இது தமிழ் ⚡ AMP

சரண்டர் – ஈரம் அறிவழகனின் உதவியாளர் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர்

By Dinesh R | Jul 25, 2025

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்’ ஆகும். இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வினில் பேசிய மன்சூர் அலிகான், “இயக்குநர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. தர்ஷன் அருமையாக நடித்துள்ளார். இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது அது மக்களுக்குப் போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது” என்றார்.

இயக்குநர் கௌதம் கணபதி, “இது எனக்கு முதல் மேடை. என் குரு அறிவழகன் சார் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை, தேவைப்படவில்லை, தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. கேமராமேன், எடிட்டர், இசை என எல்லாமே அறிவழகன் சாரிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம். படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது” என்றார்.

இயக்குநர் அறிவழகன், “ட்ரெய்லர், படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. மனோஜ் சப்தம் படம் செய்தவர். இப்படத்தில் மிக நேர்த்தியாகச் செய்துள்ளார். எடிட்டர் ரேணு, என் எடிட்டர் சாபுவின் அஸிஸ்டென்ட். மிக நுணுக்கமாகப் படத்திற்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகச் செய்பவர். இப்படத்திலும் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் சிறப்பாகச் செய்துள்ளார். இசையமைப்பாளர் விகாஷ் படிஸா, என்னோட ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ்செய்தார். அவர் என்னிடம் அறிமுகமானபோது, ‘முதலில் ஒரு ட்ராக் செய்யுங்கள்’ எனக் கேட்டேன். அதிலேயே அசத்திவிட்டார். மிகத் திறமைசாலி. படத்திற்கான முழு உழைப்பை எப்போதும் தந்துவிடுவார். தர்ஷன், அவர் வந்த பிக்பாஸ் தான் நான் முழுமையாகப் பார்த்தது. நான் லவ் சப்ஜெக்ட் எடுத்தால் அவரை ஹீரோவாகப் போட வேண்டும் என நினைத்தேன். கௌதம் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தது மகிழ்ச்சி. கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார்” என்றார்.

நடிகர் தர்ஷன், “நாங்கள் ஷூட்டில் எவ்வளவு டிஸ்கஸ் செய்தாலும், ‘எடிட்டர் ரேணுவிடமும் கேட்டுக்கொள்வோம்’ என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார். ஓகே என்று தான் சொல்வார். எனக்கு இப்போது புதிதாகக் கதை சொல்ல வந்தவர்கள், அவர் தான் என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள். நன்றி சார். என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி. மன்சூர் அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்” என்றார்.

இப்படத்தில் தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:-

தயாரிப்பாளர் – VRV. குமார்
எழுத்து & இயக்கம் – கௌதமன் கணபதி
ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்
இசை – விகாஸ் படிஸா
படத்தொகுப்பு – ரேணு கோபால்
கலை – R K மனோஜ் குமார்
சண்டை – ஆக்‌ஷன் சந்தோஷ்
ஒலி வடிவமைப்பு – கே.பிரபாகரன் & பி.தினேஷ் குமார்
ஒலி கலவை – ஷரோன் J மனோகர்
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2 Media