இது தமிழ் ⚡ AMP

பூக்கி விமர்சனம் | Pookie review

By Dinesh R | Feb 13, 2026

பூக்கி என்றால் Gen Z அகராதியில், honey, darling, babe, என்னவன், என்னவள் எனப் பொருள்படும் வகையில், ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தையும் அணுக்கத்தையும் வெளிப்படுத்தும் செல்லம் கொஞ்சிக் கொள்ளும் சொல்லாம். அந்த மேஜிக் சொல்லிற்குள், Gen Z தலைமுறையினர், ஒட்டுமொத்த காதலையும் அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தனது பொருளாதார நிலையைப் பற்றி யாரேனும் பேசினால் தாழ்வு மனப்பான்மை எழுந்து முன்கோபம் கொள்ளும் கைலாஷை பிரேக்-அப் செய்கிறாள் ஆழி. பிரேக்-அப்பிற்குப் பின்னான அக்காதலர்களது மனநிலையே படத்தின் கதை.

படம் தொடங்கிய முதல் ஃப்ரேமிலேயே கதையும் தொடங்கி விடுகிறது. ஒரு சிம்பிளான கதையாகத் தோன்றினாலும், மையப் பாத்திரங்களின் மன ஓட்டத்தோடு, சமூகத்தின் நிலையையும் முன்வைக்கிறது படம். உதாரணத்திற்கு எத்தனை வகையான ரிலேஷன்ஷிப்கள் உள்ளன என்பதையும், Dating App-கள் இயங்கும் விதத்தைப் பற்றியும் எப்படி சுவாரசியமாகச் சொல்லியுள்ளனர் என்பதை ஸ்னீக்பீக் 2 -இல் காணலாம். ஒரு விஷயத்தை விஷுவலாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டுமென்ற இயக்குநரின் முனைப்பு பிரமாதமாக வேலை செய்துள்ளது.

பணத்திலேயே தான் கார்ப்ரேட் சாமியார்களின் கவனம் குறியாக இருக்கும் என கதையோடு சேர்த்துச் சொன்னது, நாயகி ஆழியின் பாட்டி டைமிங்கில் பார்க்கும் STR-இன் ரீல்ஸ், ஜிம் வாசலில் படுத்திருக்கும் நாயின் மைண்ட்-வாய்ஸ் வரும் ஃபேன்டஸி காட்சிகள் என எழுத்தாளர் புதிய பரிதி திரைக்கதையைப் பிரமாதப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த 3 BHK படத்தினை இரண்டு காட்சிகளுக்குள் அடக்கி எமோஷனலாக்கி உள்ளனர். புது வீட்டிற்குள் கலங்கிய கண்களுடன் செல்லும் பாண்டியராஜனின் நடிப்பும், அப்போது எழும் இசையும், பாடல் வரிகளும் அட்டகாசமாகப் பொருந்தி வந்துள்ளன.

மார்கன் படத்தில் அறிமுகமான அஜய் திஷன், நாயகனாக முழுப்படத்தையும் சுமக்குமளவு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதையின் போக்கைக் கணிக்கும்படி உள்ளதாலும், இடைவேளைக்குப் பின் ஒரு சின்ன சுணக்கம் திரைக்கதையில் எழுகிறது. ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள புதிய பரிதி மீண்டும் நூல் பிடித்து திரைக்கதையை ரசிக்கும் வகையில் கொண்டு வந்து விடுகிறார். குறிப்பாக, நாயகியின் பாட்டி பார்ப்பதாகக் காட்டப்படும் STRஇன் காணொளிகளை ஆங்காங்கே பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கின்றது. முதற்படம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு மிக நன்றாக நடித்துள்ளார் அறிமுக நாயகி தனுஷா.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகான கணேஷ் சந்திராவிற்கு, பூக்கி, இயக்குநராக முதற்படமாகும். இந்த ஆண்டின் காதலர் தினத்துக்கு வந்துள்ள நிறைவான காதல்படம். படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தைக் கூட, புதிய பரிதி கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, ஜிம் ட்ரெயினராக வருபவர், நாயகனைக் கன்னத்தில் அறையும் லாட்சியைச் சொல்லலாம். Gen Z தலைமுறையின் காதல் படம் என்பதால், இஷ்டத்திற்குச் சுதந்திரம் எடுத்துக் கொள்ளாமல், ஒரு நேரான (positive) வரையறைக்குள் படத்தைக் கொண்டு சென்று, பண்பார்ந்த (decent) படைப்பாகக் கொடுத்துத் திரை அனுபவத்தை நிறைவாக்கியுள்ளனர்.