இது தமிழ் ⚡ AMP

“அப்பா அம்மாக்கள் தான் ரியல் ஹீரோ” – இயக்குநர் கார்த்திகேயன் மணி | Madras Matinee

By Dinesh R | Jun 18, 2025

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம், விஜய் டிவ் ராமர் போன்றோர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியாகித் தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், ”சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவையும் ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்தக் கதையைத் திரைக்குக் கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவைத் தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி, ”மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால், இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதைச் சொல்லும் கதை இது. தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.

அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாகச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்தத் திரைப்படம். புது தயாரிப்பு நிறுவனம், புது இயக்குநர், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்தக் கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால் ஊடகங்கள் இந்தப் படத்தை வெகுவாக ஆதரித்தன.‌

இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியைப் பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண், தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு, “நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர்” என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். படத்தைத் திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் வெளியான பிறகு, ‘காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்’ என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு லாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்குக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் காளி வெங்கட், ”இந்தப் படத்தில் என்னோட பாத்திரம் என்னுடைய தந்தையை நினைவுப்படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பைத் தெரிந்து கொள்வதற்காகத் திரையரங்கத்திற்குச் சென்ற போது, சிலர் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.

கலையில் மட்டும் தான் அழுவதைக் கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடிய வடிவேலுக்கு நன்றி.

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் படமாக்குவதில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு இயக்குநர் இந்தப் படத்தைப் பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன். ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனைத் திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.