இது தமிழ் ⚡ AMP

ராஜா கிளி விமர்சனம்

By Dinesh R | Dec 27, 2024

கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி இப்படத்தை இயக்கியுள்ளார். முருகப்பா சென்றாயர் எனும் கோடீஸ்வரத் தொழிலதிபரின் வாழ்வையும் உயர்வையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுகிறது படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தெய்வானை எனும் மனைவி இருக்க, வள்ளிமலரை இரண்டாவது திருமணம் புரிந்து கொள்கிறார். பிறகு, விஷாகா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொள்ள விழைகிறார். விஷாகாவின் கணவன் இறந்துவிட, கொலைப்பழி வந்து சேர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவரின் வாழ்க்கை என்னானது என்பதே படத்தின் முடிவு.

வள்ளிமலராக சுபா தேவராஜ் நடித்துள்ளார். அவரது கணவராக கொட்டாச்சி நடித்துள்ளர். அவர், முருகப்பா சென்றாயரிடம் ஒரு ‘பேக்கரி’ டீலிங் போட்டுக் கொள்கிறார். ‘கெதக்’கென்று இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள், சிந்தாமணி எனும் பாத்திரத்தில் வரும் ரேஷ்மா பசுபலேட்டி மூலம் அடுத்த அதிர்ச்சியைத் தருகிறார். அடுத்து விஷாகாவாக வரும் ஸ்வேதா ஷ்ரிம்ப்டன், வள்ளிமலரையும் சிந்தாமணியையும் ஓரங்கட்டிவிட்டு முருகப்பா சென்றாயரைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார். இரவு 11 மணிக்கு, தொலைக்காட்சியில் லேகியம் விற்பவருக்கான ஸ்க்ரிப்ட் போல் இறங்கி அடித்துள்ளார் முருகப்பா சென்றாயர். முதற்பாதி படம், நகைச்சுவையாகவும் இல்லாமல், குணசித்திரமாகவும் இல்லாமல், தூக்கலான கவர்ச்சியும், இரட்டை அர்த்த வசனமும் உடைய படமாக உள்ளது.

விநோதய சித்தம் போல் ஒரு படத்தில் முழுமையான கதையின் நாயகனாக நடிக்கும் விருப்பம் கொண்டு, வாழ்க்கை பற்றியும், வாழ்வு மீதான பார்வை பற்றியும் ஒரு படத்தில் நடிக்கும் விழைவில் ஒரு கதை எழுதியதாகத் தெரிவித்திருந்தார் தம்பி ராமையா. சரவண பவன் அண்ணாச்சியின் உண்மைக் கதையை எடுத்துக் கொண்டு, தன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டுள்ளார் தம்பி ராமையா. முதற்பாதி போலல்லாமல், பணம் மனிதனைப் படுத்தும் பாட்டைச் சொல்லிவிட்டு, ‘மனிதருள் புனிதர்’ என முருகப்பா சென்றாயர் பாத்திரத்தை மிக அழகாக நிறுவிவிடுகிறார் தம்பி ராமையா. உறவென்பது பணத்தை மையப்படுத்தியது என அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. எவ்வளவு சம்பாதித்தாலும், வாழ்க்கை எந்தக் கட்டத்திலும் தடம் மாறிவிடும், அது நம் கையில் இல்லை என்பதையும் கூட இன்னமும் அழுத்தமாகப் பதிந்திருக்கலாம்.

‘அன்னை மடி’ காப்பகத்தை நடத்தும் ஆனந்தனாகச் சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவர் சாலையில் கண்டெடுக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரின் டைரியைப் படிக்கத் தொடங்க, முருகப்பா சென்றாயரின் வாழ்க்கை திரையில் விரிகிறது. கோடீஸ்வர் பாத்திரத்தை விட, பிச்சைக்காரர் பாத்திரத்திலும், மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்திலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் தம்பி ராமையா. முதற்பாதியைப் பொறுத்துக் கொண்டால், ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்’ என்பதைப் போல், இரண்டாம் பாதி இனிக்காவிட்டாலும், நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் குறித்த விசாரத்தில் ஈடுபடத் தூண்டுகிறது படம்.