
ரம்யா என்னும் மணமானப் பெண் தனது கள்ளத் தொடர்பு தெரிந்ததால் தற்கொலை செய்துக் கொள்ள, அதை விசாரிக்க வாசுதேவன் என்னும் காவல் துறை அதிகாரி வருகிறார். வாசுதேவனும் ரம்யாவும் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்தவர்கள். தன் காதலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் வாசுதேவன் மேலும் விசாரிக்கிறார். எதிர் வீட்டு மாமி, அந்த பிளாட்டில் வசிக்கும் முதியவர், வாட்ச் மேன் என அனைவரும் ரம்யாவின் பிளாட்டுக்கு ஒருவன் வந்து விட்டு போவதாக குறைக் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து குறை கூறிய மாமி ஒரு விபத்திலும், முதியவர் மர்மமான முறையிலும் இறக்கின்றனர். இந்த மூன்று மரணங்களிலும் தண்ணீர் தான் பிரதான ஆயுதமாக உள்ளது என்பதை மட்டும் கண்டுப்பிடிகிறார் வாசுதேவன்.
ரம்யா வீட்டுக்கு மர்மமான முறையில் வந்து விட்டப் போனவனை வாசுதேவன் பின் தொடர்ந்து சத்யம் திரையரங்கில் நுழைகிறார். அங்கு தன் கண்களையே நம்ப மறுக்கும் வாசுதேவனுக்கு கொலையாளி ரம்யா என்ற உண்மை புரிகிறது. அடுத்ததாக வாட்ச்மேனும் இறக்கிறார். ரம்யா வாசுதேவனுக்கு தன்னை கொலை செய்தது தன் கணவன் பாலா தான் என்கிற உண்மையை புரிய வைக்கிறாள். ரம்யா தன் கணவனை எப்படி பழி வாங்குகிறாள் என்றும் வாசுதேவன் தன் காதலியின் நடத்தையை எப்படி நிருபிக்கிறார் என்பதும் தான் கதையின் முடிவு.
மாமி, முதியவர், வாட்ச் மேன், பிளாட்டுக்கு வந்து விட்டு போனவன் என்ற அனைவரின் குறைக் கூறும் மனோபாவத்திற்கு பேராசை, சபலம் என உளவியல் ரீதியான காரணம் சொல்லப்பட்ட போதிலும் அதிலுள்ள சமூக அவலங்கள் நம்மைப் பார்த்து கண் சிமிட்டி எக்காளமிடுகின்றன. கணவனின் சந்தேகப் புத்தி வைத்து மற்றொரு கதையா என்ற அயர்ச்சி தெரியாமல் கதையை கச்சிதமான திரைக்கதையாக்கி நேர்த்தியான தொழில்நுட்பத்தின் உதவியோடு அருமையான படமாக ரசிகர்கள் முன் வைத்துள்ளார் இயக்குனர் அறிவழகன். அவரது அடையாளம் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்தது. இனி அது ‘ஈரம்’ படத்தின் இயக்குனர் என்று மாறும்.
படத்தை நிஜமாலும் தோளில் சுமப்பது ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளர் தமனும், எடிட்டர் கிஷோர் மூவரும் தான். நெருடல் இல்லாமல் பாடல்கள் படத்தோடு இணைந்ததாய் உள்ளது. தமன் தனது இசையால் படத்தை ரசிகர் மீது படர வைக்கிறார். ‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக சோபிக்காத தமன் இப்படத்தில் தனித்து நின்று படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
ரம்யாவாக வரும் சிந்து, வாசுதேவனாக வரும் மிருகம் பட நாயகன் ஆதி, பாலாவாக வரும் நந்தா, ரம்யாவின் தங்கை திவ்யாவாக வரும் சரண்யா மோகன் என அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக வந்த சிந்துவா என வியக்கும்படி நடித்துள்ளார் அல்லது நடிக்க வைக்கப் பட்டுள்ளார். கதாநாயகன் ஆதிக்கு அவரது மிருகம் படித்தில் இருந்து நேரெதிர் கதாபாத்திரம். ஆனால் தன்னை அழகாக பொருத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். நநதாவின் நடிப்பிற்கு சவாலான ஒரு கதாபாத்திரத்தை அலட்சியமான முகபாவங்களாலேயே உணர்த்தியுள்ளார். எதிர் வீட்டு மாமி, சபல கேஸ்களான முதியவர் மற்றும் பிளாட்டுக்கு வந்து விட்டு போகிறவன், வாட்ச்மேன், விக்கி கதாபாத்திரத்தில் வரும் நந்தாவின் நண்பன் என துணை நடிகர்களும் குறைவின்றி நடித்துள்ளனர்.
அமானுஷ்ய கதைகளில் நியாயமாக எழக்கூடிய கேள்விகளை கதை சொல்லும் விதத்தில் சமாளித்துள்ளார் இயக்குனர். பழி வாங்கும் கதை என்றவுடன் வெள்ளை புடவை சுற்றிக் கொண்டு வரும் பேத்தல்களுக்கு எல்லாம் சமாதி கட்டியுள்ளது பாராட்டுதலுக்குரியது. அலட்டிக்காமல் வந்து விட்டு போகும் ஆவேசப்படாத ஆவி தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதனால் பேய் படம் பார்க்கும் ஒரு உணர்வு எழாது. ஆனால் காட்சியமைப்புகளும், இசையும் திகிலுக்கு பஞ்சம் வைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. மழையும், தண்ணீரும், தண்ணீர் சார்ந்த உணர்வும் மாறி மாறி படம் முழுவதும் வருகிறது. ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கு குறியீடாக சிகப்பு வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு சத்யம் தியேட்டரில் ‘ஜென்ட்ஸ் டாய்லெட்’ என சிகப்பில் இருப்பதை காட்டுவது. படத்தில் உபயோகப்படுத்துக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் முறையாக பயன்படுத்தியுள்ளனர்.
“S” பிக்சர்சின் கல்லாப் பெட்டி மீண்டும் ஒரு முறை நிறைந்து வழியும் என்பதே நிதர்சனம்.