இது தமிழ் ⚡ AMP

வடம் விமர்சனம் | Vadam review

By Dinesh R | Mar 06, 2026

இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் அதைப் பிடித்து அடக்க வேண்டும். இது காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையேயான போட்டியாகக் கருதப்படுகிறது.

அடக்கவே முடியாத காளைகளை வளர்ப்பதைக் கெளரவமாகவும் வீரமாகவும் கருதுபவர் ரத்தினவேல். அவரால் விரட்டி விடப்பட்ட, ஒற்றைக் கண் காளைக் கன்றைத் தன் அன்பாலும் பயிற்சியாலும், யாராலும் அடக்க முடியாத காளையாகப் மாற்றி விடுகிறார் வெற்றிவேல். பாண்டி முனி எனும் அந்த காளையைத் தனக்குத் தரும்படி கேட்கிறார் ரத்தினவேல். வெற்றிவேல் அதற்கு ஒப்புக் கொள்ளாததால், அவர்கள் இருவருக்குள்ளும் பகைமை மூள்கிறது. அந்தப் பகை அவர்கள் இருவரையும் எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதே படத்தின் முடிவு.

ரத்தினவேலின் தாய்மாமன் ஐமன்னனாக முனீஷ்காந்த் நடித்துள்ளார். இரட்டைக் காளைகளுக்குப் பிரசவம் பார்ப்பவராக அறிமுகமாகிப் பெறாத மகளுக்காக உண்மையை ஒப்புக் கொள்ளும் முக்கியமான குணசித்திர வேடத்தை நிறைவாகச் செய்துள்ளார்.

வெற்றிவேலாக விமல். அடிக்கடி மீசையை நீவி விட்டுக் கொண்டாலும், எளிதில் நெகிழக்கூடிய வெண்மனசுக்காரராகப் படைக்கப்பட்டுள்ளது அவரது கதாபாத்திரம். முகத்தில் அதற்கான பாவனைகள் கொஞ்சம் கம்மியாகவே இருந்தாலும், கழுத்திற்குக் கீழ் எளிதில் நெகிழ்ந்து விடக்கூடிய தளர்ச்சியான உடற்மொழியில் உற்சாகமின்றிக் காணப்படுகிறார் விமல்.

ரத்தினவேலாக நட்டி கம்பீரம் காட்டியுள்ளார். அவரது காளை, களத்தில் வாகை சூடும்போது அவர் முகத்தில் காட்டும் பெருமிதமும் மந்தகாசமும் கதாபாத்திரத்திற்கு அற்புதமாக வலு சேர்ந்துள்ளது. நாயகனை உருகி உருகிக் காதலிக்கும் உதய கீதமாகத் தேவகியெனும் கதாபாத்திரத்தில் சானஷ்கா ஸ்ரீ அறிமுகமாகியுள்ளார். க்ளைமேக்ஸில் அவர் சீரியசாகக் கண்ணைக் கசக்கும் பொழுது, பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுவது இயக்குநர் V. கேந்திரனின் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள சின்ன குறை.

இளமி எனும் படத்தில், மூன்று வகை ஜல்லிக்கட்டு பற்றியும், அதில் வடம் ஜல்லிக்கட்டு எவ்வளவு ஆபத்தானது எனவும் டீட்டெயிலிங் செய்திருப்பார்கள். அப்படத்தில் வடம் ஜல்லிக்காட்டு மாட்டை எப்படி அடக்கவேண்டுமென கிஷோர் நாயகன் யுவனுக்கு வகுப்பெடுப்பார். இப்படத்தில், வடம் ஜல்லிக்கட்டு மாட்டிற்கு விமல் பயிற்சி அளிக்கும் காட்சிகளிலும் கூட போதுமான டீட்டெயிலிங் இல்லாமல் ஒப்பேத்தும் மான்டேஜஸ்களால் கடந்து விடுவதைத் தவிர்த்திருக்கலாம். D. இமானின் இசையில், பாண்டி முனி சீறித் துள்ளுவதைப் பெரிய திரையில் காண அட்டகாசமாக உள்ளது.