இது தமிழ் ⚡ AMP

ONE MAN விமர்சனம்

By Dinesh R | Aug 20, 2026

சினிமா மீது ஒப்பற்ற காதலும், தன் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மகத்தானதொரு முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளார் இயக்குநர் ராச்குமார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சியைக் கோரும் தொழிலாகும். ஆனால், சங்ககிரி ராச்குமார் தனி ஒருவராக, ஒப்பனை, VFX, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என சுமார் 78 துறை சார்ந்த வேலையைக் கையாண்டுள்ளார். கற்பனைக்கு மிஞ்சியதொரு அசுரத்தனமான உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரே ஒப்பனை போட்டுக் கொண்டு, கேமராவை இயக்கி, நான்கு வேடங்களில் தோன்றி, நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

மனிதர்கள் அனைவரும் பூமியில் இருந்து மறைந்து விட, ராஜா, ஜாக், பூமா, ரூபி ஆகிய நான்கு நண்பர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். யாருமில்லா உலகில், பத்து நாட்கள் மகிழ்ச்சியாக வலம் வரத் திட்டமிடுகின்றனர். அதன் படி நாடு நாடாகச் சுற்றி அமெரிக்காவை அடைகின்றனர். பத்து நாட்கள் முடியும் சமயத்தில், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. அவர்களது பயணத்தின் முடிவு என்னானது என்பதே படத்தின் கதை.

சாதனையை நோக்கமாகக் கொண்டு உருவாகும் படம் என்றான பின், பார்த்திபன் போல் கதையைச் சாமர்த்தியமாக ஓரிடத்தில் நடப்பது போல் காட்டாமல், ஹாலிவுட் கதைகளுக்கு சவால் விடுமளவு பிரம்மாண்டமான கதையை எடுத்துக் கொண்டுள்ளார். ஹெலிகாப்டரில் சண்டை, ட்ரெயின் விபத்து, அமெரிக்கப் பாலத்தில் கார் துரத்தல் என அசர வைத்துள்ளார் சங்ககிரி ராச்குமார்.

பயோஸ்கோப் படத்தில் இயல்பாய் மிளிர்ந்த இயக்குநரது நகைச்சுவையுணர்வு இதில் இல்லை. இப்படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் சில சோதனைகளுக்குப் பார்வையாளர்களை உட்படுத்துகிறார். வசனங்களிலும், கதாபாத்திர வார்ப்பிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அது நடிப்பிலும் பிரதிபலித்து மெருகூட்டியிருக்கும். ஆனால் படம் முடியும் தருவாயில், தனிமை எவ்வளவு கொடுமை என்பதையும், உறவுகளின் மகத்துவத்தையும், நண்பர்களின் மாண்பையும் மிக ஆழமாக உணர வைத்துவிடுகிறார். கூடவே, படம் முடியும் பொழுது, இந்தப் படத்திற்காக எப்படி அசுரத்தனமாக உழைத்துள்ளார் என்ற வியப்பும் மரியாதையும் சங்ககிரி ராச்குமார் மீது எழுகிறது. உண்மையில் மகுடத்திற்கு உரியவர் இவரே!