Shadow

சப்தம் விமர்சனம்

ஓர் அமானுஷ்ய சக்தி, சத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, அவ்வாமானுஷ்யத்தைப் புலனாய்வு செய்ய புலனுக்கெட்டாத (Paranormal) மர்மத்தைக் கண்டுபிடிக்க, மும்பையில் இருந்து ரூபன் வைத்தியலிங்கம் மூணாருக்கு வரவைக்கப்படுகிறார். அந்தச் சத்தத்தின் பின்னாலுள்ள மர்மத்திற்கான பதிலே இப்படத்தின் கதையோட்டம்.

ஈரம் படத்திற்குப் பிறகு, ஆதி, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் அறிவழகன் ஒன்றிணைந்துள்ளனர். நீரை மையமாகக் கொண்டு ஈரத்தில் கலக்கியவர்கள், இதில் சத்தத்தைத் தொட்டுள்ளனர். ஒலியைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் மிகப் பெரும் பாய்ச்சலைச் செய்துள்ளது. சினிமா விஷுவல் மீடியம் எனச் சொல்லப்பட்டாலும், அது உண்மையில் மல்ட்டி மீடியாவாகும். அதன் ஒரு பகுதியான ஒலியைக் கொண்டு ஒரு கதையைச் சொல்லியுள்ளனர். படத்தின் முதற்பாதி ஈர்ப்பிற்கு அதுவே காரணமாக அமைகிறது.

இரண்டாம் பாதியில், மர்மங்களுக்கான புதிரை அவிழ்க்கும் படலத்தில் திரைக்கதை வலுவாக இல்லாமல் போய்விடுகிறது. ஈரத்தில், பேயின் பழிவாங்கும் நோக்கிற்கு ஒரு வலுவான காரணம் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கும். அப்புள்ளியைத் தவறவிட்டதுதான், இப்படத்தின் தொய்விற்கு மிக முக்கிய காரணம். ஈரத்தில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் ஒரு குற்றத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். தொடக்கத்தில் கொல்லப்படும் மாணவர்கள், மைய பிரச்சனையோடு சம்பந்தமில்லாதவர்கள். 42 பேய்கள் சேர்ந்து, சும்மா பொழுதுபோக்கிற்காகத் தாங்கள் அனுபவித்த வலியை அம்மாணவர்களுக்கு அளிக்கின்றனர். அதுவும் அந்த 42 பேய்களும், டயானா என்பவரது உடலில் இருந்து ஆன்மா வெளியானால் மட்டுமே பழிவாங்குகிறார்கள்.

உண்மையில் கொல்லப்படும் அம்மாணவர்கள், தனிமையில் உழன்று கொண்டிருந்த 42 பேய்களுக்கு நன்மை புரியும் விதமாக, டயானாவின் ஆன்மாவை உடலில் இருந்து வெளியேற உதவி, மீண்டும் அனைவரையும் ஒன்றிணைய உதவவே செய்கின்றனர். பிரதான வில்லன்கள் வந்திறங்கியதும், பேய்கள் எல்லாம் ஹைபர்னேஷன் மோட்க்கு மீண்டும் போய்விடுகின்றனர். நாயகன் ஆதியோ, டயானாவின் ஆன்மாவிடம் கெஞ்சிக் கொண்டுள்ளார். உண்மையில் அந்த 42 பேய்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழிவாங்கும் எண்ணமே இல்லாத சாத்வீகிகள். டயானாவைப் பார்த்ததும், அந்த பிஞ்சு பேய்களின் நெஞ்சில் நஞ்சு பாவி விடுகிறது.

மிக அற்புதமாகத் தொடங்கும் படம், கதையின் போக்கால் இரண்டாம் பாதியில் மிகவும் அலைக்கழிக்கித்து விடுகிறது. சின்க் சினிமாவின் ஒலி வடிவமைப்பும், T. உதய் குமாரின் ஆடியோகிராஃபியும் புதிய சினிமா அனுபவத்தை வழங்குகின்றன. நல்ல ஒலியமைப்புடைய திரையரங்குகளிலேயே அதை முழுமையாக அனுபவிக்க இயலும். இயக்குநர் அறிவழகன் இவர்களை நம்பி, திரையைக் கருப்பாக்கிவிட்டு, ஒலியாலேயே கதை சொல்லும் சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.