Shadow

கார்கி விமர்சனம்

முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், கடைசி ஃப்ரேம் வரை நம் கவனம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த வருடத்தின் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாகக் கார்கி புகழடையும். 

பள்ளி ஆசிரியையான கார்கியின் தந்தையைக் காவல் துறையினர் கைது செய்துவிடுகிறது. சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கு என்பதால், காவல்துறையினர் ரகசியமாகவும் கவனமாகவும் இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவரால், விஷயம் கசிந்து, கார்கியின் குடும்பம் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறது. தன் தந்தை குற்றமற்றவரென நிரூபிக்கத் தனியளாகப் போராடுகிறார் கார்கி. ஈ மொய்ப்பது போல் சூழும் பத்திரிகையாளர்கள், தந்தையைச் சந்திக்க விடாத நுண்ணியமான அதிகார பலம், வேலையிழப்பு, அவமானம், சமூகத்தின் கோபம் என கார்கி எதிர்கொள்ளும் அனைத்துமே கனமானவை.

உண்மையில், படத்தின் கனத்தைக் கூட்டுவது, சிறு வயது கார்கியாக ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருக்கும் அன்ஷிதா ஆனந்த்தான். அந்த சிறுமியின் மருண்ட பார்வையும், அதில் தெரியும் பயமும், தன்னைக் காமுக ஆசிரியரிடம் தனியாக விட்டுச் செல்லும் அம்மாவை நம்ப முடியாமல் பார்ப்பதும், தந்தையின் பின்னால் பாதுகாப்பான உணர்வுடன் நிற்பதும் என சிறுமியின் கண்கள் அருமையாக உணர்வுகளைக் கடத்துகிறது. அதே போல், இயக்குநர் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தைக் காட்டாமலே, காட்சிகளுக்கான தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கும் யுக்தியும் பொறுப்புணர்வும் பாராட்டுக்குரியது (படம் முடிந்த பின், ஒரே ஒரு முறை, ஓரளவு ட்ராமாவில் (trauma) இருந்த மீண்டு சிறுமியின் முகம் காட்டப்படுகிறது).

கதையின் நாயகன், திக்குவாய் வக்கீல் இந்திரான்ஸ் கலியபெருமாளாகக் காளி வெங்கட் பிரமாதப்படுத்தியுள்ளார். ‘நான் வேணா இந்தக் கேஸ நடத்துட்டுமா?’ எனத் தயங்கித் தயங்கி அவர் கார்கியிடம் கேட்கும் இடமாகட்டும், ‘என்ன பண்றீங்க?’ என சாய் பல்லவியின் கோபத்தைத் திணறித் திணறிச் சமாளிப்பதாகட்டும், பப்ளிக் பிராசிக்யூட்டரின் ஏளனத்தை மீறி, கார்கியின் அப்பா வழக்கில் காவல்துறையினர் செய்த குளறுபடியைச் சுட்டிக் காட்டுவதாகட்டும், காளி வெங்கட் நிறைவாகத் தன் பங்கினைச் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக சித்தப்பு சரவணன் நடித்துள்ளார். கோபத்தில் கத்தியைத் தூக்கி உயர்த்திவிட்டு, அவர் உடைந்து அழும் இடத்தில் மனதை என்னமோ செய்கிறார். தன்னோடு கொஞ்சி விளையாடிய மகள், இப்போது ஒரு ஆம்பளையாகப் பார்த்து என்னைப் பார்த்துப் பயப்படுகிறது எனக் கலங்கும்போது பாரம் மிகுகிறது. பப்ளிக் பிராசிக்யூட்டராக ‘கவிதாலயா’ கிருஷ்ணனின் அனுபவம் அவரது எள்ளல் தொனிக்கும் வசனத்தில் பளீச்செனத் தெரிகிறது.

திருநர் நீதிபதியாக நடித்திருக்கும் முனைவர் S. சுதா, பப்ளிக் பிராசிக்யூட்டரின் எள்ளலுக்கு ஆளாகும்போது, “இந்த வழக்கிற்குத் தீர்ப்பு சொல்ல நான் தான் சரியான ஆளு. ஏன்னா ஒரு பொண்ணோட வலியும், ஆண்களுக்கு எங்க திமிர் இருக்கு என்று தெரியும்” என்பார். திரையரங்குகளில் கைதட்டல் ஒலி கேட்கிறது. தன்னை வாட்டும் பத்திரிகையாளர்களிடம், “நீங்க சொல்ல நினைக்கிறது நியூஸ் இல்லை; என்ன நடக்குதோ அதைச் சொல்லுறதுதான் நியூஸ்” என கார்கி சொல்லுமிடம் அசத்தல். படத்தின் பலமாக வசனம் அமைந்துள்ளது.

கார்கியாக சாய் பல்லவி. அவர் நடித்த கரு படமும் கதாநாயகியை மையப்படுத்திய படம்தான் என்றாலும், ஹீரோயின் ஓரியன்டட் படமாக, அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக கார்கி அமையப் போகிறது. ரத்தமும் சதையுமான ஒரு மையப் பாத்திரத்திற்கு உயிரைக் கொடுத்துள்ளார் சாய் பல்லவி. தந்தைக்காக துணிந்து போராடுவதாகட்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையிடம் இறைஞ்சுவதாகட்டும், சிறைக்குள் தந்தையைப் பார்க்க முடியாமல் தவிப்பதாகட்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியை உணர்வதாகட்டும், சாய் பல்லவி மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

கோவிந்த் வசந்தாவின் இசை, பார்வையாளர்களின் இதய துடிப்பினை நாடி பிடித்துப் பார்க்கிறது. ஆனால், சில தருணங்களில் மெளனத்தால் உண்டாக்கக்கூடிய கனத்தின் பரிமாண அளவு பெரிதாக இருக்கும் என்பதையும் அவர் கவனத்தில் கொள்ளலாம். கிடைக்கின்ற ஒரு நொடியையும் தவற விட்டுடக்கூடாது என ரசிக்கும்படி வாசித்துத் தள்ளியுள்ளார்.

எங்கு, எப்படி, யாரால் குழந்தைகள் பாதிப்புள்ளாவார்கள் என்றே யூகிக்க முடியாத அளவிற்கு அவர்களை ஆபத்து சூழ்ந்துள்ளது. கெளதம் ராமசந்திரனின் ரிச்சி படத்திற்கும், இப்படத்திற்கும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. மிகவும் சென்சிட்டிவான ஒரு கருவை, சகல விதத்திலும் மெச்சூர்டாகவும் நேர்த்தியாகவும் கையாண்டு, அற்புதமானதொரு படத்தைக் கொடுத்துள்ளார்.