண்டு வரமுடியுமென்ற தெளிவையுடைய நாயகனாக ஹரிஷ் கல்யாண் பாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
இன்னொரு கிரிக்கெட் படம் என ஒதுக்க முடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பவர், தினேஷின் மனைவி யசோதையாக நடித்துள்ள ஸ்வாஸ்விகா ஆவர். அவருக்கு, ஒரு பார்வை போதுமானதாக உள்ளது. அதன் மூலம் பல விஷயங்களைக் கடத்தி விடுகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்கிறார். மருமகளாக, மனைவியாக, அம்மாவாக, குடும்பத்தின் அச்சாணியாக அவர் படத்திற்குள் தன் இருப்பை மிக அழுத்தமாகப் பதிந்துள்ளார்.
படத்தின் உயிரோட்டத்திற்கு (Liveliness) இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் பெரும் பக்கபலமாய் அமைந்துள்ளது. நண்பர்களுக்குள் பேசிக் கொள்வதாகட்டும், எதிர் அணியினரை எரிச்சலூட்டும்படி கலாய்ப்பதாகட்டும், உறவுகள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதாகட்டும், வசனம் திரைக்கதைக்குள்ளே மட்டும் உழன்று ரசிக்கும்படி இருக்கிறது. ஒரு காட்சியில் பாலசரவணன், காளி வெங்கட்டிடம் ஒரு கேள்வி கேட்பார். அங்கு, ‘தம்பியாகப் பார்ப்பதற்கும், தம்பி மாதிரி பார்ப்பதற்கும்’ உள்ள வித்தியாசத்தில் தொக்கி நிற்கும் சாதிய மனநிலையைப் போகிற போக்கில் கேள்விக்கு உட்படுத்திவிடுகிறார் இயக்குநர்.
படத்தில் இன்னொரு கனமான காட்சி உண்டு. ஸ்வாஸ்விகாவிற்கும் அவரது மாமியாருக்கும் இடையே நடக்கும் உரையாடல். இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு, கணவனுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்துவிடும் ஸ்வாஸ்விகாவிடம் அவரது மாமியார் பேசுமிடம் மிக அற்புதமாக உள்ளது. மாமியார் – மருமகள் உறவை இத்தனை அழுத்தமாகப் பதிந்த வேறொரு படைப்பு இல்லவே இல்லை. எதையும் வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் சொல்லி அசத்திவிடும் தமிழரசன் பச்சமுத்துவின் பாணி ரசிக்க வைக்கிறது. அவரது எண்ணத்தைப் பிரதிபலிக்கும் உற்ற துணையாக தினேஷ் புருஷோத்தமனின் அட்டகாசமான ஒளிப்பதிவும், மதன் கணேஷின் படத்தொகுப்பும் அமைந்துள்ளது.
கிரிக்கெட்டும் இசையும் என்னவொரு அருமையான காம்போ! தினேஷ் களத்தில் இறங்கும்போது, ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம். ஊருக்கு நீ மகுடம்’ என்ற இளையராஜாவின் பாடலை ஒலிக்கவிடுகின்றனர். நம்மை அறியாமலே கொண்டாட்ட மனநிலைக்குத் தயார் செய்துவிடுகிறது இளையராஜாவின் இசை. ஹரிஷ் கல்யாண் களத்திற்கு வரும்போது, ‘ஆடுங்கடா என்னைச் சுத்தி நான் ஐயனாரு வெட்டுக்கத்தி’ என போக்கிரி படப்பாடல் ஒலிக்கவிட்டு ‘வைப்’ செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், அந்தக் கொண்டாட்ட மனநிலை குறையாமல் கடைசி வரை பார்த்துக் கொள்கிறார். ஓரிடத்தில், “என் வாழ்க்கை இப்படியாகும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை” என தொலைக்காட்சியில் குரல் ஒலிக்க, அதைக் கேட்டுத் திரையரங்கத்தில் எழும் சிரிப்பொலியே படத்தின் வெற்றிக்குச் சான்று. இசை, வசனம், நடிப்பு, கிரிக்கெட், கிரிகெட் கமென்ட்ரி என இயக்குநர் அத்தனை ஏரியாவிலும் அதகளம் பண்ணியுள்ளார். ஜாலியான நிறைவானதொரு படத்தைப் பார்க்க வேண்டுமென விரும்புபவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத படமிது.