இது தமிழ் ⚡ AMP

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

By Dinesh R | May 06, 2025

தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் வேலன்டினா, ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்படும் ஆய்வகங்களைத் தடயங்களின்றி அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்.

ரகசியமானதொரு ஆய்வரங்கத்திற்குச் சென்று, ஆவணங்களைத் திருட வரும் உளவாளியைக் கொல்லச் சொல்லி யெலெனா பெலோவாவிற்கு ஆணையிடுகிறார் வேலன்டினா. அதே சமயம், டாஸ்க் காஸ்டர், ஜான் வாக்கர், கோஸ்ட் எனும் ஆவா ஸ்டார் என மூவரிடமும், ஆவணங்களைத் திருட வரும் உளவாளியைக் கொல்லச் சொல்லி அனுப்பி வைக்கிறார். கோஸ்ட், டாஸ்க் மாஸ்டரைக் கொல்ல, மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்லப் பார்க்கின்றனர். சாட்சியங்களான தங்களைக் கொல்ல, வேலன்டினா செய்த சதி என்பதை யெலெனா உணருகிறாள். தண்டர்போல்ட்ஸ் அணி உருவாகிறது. அவ்வணியில் வின்ட்டர் சோல்ஜரான பக்கி பேர்ன்ஸும், யெலெனாவின் தந்தை ரெட் கார்டியனும் இணைந்து கொள்கின்றனர்.

தோல்வி அடைந்ததாகக் கருதப்பட்ட ‘சென்ட்ரி’ திட்டத்தில் தப்பிப் பிழைக்கும் பாப் ரெனால்ட்ஸிடம் (Bob), சூப்பர் பவர் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார் வேலன்டினா. ஆனால் சென்ட்ரியாகும் ரெனால்ட்ஸின் வெறுமை (Void), சென்ட்ரியை ஆக்கிரமித்துக் கொள்கிறது. வெறுமையாகும் ரெனால்ட்ஸ் கையை நீட்டினால், மனிதர்கள் மறைந்து, அவர்களது கடந்த காலத்தின் இருண்ட பக்கத்திற்குள் சிக்கிக் கொள்கின்றனர். அனைவரும் மறையச் செய்யும் சூப்பர் பவர் படைத்த வாய்ட்-ஐ எதிர்க்குமளவு தண்டர்போல்ட்கள் பலமான ஹீரோஸ் கிடையாது. எப்படி தண்டர்போல்ட்ஸ் அசாதாரண வாய்ட்-ஐக் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்பதுதான் படத்தின் முடிவு.

வேலன்டினாவின் உதவியாளார் மெல்-லாக ஜெரால்டின் விஸ்வநாதன் நடித்துள்ளார். அவரது தந்தை தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜெரால்டின் தானேற்ற கதாபாத்திரத்தை மிக நிறைவாகச் செய்துள்ளார். அவர் சம்பளத்தை உயர்த்திக் கேட்குமித்தில் மார்வெலின் பழைய கலகலப்பை உணர முடிகிறது. அச்சுறுத்தல் இல்லாத மிகச் சாந்தமான முகத்தைக் கொண்ட பாப் ரெனால்ட்ஸ், வாய்ட் ஆக மாறியதும் கலக்கம் ஏற்படுத்தும் வண்ணம் அவரது பாத்திரத்தை நேர்த்தியாக மாற்றியுள்ளனர். ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க பல அப்பாவி உயிர்களைப் பலி வாங்கும் வேலன்டினா நினைத்தது எதுவுமே நடக்காவிட்டாலும், நடப்பதை எப்படி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது ஆச்சரியமான முடிவு.

யெலெனோவின் தந்தை ரெடி கார்டியனாக வரும் டேவிட் ஹார்பர், அவரது அதீத ஊக்கத்தால் படத்திற்குக் கலகலப்பைக் கொண்டு வருகிறார். யெலெனோவாக நடித்திருக்கும் ஃப்ளாரென்ஸ் பக்-கும், டேவிட் ஹார்பரும், பிளாக் விடோ படத்தில் தோன்றியிருப்பார்கள். பலர் சாகசம் செய்தாலும் இந்தப் படத்தின் நாயகி ஃப்ளாரென்ஸ் பக்தான்.

படத்தின் முதற்பாதியில் இருக்கும் கலகலப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனால் சுவாரசியக் குறைபாடு இல்லாமல் ரசிக்க வைக்கிறது தண்டர்போல்ட்ஸ். மார்வெல்லின் மேஜிக் முழுமையாக வெளிப்படவில்லை என்றாலும், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திற்குப் பிறகு வந்துள்ள உருப்படியான படமெனத் தண்டர்போல்ட்ஸைச் சொல்லலாம்.