இது தமிழ் ⚡ AMP

“போரின் வலியைச் சிரிப்பில் மறைத்துள்ள படம்” – த.செ.ஞானவேல் | Tourist Family

By Dinesh R | Apr 28, 2025

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், “இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை. டீசர் பார்த்து அவ்வளவு சிரித்தேன், இங்குப் படம் பார்த்தவர்கள் பேசுவதைக் கேட்கும்போது படம் பார்க்கும் ஆவல் கூடுகிறது. சசிகுமார் சார் முகத்தில் இத்தனை நாள் பார்க்காத மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. சசிகுமார் சாரை, மதுரையிலிருந்து இலங்கைக்குக் கூட்டிப் போனதற்கே பெரிய பாராட்டுக்கள். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என ஒத்துக் கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. ஒரு கதைச்சுருக்கத்தைப் படித்து ஒரு நிறுவனம் படம் செய்ய ஒத்துக்கொள்கிறது என்றால் அதை நம்ப முடியவில்லை, நல்ல கதைகளைத் தேடித் தயாரிக்கும் மில்லியன் டாலர் நிறுவனம் பெரிய வெற்றி பெற வேண்டும். பசங்க படம் தயாரித்த காலகட்டத்தில் சசிகுமார் சாரைப் பார்த்தது போலத் தான் அவர்களைப் பார்க்கிறேன் அதே உற்சாகம் அவர்களிடம் இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் த.செ. ஞானவேல், “ஒரு ஒரு போர் பத்தி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பத்தி, ஒரு குண்டு சத்தம் இல்லாமல் ஒரு அது சம்பந்தமான ஒரு அழுகாட்சி இல்லாமல், மிக ஆழமாகப் போரின் வலியை இந்தப் படம் பேசியுள்ளது. இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள். ஆனால் வலியைச் சொன்னால் கூட நமக்கு அது பாதிக்காது, ஆனால் வலியை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே, ‘அதெல்லாம் ஒன்னு இல்ல’ அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது. அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்குப் பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்தக் கதை. பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம். ஆனால் இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது, மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம். இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள். படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன், ஏனென்றால் அது போன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இயக்குநர் விநாயக் சந்திரசேகர், “இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு ஆச்சரியம், அவர் ஒரு கல்லூரி ஜூனியர் மாதிரி இருக்கிறார். ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் திடீரென்று வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வீரரைப் போல் ஆச்சரியப்படுத்துகிறார். சசிகுமார் பற்றி நினைக்கும் போதே சுப்பிரமணியம் படம் ஞாபகம் வந்துவிடும், அப்படி ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பது, அவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. இப்படத்தில் அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார். குட் நைட் ஸ்கிரிப்டை முடித்த போது, யாருக்கும் அது உண்மையில் பிடிக்கவில்லை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. நான் மனச்சோர்விலிருந்தபோது,தயாரிப்பாளர் யுவராஜ், ‘யாரும் தயாரிக்கவில்லை என்றால், நான் செய்கிறேன்’ என்று சாதாரணமாகக் கூறினார். மறுநாள் அவர் ஃபோன் செய்து தனது சொத்தை அடமானம் வைத்துவிட்டுத் திட்டத்தைத் தொடங்குவோம் என்று கூறினார். அதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். மில்லியன் டாலர் எப்போதும் நல்ல கதைகளாகப் படம் செய்யும். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.