Shadow

வினோதய சித்தம் விமர்சனம்

விபத்தில் சிக்கும் பரசுராமிடம், ‘தொண்ணூறு நாட்கள் தான் நீ உயிருடன் இருக்கப் போகும் காலம்’ என காலன் ஓர் ஒப்பந்தம் போடுகிறான். சாகும் நாள் தெரிந்துவிடும் பரசுராம், தந்தையாக தன் கடமைகளை முடிக்க ஆசைப்படுகிறார்.

“சாகுற நாள் தெரிந்து விட்டால் வாழுற நாள் நரகமாகிவிடும்” என்றொரு வசனத்தை ‘சிவாஜி’ படத்தில் பேசியிருப்பார் ரஜினிகாந்த். அப்படி, சாகும் நாளைப் பற்றி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது செய்து முடிப்பதைத் துரிதப்படுத்த அளிக்கப்படும் கிரேஸ் டைம் ஆகும். அதை வரமாக்கிக் கொள்வதும், நரகமாக்கிக் கொள்வதும், ஒவ்வொரு தனி மனிதனின் மனோநிலையைப் பொறுத்ததே! பரசுராம், அதை வரமாக்கிக் கொள்கிறாரா, நரகமாக உணர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.

காலையில் உடற்பயிற்சி செய்யும் தம்பி ராமையா லேசாகப் பயமுறுத்தினாலும், அவர் சமுத்திரக்கனியைப் பார்த்ததில் இருந்து படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. காலனாகச் சமுத்திரக்கனியும், பரசுராமாக தம்பி ராமையாவும் தோன்றிப் படம் முடியும் பொழுது சின்னதாய் ஒரு மாயத்தை நிகழ்த்துகின்றனர்.

இந்தப் படம் செய்த மாயங்களிலேயே முக்கியமானது, “இந்தப் படம் பண்ணதால் உளவியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கு. முதலில், பேச்சைக் குறைக்கணும் என்பது வந்திருக்கு” என பத்திரைகையாளர் சந்திப்பில் சொன்னார் இயக்குநர் சமுத்திரக்கனி. படத்தில் அது கண் கூடாய்த் தெரிகிறது. ‘வினோதய சித்தம்’ எனும் மேடை நாடகத்தை எழுதிய ஸ்ரீவத்சனுடன் இணைந்து விஜியும், சமுத்திரக்கனியும் வசனங்களை மிகக் கச்சிதமாகக் கொடுத்துள்ளனர். படத்தின் நீளமே (97 நிமிடங்கள்) அதற்குச் சாட்சி. ‘தி லாஸ்ட் சப்பர்’-உடன் படத்தை நிறைவு செய்திருக்கும் உருவகம் ரசிக்க வைக்கிறது. கூடவே, புத்தரைப் போல் நடு இரவில், தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம், பரசுராம் பிரியாவிடை பெறுவது போலும் உருவகப்படுத்தியுள்ளனர். காலன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று வசனத்தில் வருவதோடு மட்டுமல்லாமல், பிற மத நம்பிக்கைகளில் உள்ள கடைசி இரவையும் உள்ளே கொண்டு வந்திருப்பது உண்மையிலேயே தமிழ்த் திரைப்படங்களில் காணக் கிடைக்கும் வினோதமான சித்தம்தான். 

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல் இப்படத்தில் தம்பி ராமையா. அனைவருக்குமான முடிவுகளை அவரே எடுக்கிறார். கிடைக்கும் தொண்ணூறு நாட்களில், ‘எதுவும் கடந்து போகும்’ என்ற உண்மையை உணர்கிறார். அந்த உண்மையை உணர்வதற்காக தம்பி ராமையா சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் அளித்துள்ளார் சமுத்திரக்கனி. அலுத்துப் போய்க் கிடக்கும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இந்தப் படம்.

அடிக்கடி, ‘எங்க கணக்குப்படி எல்லாம் விதிக்கு உட்பட்டே  தான் நடக்கும். மனிதர் கையில் எதுவுமில்லை’ என்கிறார் திருவாளர் காலன். பார்த்தோமா, ரசித்தோமா என இந்த ஆபத்தான கருத்தாக்கத்தை உதறி,

‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற வள்ளுவர் வாக்கினை மறவாதிருத்தல் நன்று. மேலும், கண்ணியமாக உயிர் நீத்தல் என்பது மனிதர் கைகளிலேயே உள்ளது.

பிற்சேர்க்கை:-

பாளையத்தான்: //’எங்க கணக்குப்படி எல்லாம் விதிக்கு உட்பட்டே தான் நடக்கும். மனிதர் கையில் எதுவுமில்லை’ என்கிறார் திருவாளர் காலன். பார்த்தோமா, ரசித்தோமா என இந்த ஆபத்தான கருத்தாக்கத்தை உதறி,//

சில நேரங்களில் ஆம் என்பதே எனது கருத்து!

இதுதமிழ் பதிவர்: எப்பொழுதும் ‘ஆம்’ என்பது என் நம்பிக்கையும். ஆனா, “எது விதி?” என்பதில்தான் சிக்கல். ‘நடக்கிறதுதானே நடக்கும்’ எனச் சோம்பியிருப்பது விதி என்று சொல்ல முடியாது.

பாளையத்தான்: நம்மளாலான முயற்சி செய்தும் நடக்காமல் போவதை என்ன சொல்வது??

இதுதமிழ் பதிவர்: விதி தான்.

ஆனா அந்தப் படத்தில் ஒரு முரண் உண்டு.

எல்லாவற்றையும் தான் தான் முடிவு செய்கிறேன் என காலன் சொல்வார். மனிதர் கையில் ஒன்றுமில்லை என்பார். அப்படிப் பார்த்தால், ஒருவன் தீமை புரிய வேண்டும் என்பதையும் அவர்தான் முடிவு செய்கிறார் என்றாகிறது. நல்லவரும் கெட்டவரும், காலனின் கைப்பாவைப் பொம்மைகள் என்பதில் உடன்பாடில்லை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். என்ன வினை விதைக்கிறோம் என்பதை நாம் முடிவு செய்யலாம். அதற்கான வினையைத்தான் அறுக்கிறோமா என்ற கணக்கு மட்டுமே விதியின் கையில்.

பாளையத்தான்: சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.