Search

குட் நைட் விமர்சனம்

நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம்.

படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை.

எல்லா மனிதர்களோடும் நிச்சயமாக கனெக்ட் ஆகக் கூடிய கதை என்பதால் கதை மாந்தர்கள் அனைவருமே நமக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்தின் விஜய்சேதுபதியை சில இடங்களில் நினைவூட்டினாலும், அளவுக்கு அதிகமாகவே ரசிக்க வைக்கிறார் ஹீரோ மணிகண்டன். அவரது மச்சானாக வரும் ரமேஷ் திலக் அத்தனை அநாயாசமாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார். மணிகண்டன் அக்காவாக நடித்துள்ள ரேச்சல், சுயமரியாதையும் அறமும் உள்ள பெண்ணாக அசத்தியுள்ளார். ரமேஷ் திலக் – ரேச்சல் கெமிஸ்ட்ரி படத்தில் பக்காவாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. நாயகி மீதா ரகுநாத் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கான பின்கதையை அவர் நான்கு வரிகளில் சொல்லிக் கடந்து போவதே நமக்குப் போதுமானதாக இருக்கிறது. காரணம், ஒவ்வொரு காட்சியிலும் அவர் அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ள விதம். பாலாஜி சக்திவேலும், அவரது மனைவியாக நடித்தவரின் பாத்திர வார்ப்பும், நடிப்பும் ஆச்சரியம் தந்தது. இருவரும் வருகிற காட்சிகள் க்ளாசிக் ஹைக்கூ!

தன்பிடியைத் தளரவிட்டு விடக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இசையை வழங்கியிருக்கிறார் ஷான் ரோல்டன். ஆக்‌ஷன் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கு காட்டும் வித்தையை இசை மூலமாக இப்படியான ஃபேமிலி ட்ராமா படங்களுக்குக் காட்ட முடியாது. ஆனால் அந்தச் சவாலைச் சமாளித்து கதை டிமாண்ட் செய்த இசையை மட்டும் வழங்கியுள்ளார் ஷான் ரோல்டன். ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனும் தனது வேலையில் குறைகளே இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.

படத்தின் மையக் கதாபாத்திரத்தை மட்டும் சுற்றி கதை இல்லாமல், ரமேஷ் திலக் – ரேச்சல் பாத்திரங்களுக்கும் ஒரு தேவையை உருவாக்கி அதை பிரதான பாத்திரத்தோடு இணைத்த விதம் நன்றாக எடுபட்டுள்ளது. படத்தின் பெரும்பலமாக வசனங்கள் அமைந்துள்ளன. சின்னச் சின்ன ஒன்லைன்களில் அவ்வளவு ஃபன் ஃபேக்டர். தூக்கம் என்பது மேலதிக விடுதலை உணர்வு, அதன் லயத்தில் மனிதன் கண்டுண்டு கிடக்கும் போது சிலவற்றைக் கவனிக்க இயலாது. அதைப் பெருங்குறையாகப் பார்ப்பதை விட, அந்தக் குறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதே சிறப்பு என முடித்தமை தான் குட்நைட் படத்தின் அல்டிமேட் சிறப்பு.

– ஜெகன் கவிராஜ்