‘ஒன் மேன் ஷோ’வாய் ஒரு திரைப்படத்தில் தான் மட்டுமே திரையில் தெரியவேண்டும் என்பது பார்த்திபனின் பல்லாண்டு கனவு. திறன்மிகு தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு, அக்கனவை ஒத்த செருப்பு சைஸ் -7 என்ற நேர்த்தியானதொரு படத்தின் மூலம் நனவாக்கிக் கொண்டுள்ளார். எழுதி, தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாய் நடித்ததன் மூலம், ஒத்த செருப்பு படத்தை, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் சாதனையாக இடம்பெற வைத்துவிட்டார் பார்த்திபன்.
அதி அற்புத முயற்சி, தொழில்நுட்ப அதிசயம் என்ற தனித்த அடையாளத்தைப் பெற்றாலும், இப்படைப்பின் பேசுபொருள் எவ்வித அறத்தையும் பேணாதது மிக துரதிர்ஷ்டவசமானது. ஒரு படைப்பு எதைப் பேசுகிறது என்பதை வைத்து மட்டுமே அந்தப் படத்தின் கலையம்சத்தைத் தீர்மானிக்க இயலும். அன்பையோ, அறத்தையோ மையக்கருவாகக் கொள்ளாமல், மனித மனதைப் பற்றிய விசாரமும் செய்யாமல், படத்தில் நிகழும் நான்கு கொலைகளையும் போகிற போக்கில் நியாயப்படுத்தி விடுகிறார் பார்த்திபன்.
ஜூலை 2015 இல் வெளியான கமலின் ‘பாபநாசம்’ படத்திற்குச் சென்சாரில் U சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தும், குடும்பங்கள் கொண்டாடிய அப்படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது. அதற்கு, ‘ஒரு கொலையைச் செய்துவிட்டு, அதை மறைக்க முற்படுவது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று சென்சாரில் காரணம் சொல்லப்பட்டது. அப்படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதெனினும், ‘அவர்கள் சொல்லும் காரணம் ரொம்ப நியாயமானதாக இருக்கு’ என்று கமலும் அதைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்.
சமூக நீதி, அறம், அன்பு முதலியவைகளுக்கு ஒரு படைப்பாளன் காட்டும் சிரத்தையைப் பொறுத்துதான் அவன் கலைஞனாக உருகொள்கிறானா, அல்லது படைப்பாளனாக மட்டுமே தேங்கி விடுகிறானா என்பதை நிர்ணயிக்க இயலும். ‘த்ருஷ்யம்’ பட முடிவில், விபத்தாய் நிகழ்ந்து விடும் கொலையை மறைத்த குற்றவுணர்வு இல்லாமல், இறந்துவிடும் மகனின் தாயிடம், தன் கூட்டைப் (குடும்பத்தைப்) பாதுகாக்கவே அழையா விருந்தாளியாய் வந்தவனை நீக்க வேண்டியதாகி விட்டதென எந்த சலனமும் இல்லாமல் சொல்வார் மோகன்லால். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதை முதன்மை அறமாக முன் வைப்பார் மோகன்லால். ஆனால், பாபநாசத்தில் கமலோ, தற்காப்பிற்காக என்றாலுமே ஓர் உயிர் போகக் காரணமாகி விட்டோமோ என்ற குற்றவுணர்வில், ஓர் எளிய மனிதனாய் உடைந்து போய் விடுவார்.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
என்பது உலகப் பொதுமறை வகுக்கும் தமிழரின் அறம்.
ஒத்த செருப்பின் மாசிலாமணிக்கோ, மாஞ்சா நூல் கொண்டு “கரகர”வென கழுத்தை அறுத்து, பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொல்வது ஆனந்தத்தை அளிக்கிறது. எதுவுமே சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக உணர்ச்சிவசப்பட்டுச் செய்யப்படும் கொலைகள் அல்ல. மாசிலாமணி அப்படிக் கோரினாலும், அவை அனைத்துமே திட்டமிட்டுச் செய்யப்படும் படுகொலைகள். பேசிப் பேசியே தன் கொலை பாதகச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்.
மாசிலாமணி எனும் கதாபாத்திரத்திற்கு ஒரு பிரச்சனை எழுகிறது. அவரது மனைவி உஷா குளிப்பதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி, அவளைப் படுக்கைக்கு அழைக்கிறார்கள் மூன்று பணக்காரர்கள். இதையறிந்து கோவப்படும் மாசிலாமணி, கலைவாணர் அரங்கம் பக்கத்தில் இருக்கும் டி1 போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகாரளிக்கச் செல்கிறார். “பணக்காரர்களை ஏன்ய்யா பகைச்சிக்கிற? பேசாம ஜாகையை மாத்திட்டுப் போயிடு” எனச் சொல்கிறார் அந்த ஸ்டேஷனின் கான்ஸ்டபிள். மாசிலாமணியும், முன்பு வேலையில் இருந்த பழைய இடங்களுக்கு ஃபோன் செய்கிறார். அங்கே வேலை எதுவும் காலி இல்லாததால், இருப்பிடத்தை மாற்றாமல் கிளப்பிலேயே பணி புரிகிறார். மனைவி அனுபவிக்கும் கொடுமையை விட, கிளப்பில் கிடைக்கும் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் பெரிதாகத் தெரிகிறது மாசிலாமணிக்கு.
மாசிலாமணி நினைத்திருந்தால் புது வேலையைத் தேடிக் கொண்டு, இடத்தை மாற்றிக் கொண்டிருக்க முடியும். வேலையெதுவும் கிடைக்காவிட்டாலும் கூட, பழையபடி கிராமத்திற்காவது போயிருக்க முடியும் அல்லது அதற்கு வாய்ப்பில்லா விட்டால், முதல் வேலையாக வேறு எங்காவது பெட்டிப் படுக்கையைக் கட்டிக் கொண்டு போயிருக்க முடியும். ஆனால் அவரோ, பழைய இடத்தில் வேலை கிடைக்காததால், தன் மனைவிக்குத் தொந்தரவு அளித்தவர்களைக் கொலை செய்யலாம் என முடிவெடுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் சமாதானம், ‘நான் காசு பணமில்லாத எளிய மனிதன். வேறென்ன செய்ய முடியும்?’ என்பது. இது ஒரு கதை.
கிளப்பிற்கு ஃப்ராக் அணிந்து வரும் பெண்களைப் பார்த்து, அவரது மனைவி உஷாவிற்கும், அது போல் இருக்கவேண்டுமென ஆசை துளிர்க்கிறது. டைமண்ட் நெக்லெஸுடன் வலிய வரும் கிளப் பெண்கள் போல் நகையணிய, அவரது மனைவியே விரும்பிப் பணக்காரர்களுடன் தொடர்பில் உள்ளாரென்றும் டெபுடி கமிஷ்ணரிடம் சொல்கிறார் மாசிலாமணி. இது மற்றொரு கதை.
ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் தேவையான இடைவெளி எடுத்துக் கொள்வது தான் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சாதுரியம். உஷாவிற்குக் கொடுமை நடந்துவிட்டதாக நம்ப வைத்து, பின் உஷாவே துரோகம் செய்துவிட்டாள் என முடிக்கிறார். ஓரிடத்தில், ‘எனக்கு மட்டும் மனசைப் படிக்கும் வித்தை தெரிந்திருந்தால், என் மகன் மகேஷைக் கூட்டிக்கிட்டு, என் மனைவியை விட்டுட்டு எங்கயாச்சும் போயிருப்பேன்’ எனச் சொல்வார். ஆனால், பீரோவில் தங்க நகைகளும், சுருட்டி வைக்கப்பட்ட 2000 ரூபாய் கட்டுகளையும் பார்த்ததும், தன் மனைவியின் மனதை அறிந்ததும், தற்கொலைக்கு முயற்சி செய்கிறாரே அன்றி, மகனை அழைத்துக் கொண்டு விலகிப் போகும் முடிவை எடுப்பதில்லை. மாசிலாமணி, தான் சொல்ல வருவதை அங்கொன்றும் இங்கொன்றுமெனப் பிய்த்துப் பிய்த்துப் பேசிக் குழப்பி, போலீஸ்காரர்களின் கழிவிரக்கத்தைப் பெற நினைப்பது போல் பார்வையாளர்களையும் முட்டாளாக்குகிறார். கோபக்காரராகக் காட்டப்படும் அசிஸ்டென்ட் கமிஷ்ணர் கூட, “பாவம் எவ்ளோ வலியைச் சுமந்திருக்கான்?” என பச்சாதாபத்துடன் உருகி விடுகிறார். ‘அதிகார தொனியில் பேசும் அசிஸ்டென்ட் கமிஷ்ணரே பாவப்பட்டுவிடுகிறார் என்றால், மாசிலாமணியின் வலி எவ்வளவு பெரியது எனப் புரிஞ்சுக்கோங்க மக்களே!’ என பார்த்திபன் பார்வையாளர்கள் மனதில் அனுதாப விதையை நாசூக்காக விதைக்கிறார். குரலை மட்டுமே வைத்து, அவ்விதையை விதைப்பதுதான் படத்தின் வெற்றி, பார்த்திபனின் வெற்றி.
சமூகத்தில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. ஒரு கலைஞனாய், சமூகக் கண்ணோட்டத்துடன் பார்த்திபன் அவ்விஷயத்தை அணுகாதது மிகப் பெரும் குறை. தான் திருமணம் செய்த பெண் தனது சொத்து, தனது உரிமை மட்டுமே என்று ஆணாதிக்க மனநிலையில், திருமணத்திற்கு வெளியேயான உறவைப் பற்றிய சித்தரிப்பை மிகப் பிற்போக்குத்தனமாக அணுகியுள்ளார். வேறொருவருடன் தன் மனைவி உறவு வைத்துள்ளாரெனத் தெரிய வருவது ஒரு ஆணைச் சுக்குநூறாக்கும் விஷயம் என்றாலும், உஷா பாத்திரத்தின் மீது பார்த்திபன் வைக்கும் குற்றச்சாட்டு மிகவும் தட்டையாக உள்ளது. அந்தப் பெண்ணின் உளவியல் மீதோ, விருப்புவெறுப்புகளையோ பொருட்படுத்தாத ஒரு மூர்க்கத் தொனி மாசிலாமணியிடம் இருக்கும். சட்ட ரீதியான விலகல் மாசிலாமணிக்கு சாத்தியமில்லாத பட்சத்தில், அவரே சொன்னது போல், தனது மகனை அழைத்துக் கொண்டு விலகிப் போயிருக்கலாம். ஆனால், எட்டாயிரத்தைப் பெரிதென்று எண்ணி, ஜாகையை மாற்றிக் கொள்ளாத மாசிலாமணிக்குக் கொலை செய்வது சரியென்று படுகிறது.
சென்ற வருடம் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படத்தின் நாயகனான தினேஷ்க்கும் இதே பிரச்சனை எழும். குமார் எனும் அந்தப் பாத்திரம், மனைவிக்காகத் தான் நேசிக்கும் வேலையை விட்டுவிட்டு, வீடு வந்து சேரும்போது, கைக்குழந்தையோடு அவரது மனைவி வேறொருவருடன் சென்றிருப்பார். அந்தப் படத்தின் கலைத்தன்மை, க்ளைமேக்ஸில் குமார் எடுக்கும் முடிவால் வலுப்படும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு படமும் தனித் தனி கதையம்சம் கொண்டது எனக் கொண்டாலும், எளிய மனிதன் என்ற வரையறைக்குள் வருவது எந்த பாத்திரம் என்பதே கேள்வி. மனைவிக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக மிகவும் நேசித்த வேலையை விட்ட குமாருக்கும், வேலையிடத்தில் மூன்று பேர் மனைவியை நாசம் செய்கிறார்கள் என்று தெரிந்தும் எட்டாயிரம் சம்பளம் வரும் அவ்வேலையை விடாத மாசிலாமணிக்கும் இடையில் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் உள்ளது. தலைநகரம் படத்தில் எப்படி ‘நானும் ரெளடிதான்’ என நாய்சேகரான வடிவேலு போலீஸ் ஜீப்பில் ஏறப் பார்ப்பாரோ, அப்படி, மாசிலாமணியும் தன் நாவன்மையாலும், கதைசொல்லும் திறமையாலும், ‘நானும் எளிய மனிதன்’ என வம்படியாக வீம்பு பிடிக்கிறார். ஒரு கொலையைச் செய்துவிட்டு, அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதைப் பற்றி, அவர் முன்னாடி வேலை செய்த சீனியர் லாயர் வீட்டிலிருந்து தெரிந்து கொள்கிறார். ஆனால், புகாரை வாங்கிக் கொள்ள விரும்பாத போலீஸை, எப்படி வழிக்குக் கொண்டு வந்து எஃப்.ஐ.ஆர்.-ஐப் பதிய வைக்கவேண்டுமென்பதை மட்டும் அங்குக் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது மாசிலாமணிக்கு.
அனைத்தையும் விட நகைமுரண், டெபுடி கமிஷ்ணர் தரும் இரண்டாயிரம் ரூபாயைக் கையிலெடுத்து, “இப்பத்தான் சார் காந்தியின் சிரிப்பில் அர்த்தம் மாறியிருக்கு” என்பார். அதாவது நான்கு கொலைகள் செய்த மாசிலாமணியை விடுதலை செய்ததும், உலகத்திற்கே அஹிம்சை வழி நடப்பதின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் உணர்த்திய காந்தியினுடைய புன்னகைக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார். ‘இதென்னடா காந்திக்கு வந்த சோதனை?’ என திடுக்கிட வைத்தது அவ்வசனம்.
ஆக, மனைவியின் நலனையும் பாதுகாப்பையும் விட, எட்டாயிரம் சம்பளம் தரும் வேலை (பார்த்திபனின் மொழியில் ‘ஜாகை’) முக்கியமெனக் கருதுபவரும், நான்கு கொலைகளைக் குற்றவுணர்வில்லாமல் செய்பவருமான மாசிலாமணி, மிகவும் ஆபத்தான, மனம் பிறழ்ந்த ஒரு குற்றவாளி. மாசிலாமணி வேண்டுமானால், தன் மகன் மகேஷைக் கேடயமாய் முன்னிறுத்தி, தன்னை எளிய மனிதன் என நம்ப வைக்க தலையால் தண்ணீர் குடிக்கலாம். ஆனால், ‘இது தான் தமிழரின் அறம்’ என இந்தியாவின் அடையாளமாய் ஆஸ்கருக்குக் கொண்டு சேர்க்க, ‘ஆஸ்கார் ஃபார் ஒத்த செருப்பு’ என இப்படத்திலுள்ள விபரீதம் புரியாமல், பார்த்திபனின் ஆசைக்குத் தமிழ்த் திரையுலகம் செவிமடுத்தது மிகப் பரிதாபகரமான செயல்.
பார்த்திபனுக்கு முன்பாகவே, “கர்மா” எனும் படத்தை 2015 இல் இயக்கித் தயாரித்து, ஒற்றை ஆளாக நடித்துள்ளார் அரவிந்த் ராமலிங்கம். மேலும், அப்படத்தில் அவர் இரட்டை வேடமுற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படம் நேரடியாக இணையத்தில் வெளியானது. ஜிஷ்னு மேனன் மட்டுமே நடித்த ‘கார்கில்’ எனும் படம் 2018 இல் வெளியானது. சிவானி செந்தில் என்பவர் இயக்கிய அப்படம் ஒரு ‘ரோட் மூவி’யும் கூட. நாயகன் காரில், சென்னையில் இருந்து, பெங்களூருக்குச் செல்வார். அவருக்கு வரும் அலைப்பேசி அழைப்புகளின் குரல்களைக் கொண்டே கதை சுவாரசியமாய்ப் பயணிக்கும். அனைத்து வகையிலும் மிக நல்ல முயற்சி என்றாலும், முதல் ஷாட்டில் சில நொடிகள் மட்டுமே நாயகியைக் காட்டி, ஒரு நபர் மட்டுமே நடித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை, கார்கில் மயிரிழையில் தவற விட்டுவிட்டது.
ஒரு நபர் நடித்த படமென கூகுளில் இருந்து 12 படங்களை எடுத்துப் போட்டு, விளம்பரம் செய்த பார்த்திபன், இந்த இரண்டு தமிழ்ப்படங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது கவனப்பிழையாகவோ அல்லது கவனமான மறைப்பாகவோ இருக்கலாம். எதுவாக இருப்பினும் கண்டனங்களுக்கு உரியவராகிறார் பார்த்திபன். திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக இணையத்தில் வெளியானதால் மட்டும் கர்மா படத்தைப் புறக்கணித்து விட முடியாது. சினிமா மீது காதல் கொண்ட முகம் தெரியாத படைப்பாளிகளின் முயற்சிகளைக் குறிப்பிட்டுத் தட்டிக் கொடுப்பது தான் மூத்த கலைஞருக்கு அழகு. கோயபெல்ஸின் பாணியில் செய்யப்படும் பார்த்திபனின் தொடர் விளம்பரம், அரவிந்த் ராமலிங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைப் பறித்துவிட்டது. எளிய மனிதன் கொலைகள் பல புரிந்தாலும், அது குற்றமில்லை என நிறுவ முயற்சி செய்யும் பார்த்திபன், தனது பரந்துபட்ட புகழ் வெளிச்சத்தாலும் சாமர்த்தியத்தாலும், ஒரு படைப்பாளியின் எளிமையான முயற்சியை இருட்டடிப்பு (கொலை) செய்து தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்வதை என்னவென்று நிறுவுவாரோ?
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
– தினேஷ் ராம்
நன்றி: சினிமா பத்திரிகையாளர் சங்கம் – தீபாவளி மலர் 2019