எளிமையான மனிதர்களின் காதல், தியாகம், வீரம் ஆகியவற்றை மதித்துப் போற்றும் வகையில் அவர்களை சிறு தெய்வங்களாக்கி வழிபடுவது நம் மண்ணின் மரபு. அப்படி 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.
மாங்குளத்தைச் சேர்ந்த வேட்டைக்காரனான கருப்புக்கும், கிளியூரைச் சேர்ந்த இளமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால், இளமியின் தந்தையான வீரைய்யனோ, தனது வடம் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குபவர்களுக்கே தன் மகளென ஊர்ப் பிரச்சனையொன்றின் பொழுது வாக்கு கொடுத்துவிடுகிறார். இளமி – கருப்பு இணையின் காதல் என்னானது என்பதே படத்தின் கதை.
ஜல்லிக்கட்டின் மேன்மையைப் பற்றிப் பேசும் காட்சிகளோடு படம் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு விளையாட்டல்ல, அது வீரம்; தமிழர்கள் தன் மானத்தை மாடுகளின் மீது இறக்கி வைத்தனர்; மாடு அணைபவனுக்கே பெண் என வசனங்கள் உள்ளன. மேலும், ஜல்லிக்கட்டின் வகைகளைப் பற்றியும் அழகானதொரு சிறு அறிமுகத்தைத் தருகின்றனர். அவை மூன்று வகைப்படும்: வெளி ஜல்லிக்கட்டு (மைதானத்தில் மாடுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் விடப்படுவது; உள் ஜல்லிக்கட்டு (மாடுகளை ஒவ்வொன்றாக வாடிவாசல் கதவின் மூலம் திறந்துவிடுவது); வடம் ஜல்லிக்கட்டு (வட்டத்துக்குள் இருக்கும் ஒரே ஒரு மாட்டை 9 பேர் அணைவது. அம்மாட்டின் கழுத்தில் கட்டப்படும் கயிற்றின் மறுபுறத்தைப் பாறை ஒன்றோடு கட்டி, அப்பாறையையும் மண்ணில் புதைத்து விடுவர்). இம்மூன்றில் வடம் ஜல்லிக்கட்டு ஆபாத்தானதாகக் கருதப்படுகிறது.
சாட்டை பட நாயகன் யுவன் கருப்பாகவும், கத்தி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த அணுகிருஷ்ணா இளமியாகவும் நடித்துள்ளனர். இருவருக்குமே அவர்கள் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும். இளமியின் தந்தை வீரைய்யனாக ரவி மரியா நடித்துள்ளார். இவரின் உதவியாளர் தான் இயக்குநர் ஜூலியன் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சடை புலி எனும் கதாபாத்திரம் வழக்கமான வில்லன் பாத்திரம் தான் என்றாலும், அப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் அகில் அச்சுறுத்துகிறார். அதுவும் க்ளைமேக்ஸில் சடை புலி செய்யும் காரியம் மனதின் அடி ஆழம் வரை பதற்றம் கொள்ளச் செய்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டிலும், இளந்தாரிகள் அவர்களது ஊரிலுள்ள பெரியவர்களை, “யோவ் பெருசு, கிழம்” என்றே அழைப்பார்கள் எனப் பதிந்துள்ளார் இயக்குநர். இப்பொழுது போலவே அப்பொழுதும், ஏன் எப்பொழுதுமே அதிகாரத்திற்கு முன் மட்டும் கேட்டுக் கேள்வியின்றிப் பணிந்து போவது, மனிதனின் மரபணுவிலேயே கலந்து விட்டிருக்கும் போல்! மதுரையின் படைத் தளபதியாக கிஷோர் கலக்கியுள்ளார். அவர் வருவதே மூன்று காட்சிகளில்தான் என்றாலும், அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார்.
கி.பி. 1715 ஆம் ஆண்டு, மதுரை வட்டாரமொன்றில் கதை தொடங்குவதாகக் காட்டப்படுகிறது. இவ்வளவு எளிமையான பீரியட் ஃப்லிம், எத்தகைய குளறுபடியும் இல்லாமல் தமிழில் வந்திருப்பதே ஆச்சரியம் அளிக்கிறது. மாங்குளத்தில் இப்பவும் உள்ள கருப்பு – இளமி கோயிலின் செவி வழிக் கதையில், அதிக மேல்பூச்சு இல்லாமல் ஜல்லிக்கட்டு ஃப்ளேவரோடு அழகான திரைக்கதை அழகாக்கியுள்ளார். ஆனால், க்ளைமேக்ஸ் மட்டும் சோகக் காவியமாய் முடிவது மனதைக் கொஞ்சம் தொந்தரவு செய்கிறது.