32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

Dinesh R சேலம் Published: 02/07/2025 4 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும்  (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கும் வாசுதேவன், தன் தம்பியையும், தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்கிவிடுகிறார். அவரது உழைப்பின் பலனை அனுபவித்த தங்கையோ, ‘உன்னால் சொந்த வீடு வாங்க முடியாது’ என அண்ணனை ஏளனப்படுத்தி விடுகிறார். அந்த ஒரு சொல், வாசுதேவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. தனது கனவான சொந்த வீட்டை நோக்கி அடியெடுத்து வைக்கும்பொழுதெல்லாம், ‘பிள்ளைகளின் எதிர்காலம்’ அவர் கண் முன் வருகிறது. ஒற்றைக் கனவையும் பிள்ளைகளுக்காகச் சமரசம் செய்து கொள்ளும் நடுத்தர வர்க்கத்து தகப்பனாக வாசுதேவன் கதாபாத்திரத்தில் சரத்குமார் பிரமாதப்படுத்தியுள்ளார்.

படத்தின் முதற்பாதி நாயகன் வாசுதேவன் என்றால், இரண்டாம் பாதி நாயகனாக பிரபு உள்ளான். குடும்பத்திற்காக என்றில்லாமல், தனக்கு எது மன நிம்மதியைத் தருவதாக இருக்கும் என்று யோசித்து முடிவெடுக்கும் கணத்தில் பிரபு நாயகனாகிறான். ஒற்றைக் கனவை இருவரும் சேர்ந்து சுமந்தாலும், அப்பா – மகன் உறவில் தலைமுறை இடைவேளை எனும் கடினமான கட்டத்தைத் தவிர்க்கவே முடியாது. குடும்பத்தின் எதிர்காலத்தை மட்டுமே மனதில் கொண்டு வாழும் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்க்கு, தனிப்பட்ட விருப்பத்திற்கு முன்னுரிமை தரும் தலைமுறையைப் புரிந்து கொள்வதில் நிச்சயம் சிரமம் ஏற்படும். பின்னவர்கள் சுயநலம் மிக்கவர்கள் என முன்னவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. பிரபுவிற்கும் குடும்பமே பிரதானம் என்றாலும், அதற்காகத் தன்னை அடகு வைத்துவிட விருப்பமில்லாதவனாக உள்ளான். பிரபு கதாபாத்திரத்தில், படத்தின் இரண்டாம் பாதியில் கோலேச்சுகிறார் சித்தார்த்.

படத்தின் முதற்பாதியில், பள்ளி மாணவனாக வரும் சித்தார்த் தன்னை இளமையாகத் திரையில் தோன்றச் செய்யப் போட்டிருக்கும் மெனக்கெடல் சித்தித்துள்ளது. ஆனால் அவரால் நடுத்தர வர்க்கத்துப் பால்யத்தைப் பிரதிபலிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில், மீசை வைத்து, குறுந்தாடி வைக்கும் பொழுது பிரபுவாக மாறிவிடுகிறார் சித்தார்த். படத்தில் மிக மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர் ஒப்பனைக் கலைஞர்கள். பிரபுவின் கதாபாத்திரம் பதினேழு வயது முதல் நாற்பது வயது வரையும், வாசுதேவனின் கதாபாத்திரம் மத்திம வயதில் இருந்து நரை பருவம் வரை படத்தில் வருகிறது. இந்த மாற்றங்களை அழகாகத் திரையில் கொண்டுவந்துள்ளனர். கதை பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளேயே நிகழ்கிறது. அந்தச் சவாலை நேர்த்தியாக எதிர்கொண்டு ஒளிப்பதிவில் அசத்தியுள்ளனர். அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணமுள்ளது. 

ஒரு வீடு வாங்குவது அவ்வளவு முக்கியமா? அதற்கு இவ்வளவு அக்கப்போரா என்று படத்தை மேலோட்டமாக அணுகும் பொழுது கேள்வி எழலாம். வீடு என்பது உண்மையில் என்ன என்று படமுடிவில் கார்த்தியின் வாய்ஸ்-ஓவரில் தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர். மேலும், நவீன கலைவடிவங்கள் யாவும் தனிமனித சுதந்திரத்திற்கு மேலானது ஏதுமில்லை என முன் வைப்பதைப் போலவே, பிரபுவின் கதாபாத்திரமும் வீடு வாங்கும் திட்டத்தையே தூக்கிப் போட்டு, தனக்கு எது நிம்மதியையும் சுதந்திரத்தையும் அளிக்கிறதோ அதை நோக்கிச் செல்கிறது. புறவயமான செளகரியத்திற்காக அகத்தை அடமானம் வைத்துவிடக்கூடாது என்று அழுத்தமாகப் பதிந்துள்ளனர். படம் அங்கேயே நிறைவு பெற்று விடுவதால், படம் முழுவதும் உள்ள ஃபீல்-குட் தன்மையை, சுபமான முடிவை நோக்கிய நீட்டிக்கப்பட்ட கடைசிக் காட்சிகளினால் படம் சற்றே நீளமாகத் தெரிகிறது.

யூகிக்கக்கூடிய மிக எளிமையான கதை. ஆனால் அந்தக் கதைக்குத் தனது எழுத்தால் எந்த வணிக சமரசங்களுமின்றி அற்புதமாக உயிரளித்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். நாயகனின் நண்பனாகப் புதுக்கோட்டை அருகே கிராமத்திலிருந்து வந்து சென்னை பொறியியல் கல்லூரியில் படித்து வளாக நேர்காணலில் தேர்வாவதாக ஒரு நுண்ணிய கிளைக்கதையில் சமூக நீதியையும் அழகாகப் பேசியுள்ளார் இயக்குநர். பிரபுவின் தங்கை ஆர்த்தியாக வரும் மீத்தா ரகுநாத், பிரபுவின் பள்ளித் தோழியாக, மிக அற்புதமாக நடிக்கக்கூடிய (‘Toby’ கன்னடப்படம்) சைத்ரா J. ஆச்சார்  ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்குக் காரணம் ஸ்ரீ கணேஷின் எழுத்து! ஆங்காங்கே நகைச்சுவையும் பளீச்சிடுகிறது. கனவு காண்பதும், அதைத் தோளில் சுமப்பதும் ஆணின் வேலை என்ற தொனி படத்தில் இருந்தாலும், அதைத் தனதாக்கிக் கொண்டு குடும்பத்திலுள்ள பெண்கள் எப்படி ஆதரவளிக்கின்றனர் என அழுத்தமாகப் பதிந்துள்ளார் ஸ்ரீ கணேஷ். வாசுதேவனின் மனைவி சாந்தியாக நடித்துள்ள தேவயானிக்குச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் கிடைக்காவிட்டாலும், கணவனுக்கு உண்மையில் கோபம் எதன் மீது எனச் சுட்டிக் காட்டும் ஓர் அற்புதமான வசனத்தில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். படத்தின் ஆகப் பெரிய பலமாக உள்ளது வசனங்கள்.

3 BHK – புறத்தோற்றத்தாலோ, விசாலமான வெளியாலோ, வெளிச்சத்தாலோ, காற்றோட்டத்தாலோ அல்ல, வீட்டிலுள்ள மனிதர்களாலேயே வீடு அழகாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.